ஆடற்கரணங்களும் அரசன் முகமது ஷாவும்

ஆடற்கரணங்களும் அரசன் முகமது ஷாவும்

 

தலைப்பைக் கண்டவுடன் ஏதோ அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போலத் தோன்றுகிறதா? சம்பந்தமில்லாதது சபைக்கு வருவானேன்?  சம்பந்தம் இருக்கிறது. அதற்கு முன் கரணங்கள் என்றால் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?

கரணம்

            கூத்துக் கலையின் இலக்கணமாகப் பரதர் என்பவர் இயற்றிய நூல் நாட்டியசாஸ்திரம். இந்த நூலின் நான்காம் அத்தியாயத்திற்கு தாண்டவ இலக்கணம் என்று பெயர். இந்த அத்தியாயத்தில் கரணம் எனப்படும் ஆடல்நிலையைப் பற்றி விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஹஸ்தபாதஸமாயோக: ந்ருத்தஸ்ய கரணம் பவேத் என்பது கரணம் என்பதற்கான விளக்கம். கையும் காலும் ஒத்தசையும் நிலைக்குக் கரணம் என்று பெயர்  என்பது பொருள். இதன் விளக்கவுரையான அபினவபாரதி இடை, தொடை ஆகியவையும் ஒத்தசையும் நிலை என்று குறிப்பிடுகிறது. தலபுஷ்டபுடம், வர்த்திதம், வலிதோருகம் முதலிய நூற்றெட்டு கரணங்கள் இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன. இதில் வியத்தகு செய்தி என்னவெனில் இந்த கரணங்கள் ஒரே தொகுப்பாகத் தமிழகத்தில் மட்டுமே காணப்படுகின்றன என்பதுதான். தஞ்சை பெரியகோயிலின் முதற்தளச் சுற்றில் எண்பதற்கும் மேற்பட்ட கரணங்கள் செதுக்கப்பெற்றிருக்கின்றன. சிதம்பரத்தில் நூற்றெட்டு கரணங்களும் அவற்றிற்குண்டான சுலோகங்களோடு செதுக்கப்பெற்றிருக்கின்றன. இன்னும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில், விருத்தாசலம், திருவதிகை, திருவண்ணாமலை போன்ற பல இடங்களிலும் கரணச் சிற்பங்கள் உண்டு. பல்லவர் காலம் முதல் சிற்சில கரணங்கள் காணப்பெற்றாலும் இராசராசன் காலம் துவங்கியே வரிசையாகக் கரணங்கள் தொகுப்பாகக் காணப்படுகின்றன. இந்தக் கரணங்களின் மீட்டுருவாக்கத்தை ஆய்வாகப் புரிந்தவர் முனைவர். பத்மா சுப்பிரமணியம் அவர்கள். அவர்கள் மீட்டுருவாக்கியதில் சிற்சில கருத்து வேறுபாடுகள் எனக்குண்டு. அபினவ பாரதியின் விளக்கத்திற்கு சிற்சில கரண சிற்பங்கள் மாறுபாடாக இருப்பதால் தென்னகம் சார்ந்த மற்றொரு உரை இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. இதைப் பற்றிப் பிறிதொரு கட்டுரையிற் காண்போம்.

கரணத்தைப் பற்றிக் கூறும் நூல்கள்

            நாட்டிய சாஸ்திரமே கரணங்களைப் பற்றிக் கூறும் முதனூலாகும். இதன் பின்பு பல நூல்கள் கிடையாதொழிந்தன. தற்போது கிடைக்கும் நூல்களுள் சங்கீத ரத்னாகரம், சங்கீத ராஜம், சங்கீததாமோதரம் போன்ற நூல்களில் கரணங்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இந்த வரிசையில் சேரத்தக்க நூலைத்தான் இசுலாமிய மன்னன் யாத்திருக்கிறான் என்பதுதான் அந்த சம்பந்தம்.

