கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்

கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்

அர்த்தம் என்றால் வ்ருத்தி – தொழில் என்று பொருள். ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான தொழிற்கருவிகளைப் பற்றிக் கூறுவதால் அர்த்த சாஸ்த்ரம் எனப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானது பூமி. (मनुष्यवती पृथ्वी) மனுஷ்யவதி ப்ருத்வீ என்று மனிதர்களுக்கு மிக முக்கியமான கருவி பூமியே என்று கௌடல்யரே குறிப்பிடுகிறார். அர்த்த சாஸ்த்ரத்தின் துவக்கத்தில் பூமியை அடைவதற்கும் அதனைக் காப்பதற்கும் இதுவரை எழுதப் பெற்ற அனைத்து அர்த்தசாஸ்த்ரங்களையும் தொகுத்து இந்த ஒரு அர்த்தசாஸ்த்ரத்தை எழுதுகிறேன் என்றும் குறிப்பிடுகிறார். (भूम्याः लाभे पालने च यावन्त्यर्थशास्त्राणि पूर्वाचार्यैः प्रस्थापितानि प्रायशस्तानि संहृत्यैकमिदमर्थशास्त्रं कृतम् – अर्थशास्त्रम् 1.1). ஆகவேஆகவே கௌடல்யருக்கு முற்காலம் தொட்டே பல அர்த்தசாஸ்த்ர நூல்கள் வழங்கி வந்ததை அறியலாம்.

கௌடல்யரும் தன்னுடைய நூலில் தனக்கு முன்பிருந்த பதினோரு ஆசிரியர்களைக் குறிப்பிடுகிறார்.

1.மனு (இதனால் மனுஸ்ம்ருதியைப் போன்று அர்த்தசாஸ்த்ரமும் எழுதப் பட்டது விளங்குகிறது.)

2.சுக்ராசார்யர்

3.ப்ருஹஸ்பதி

4.பிசுனர்

5.பாரத்வாஜர்

6.விசாலாக்ஷர்

7.கௌணபதந்தர்

8.பாஹுதந்தீபுத்ரர்

9.வாதவ்யாதி

10.பராசரர்

11.ஆம்பீயர்

என்போரே அவர்கள்.

இவர்களுள் பாரத்வாஜர், கௌணபதந்தர், பாஹுதந்தீபுத்ரர், வாதவ்யாதி என்பவர்கள் முறையே த்ரோணர், பீஷ்மர், இந்த்ரன் மற்றும் உத்தவர் என்பது அர்த்தசாஸ்த்ரத்துக்கு உரையெழுதிய கணபதி சாஸ்த்ரியின் கருத்து. ஆயினும் இத்தகைய பட்டப் பெயர்கள் அருவறுக்கத்தக்க பெயர்களாக இருப்பதால் (கௌணபதந்தர் – நாறும் பற்களை உடையவர், வாதவ்யாதி – வாயுநோய் உடையவர்) இவர்கள் கௌடல்யரின் நண்பராக இருக்கக் கூடும் என்றும் அதனாலேயே கிண்டலான பட்டப் பெயர்களைத் தந்துள்ளார் என்றும் ராதாகிருஷ்ண சாஸ்த்ரியாரின் கருத்தும் நோக்கத் தக்கது. ஏனெனில் ஐந்தாம் அதிகரணத்தில் அரசன் இறக்கும் தருவாயில் செய்ய வேண்டிய செயல்களைக் கூறும்போது பாரத்வாஜரின் கருத்தாக அமைச்சன் அரசனின் வழித்தோன்றல்களைக் கொன்றுவிட்டு தானே அரசைக் கொள்ளலாம்(அர்த்தசாஸ்த்ரம் 5.6) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. த்ரோணரின் மஹாபாரத உபதேசங்களை நோக்குங்கால் இத்தகைய கருத்து த்ரோணரின் கருத்தாக அமைய வாய்ப்பில்லை என்பதை அறியலாம்.

அர்த்தசாஸ்த்ரத்தின் காலத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உண்டு. ஆதலின் அவற்றின் விவாதம் தனிக் கட்டுரையாகும்.

இதனை எழுதிய கௌடல்யரின் பெயர் விளக்கங்களும் உண்டு. குடில கோத்ரத்தில் பிறந்த்தால் கௌடல்யர் என்றும் (கௌடில்யர் என்பது இலக்கணரீதியாகத் தவறான பயன்பாடு) சணகபுரியில் பிறந்ததனால் சாணக்யர் என்றும் பெயர்கொண்ட இவரின் இயற்பெயர் விஷ்ணுகுப்தர் (விஷ்ணுவினால் காக்கப் பட்டவர்) என்பதாகும்.

அர்த்த சாஸ்த்ரத்தில் 15 அதிகரணங்கள் உள்ளன. முதல் அதிகரணத்தின் பெயர் வினயாதிகரணம் என்பதாகும். அரசன் பெற வேண்டிய பயிற்சிகளைக் குறித்தும் பிறரை நியமிக்க வேண்டிய முறைகளைக் குறித்தும் இது குறிப்பிடுகிறது. அந்த அதிகரணத்தில் பதினோராம் அத்யாயம் – ஏழாவது ப்ரகரணம் ஒற்றாடலைக் குறிப்பிடுகிறது. ஒற்றருக்கு வடமொழியில் கூடபுருஷர்(गूढपुरुषः) என்பது பெயர். மறைவாகச் செய்யவேண்டிய செயல்களையுடையவர் என்பது பொருள். இவர்களையேக் கண்ணாகக் கொள்ளவேண்டும் (चारेण चक्षुः) என இதற்கு முந்தைய அத்யாயங்களில் குறிப்பிடுகிறார். வடமொழிக் காவ்யங்களிலும் ஒற்றர்களைக் கண்ணாகக் கொண்டவன்(கிராதார்ஜுனீயம்) என்றும் அறநூல்களைக் கண்ணாகக் கொண்டவன் (நைஷதம்) என்றும் அரசர்களை வர்ணிப்பதுண்டு.

இதனையே வள்ளுவர்

ஒற்றும் உரைசார்ந்த நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண். (ஒற்றாடல் 1)

என்கிறார்.

பத்தாம் அத்யாயத்தில் அமைச்சர்களை பரீக்ஷை செய்யும் முறைகளைப் பற்றி விவரித்து பதினோராம் அத்யாயத்தில் ஒற்றர்களை நியமிக்கும் வழிவகைகளை விளக்குகிறார் கௌடல்யர். இந்த அத்யாயத்தின் முதல் சொற்றொடர்

उपधाभिः शुद्धामात्यवर्गो गूढपुरुषानुत्पादयेत् कापटिकोदास्थितगृहपतिकवैदेहकव्यञ्जनान् सत्रितीक्ष्णरसदभिक्षुक्यश्च।

உபதாபி: சுத்தாமாத்யவர்கோ கூடபுருஷானுத்பாதயேத் காபடிக – உதாஸ்தித – க்ருஹபதிக – வைதேஹக வ்யஞ்ஜனான் ஸத்ரி-தீக்ஷ்ண-ரஸத-பிக்ஷுக்யஸ்ச

என்றுள்ளது. பரிக்ஷைகளால் தூய அமைச்சர்களைக் கண்டறிந்தபின்னர் காபடிக – உதாஸ்தித – க்ருஹபதிக – வைதேஹகவ்யஞ்ஜனர்களையும் ஸத்ரி-தீக்ஷ்ண-ரஸத-பிக்ஷுகிகளையும் கூடபுருஷர்களாக உருவாக்க வேண்டும் என்பது இதன் பொருள். இந்தச் சொற்றொடரில் முதலில் கூறப்பட்ட ஐவரும் நிலையாக ஒரிடத்தில் இருந்து ஒற்றறிபவர்கள். பின்னர் கூறப்பட்ட நால்வரும் திரிந்து ஒற்றறிபவர்கள். இவர்களில் ஒவ்வொருவரின் இலக்கணங்கள் பின்வருமாறு

  1. காபடிகன் (कापटिकः)

பிறரின் மர்மத்தை அறிந்தவனும் நல்ல அறிவு முதிர்வு உடையவனுமான மாணவனே காபடிகன் ஆவான். (परमर्मज्ञः प्रगल्भः छात्रः कापटिकः) கபடமாக பிறரின் மர்மத்தை அறிவதால் இவன் காபடிகன் எனப்படுகிறான்.

இக்காலத்துத் தேசியமாணவர் படை போல மாணவர்களிலும் சிலரை ஒற்றர்களாகப் பயன்படுத்தியது புலனாகிறது. அக்காலத்தில் மாணவர்களுக்கு பிக்ஷையைக் கொண்டே உணவு என்பதனால் ஒவ்வொரு வீடாகச் செல்லும் காபடிகனுக்கு வீடுகளில் நடக்கும் செய்திகளை அறிவது எளிது. ஆகவே இத்தகையதோர் ஒற்றன் மிகவும் முக்கியமானவனாகக் கருதப் படுகிறான்.

இவனை மந்த்ரி அழைத்து பொருளாலும் ஸன்மானம் முதலானவற்றாலும் மர்யாதை செய்து என்னையும் அரசனையும் முன்னிறுத்தி எவரிடம் என்ன மாறுபாடு கண்டாலும் நேரவிரயமின்றி அறிவிக்க வேண்டும் என்று கூறவேண்டும் என்று அர்த்தசாஸ்த்ரம் இவனிடம் கூறவேண்டிய ஆணையைத் தெரிவிக்கிறது.

ஏனையோருக்கு இப்படியோர் செய்கை சொல்லப் படவில்லை. இதன் பின்பு சொல்லப் படும் திரிந்து ஒற்றறிபவர்கள் நிலையாக இருப்போரிடம் செய்தியை அறிவித்தால் அவர்களே அரசனிடமோ அல்லது மந்த்ரியிடமோ சேர்ப்பர். ஆயின் காபடிகன் அரசனிடமும் மந்த்ரியினிடமும் நேராகச் சொல்லும் முறையை இந்தச் சொற்றொடர் தெரிவிக்கிறது.

  1. உதாஸ்திதன் (उदास्थितः)

துறவு மேற்கொண்டு அதிலிருந்து நழுவியவன், அறிவுமுதிர்ச்சியும் தூய்மையும் உடையவன் உதாஸ்திதன் எனப் படுவான். (प्रव्रज्याप्रत्यवसितः प्रज्ञाशौचयुक्तः उदास्थितः). அவன் வார்த்தை எனப்படும் உழவு, கால்நடை பராமரிப்பு, வாணிபம் நடைபெறும் இடத்தில் ஓர் நிலயத்தை உருவாக்கி அதிகமான பணம் மற்றும் சீடர்களோடு அந்தத் தொழில்களை மேற்கொள்வான். அதில் வரும் லாபத்தைக் கொண்டு எல்லா துறவிகளுக்கும் உணவு, உடை, உறையுள் முதலியவை அளித்து அவருக்குள் வேலை செய்யும் எண்ணம் கொண்டோரிடம் இதே வேஷத்தோடு அரசகார்யம் பாருங்கள். அறுவடைக் காலத்தில் இங்கு வரவேண்டும். (அப்போது இதற்கான கூலி தரப் படும் என்று கூறவேண்டும்). அதற்கு ஒத்துக் கொள்ளும் துறவிகள் தத்தம் குழுக்களிடம் சொல்லி ஒற்று வேலை மேற்கொள்ள வேண்டும்.

3.க்ருஹபதிகவ்யஞ்ஜனன் (गृहपतिकव्यञ्जनः)

உழவுத் தொழிலை மேற்கொண்டு அதில் நஷ்டமடைந்தவன், அறிவு முதிர்ச்சியும் தூய்மையும் உடையவன் க்ருஹபதிகவ்யஞ்ஜனன் எனப்படுவான். (कर्षकः वृत्तिक्षीणः प्रज्ञाशौचयुक्तः गृहपतिकव्यञ्जनः) அவன் உழவுத் தொழில் நடைபெறும் ப்ரதேசத்தில் முன்பு உதாஸ்திதனுக்குச் சொன்னது போல செயல்களை மேற்கொள்வான். இல்லறத்தானைப் போல வேடம் பூண்டவன் என்பதனால் க்ருஹபதிக வ்யஞ்ஜனன் எனப்படுகிறான்.

  1. வைதேஹகவ்யஞ்ஜனன்

வாணிபத் தொழிலை மேற்கொண்டு அதில் நஷ்டமடைந்தவன், அறிவு முதிர்ச்சியும் தூய்மையும் உடையவன் வைதேஹகவ்யஞ்ஜனன் எனப்படுவான். (वाणिजको वृत्तिक्षीणः प्रज्ञाशौचयुक्तः वैदेहकव्यञ्जनः) அவனும் வாணிபத்தொழில் நடைபெறும் ப்ரதேசத்தில் முன்பு உதாஸ்திதனுக்குச் சொன்னது போல செயல்களை மேற்கொள்வான். வாணிபனைப் போல வேடம் பூண்டவன் என்பதனால் வைதேஹக வ்யஞ்ஜனன் எனப்படுகிறான்.

5.தாபஸவ்யஞ்ஜனன்

மொட்டையடித்தவன் அல்லது ஜடைகளை உடைய துறவி வேஷத்திலிருப்பவன் ஏதேனும் பணி செய்ய முனைபவன் தாபஸ வ்யஞ்ஜனன் எனப்படுவான். (मुण्डो जटिलो वा वृत्तिकामः तापसव्यञ्जनः). இதனையே வள்ளுவர்

துறந்தார் படிவத்தாராகி இறந்தாராய்ந்து என்று குறிப்பிடுகிறார்.

மொட்டையடித்தவன் என்பதனால் பௌத்த ஜைன துறவிகளையும் கொள்ளலாம்.

இவன் நகரத்தின் அருகில் மொட்டையடித்த அல்லது ஜடைகளோடு கூடிய பல சீடர்களோடு ஆச்ரமத்தை அமைத்துக் கொண்டு எல்லோர் முன்பும் மாதம் ஒரு முறை அல்லது இருமாதத்திற்கு ஒரு முறை காய்கறி அல்லது ஒரு பிடி தான்யத்தை (யவம்) உண்பான். மறைவில் தன் விருப்பப் படி உண்ணலாம். முன்பு சொன்ன வைதேஹக வ்யஞ்ஜனர்கள் இவருடைய அமானுஷ்ய ஆற்றலைக் கொண்டே நாங்கள் பலவற்றைப் பெற்றோம் என்று நகரத்தில் வதந்தியைப் பரப்ப வேண்டும். துறவிவேடத்திலிருப்பவரின் சிஷ்யர்களும் நடக்கப் போவதை அறிந்தவர் இவர் என்றும் ஸித்த புருஷர் என்றும் கூறவேண்டும். அவரும் வருபவர்களின் உருவத்தைக் கொண்டு (ஸாமுத்ரிகா லக்ஷணப்படி) அல்லது சீடர்களின் குறிப்பால் வருங்கால செயல்களைக் குறிப்பவர் போல சிறு லாபம், நெருப்பு பயம், திருடர் பயம், தீயவர்களின் மரணம், அரசரின் ஸன்மானம், வெளிநாட்டுச் செய்திகள், இன்றோ நாளையோ இது நடக்கும் என்று அல்லது அரசன் இதைச் செய்வான் என்று கூறவேண்டும். இரவோடு இரவாக அவருடைய சீடர்களை அதைச் செய்து முடிப்பார்கள். வலிமை, அறிவு பேச்சுத் திறமை முதலானவற்றை உடையவர்களை அரசனால் கௌரவிக்கப் படுவாய் என்றோ மந்த்ரியோடு தௌடர்பு உண்டாகும் என்றோ கூறவேண்டும். இவர்களுடைய குறிப்பால் மந்த்ரியும் அத்தகைய பெருமை உடையவர்களுக்கு அரசாங்கப் பணி அல்லது ஸன்மானம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். துறவிவேடம் அணிந்தவர்கள் காரணத்தோடு அரசன் மீது சினந்த மக்களை செல்வம், ஸன்மானம் முதலானவற்றால் ஸமாதானம் செய்ய வேண்டும். காரணமின்றி எவரேனும் சினந்தாலோ அல்லது ராஜத்ரோஹிகளையோ மறைவான தண்டனையால் கொல்லவேண்டும்.

இவ்வாறு அர்த்தசாஸ்த்ரம் ஐந்து விதமான நிலையொற்றர்களை (ஸம்ஸ்தா) விளக்குகிறது. இறுதியாக காரிகை மூலம் அரசனால் போற்றப் பட்ட ஐந்து விதமான நிலையொற்றர்களும் அரசனை அடுத்து வாழ்பவர்களின் தூய்மையை அறிந்து அரசனிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறுகிறார் கௌடல்யர்.

கௌடல்யர் இப்படி நிலையொற்றர்களை வரையறுத்தபின் திரிந்து ஒற்றறியும் ஒற்றர்களை விளக்குகிறார்.

ஸத்ரி

அரசனால் அவசியம் ஆதரிக்கப் படவேண்டியவர்களில் (உறவினர், பரிதாபத்துக்குரியவர்கள், ஏதிலிகள் முதலியோர்) ஸாமுத்ரிகா லக்ஷணம், அங்கவித்யை (அங்கங்களைத் தொடுவதன் மூலம் குணங்களை அறிதல்), வசீகரணவித்யை, இந்த்ரஜாலம், ப்ரஹ்மசாரி முதலான ஆச்ரம தர்மங்கள், சகுன சாஸ்த்ரம், அந்தர