சங்கீதமாலிகை

            இந்த நூலும் நிருத்தத்திற்கு அதாவது ஆடலுக்குத் தேவையான பகுதிகளை – நிருத்த அத்தியாயத்தைக் கொண்டுள்ளது. மற்றைய பகுதிகள் இருந்து கிடையாதழிந்தனவா அல்லது நூலின் அளவே இவ்வளவுதானா என்பதை அறியக்கூடவில்லை. இந்த நூல் நிருத்தத்திற்குண்டான எழிற்கைகளையும் தொழிற்கைகளையும் பாதங்களையும் சாரிகளையும் விளக்கிப் பின்னர் கரணங்களைப் பற்றி விளக்குகிறது. இதனை இயற்றியவர் முகமது ஷா என்பவராவார்.

அரசன் முகமது ஷா

            இந்த நூலின் இறுதியில் பெரோஸ் கானின் வழித்தோன்றலும் விரகமடைந்த பெண்களின் விரகத்தைப் போக்குபவனுமான தத்தார் ஷாவின் மகனுமான முகமது ஷா என்பவனால் இயற்றப்பட்டது என்னும் குறிப்பு காணப்படுகிறது. இத்தகைய அரசனைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. தத்தார் கான் என்றழைக்கப்பட்ட முகமது ஷா ஒருவன் இசுலாமிய வேந்தர் வரிசையில் காணப்படுகிறான். பெரோஸ்கானின் வழித்தோன்றல்களில் பல முகமதுஷாக்கள் உண்டு. இவர்களில் எவர் முகமது ஷா என்பதைத் தீர்மானிக்க இயலவில்லை.

இந்த நூலில் சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரத்தின் தழுவல்கள் பலவிதங்களில் காணப்படுகின்றன. சங்கீத ரத்னாகரத்தின் காலம் 13-ஆம் நூற்றாண்டாகும். இந்த நூலின் மொழிநடை ஆகியவற்றைக் கணக்கிட்டு முகமது ஷா 16 ஆம் நூற்றாண்டு அல்லது அதன் பின்னவனாதல் கூடும் என்று கணக்கடவியல்கிறது.

நூலின் போக்கு

            நூல் சிவபெருமானுக்கான வணக்கத்துடன் துவங்குகிறது என்பது மிகவும் ஆச்சர்யமான செய்தி.

            ப்ரணம்ய பரமானந்தம் சங்கரம் லோகசங்கரம்

            வதிஷ்யாமி ஸமாஸேன நர்த்தனம் தாபகர்த்தனம்

என்பது இதன் காப்புச் செய்யுள். உலகுகெல்லாம் நன்மைபுரிபவரும் பரமானந்த வடிவானவருமான சங்கரரை வணங்கி தாபங்களைப் போக்கும் நர்த்தனத்தைச் சுருங்கச் சொல்கிறேன் என்பது இதன் பொருள். ஆடல்வல்லானைத் துதித்தல் மரபென்றாலும் இசுலாமியரும் இந்த மரபை பின்பற்றியிருப்பது நோக்கற்பாலதாகும். இதன்பிறகு ஆடலரங்கு, அவை, அவைத்தலைவன், ஆடும் பெண், பெண் நர்த்தகியின் குணங்கள், ஆண் நர்த்தகனின் குணங்கள், ஆடல் வகைகள், அங்கங்கள், உபாங்கங்கள், பலவகைக் கைகள், ஆடற்கைகள், இடைப்பேதங்கள், பாதபேதங்கள், சாரிகள், ஸ்தானகங்கள், கரணங்கள், நிருத்திய இலக்கணங்கள் ஆகியவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.

            இந்த நூலின் சிறப்பென்று பார்த்தால் சாரிகளைப் பொறுத்தவரை ஆகாச சாரி, பூமி சாரி என்று இருவகைச் சாரிகளையே பரதரின் நாட்டிய சாஸ்திரம் சுட்டுகிறது. ஆனால் இந்த நூலில் தேசிச் சாரிகள் பல குறிப்பிடப்பெற்றுள்ளன. அதைப்போலவே நாற்பத்துமூன்றாவது கரணமாக லோஹரீ என்னும் கரணத்தையும் ஸ்தானகங்களிலும் பல தேசி ஸ்தானகங்களையும் குறிப்பிடுகிறது. இவையனைத்தும் சங்கீத ரத்னாகரத்தின் தழுவல்களாக இருக்கக் கூடும். ஆயினும் இதை இயற்றியவரின் புதிய எண்ணங்களும் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டாக சுகதுண்டம் என்னும் கைக்கு இலக்கணம் வகுத்த பரதரும் சாரங்கதேவரும் நடுவிரல் மோதிரவிரல் இரண்டையும் மடக்கி கிளியின் அலகைப் போல இருக்கவேண்டும் என்று கூறும்போது முகமது ஷா நடுவிரல் மட்டும் மடக்கினால் போதும் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சாரிகளில்  தேசிச் சாரிகளையும் சேர்த்து சாரங்கதேவர் எண்பத்தியாறு சாரிகளைக் குறிப்பிடும் போது முகமது ஷா 67 சாரிகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார். பல தேசிச் சாரிகளை ஒதுக்கியிருக்கிறார். ஸ்தானகங்களிலும் சாரங்கதேவர் 51 ஸ்தானகங்களைக் கூறாநிற்க முகமது ஷா 19 ஸ்தானகங்களையே ஒப்புக்கொண்டுள்ளார்.

            மேலும் கரணங்களைப் பொறுத்தவரை 108 கரணங்கள் என்று எல்லா நூல்களும் கூறுகின்றன. முகமது ஷா வெறும் 43 கரணங்களுக்கு மட்டுமே இலக்கணம் வகுத்துள்ளார். அவற்றிலும் லோஹரீ என்னும் கரணம் புதியது. மற்றபடி கரண இலக்கணங்களில் பரத இலக்கணத்திலிருந்து பெரிய மாறுபாடுகள் இல்லை

            இதன் இறுதியிலுள்ள பகுதி மிகவும் ஆய்வுக்குரியது. பலவகை ஆடல்களைக் குறிக்கும் முகமது ஷா சிந்து கீதம் என்னும் வகை ஆடலைக் குறிப்பிடுகிறார். இந்த வகை ஆடலில் ஏதோவொரு ஸமதாளத்தில் ஆனந்தத்தோடு வேகமான தமிழ்ப்பாடலுக்கு ஆடும் ஆடல் என்று குறிப்பிடுகிறார்.

            உத்க்ரஹஸ்சாந்தரம் போகே த்ருவ-த்ராவிட-பாஷயா

            ஸமதாளேன கேனாபி தத் கீதம் சிந்து ஸம்ஜ்ஞகம்.

என்பது சங்கீத மாலிகையின் வரிகள். தமிழாடலுக்கான இலக்கணம் இங்கே வடமொழியில் கிடைக்கின்றது. இதனைப் போல கோலசிந்து என்னும் வகை ஆடலை குறிப்பிடும் அவர் ஒன்றரை கையளவுள்ள மண்பானையைக் கொண்டு ஆடப்பெறும் ஆடல் என்று குறிப்பிடுகிறார். தலையில் கரகம் வைத்து ஆடும் ஆடலை வங்காள சிந்து ஆடல் என்று குறிப்பிடுகிறார். இத்தகைய ஆடல் வங்காளத்தில் இன்றும் காணப்படுகிறது. பலர் கூடி மண்டலமாக ஆடும் ஆடல் கல்ப நிருத்தியம் என்கிறார். தமிழ்ப் பாடலுக்கு ஆடும் ஆடலைச் சிந்து என்று குறிப்பிடும் செய்தி மிகவும் வியக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

            எப்படியாயினும் இசுலாமியர் ஒருவர் சங்கீத மாலிகை என்னும் நூலை வடமொழியில் இயற்றி அதில் கரணங்களை வரையறுத்திருப்பது வியக்கத்தக்கச் செய்தியாகும். இதனை விட முக்கியமான தகவல் பதின்மூன்றாம் நூற்றாண்டோடு கரணங்கள் நடைமுறையில் பயனின்றி அழிந்தன என்னும் கூற்றிற்கு மறுப்பாக பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகும் கூட கரணங்களுக்கான இலக்கணநூலாக இந்நூல் திகழ்கிறது என்பதுதான்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *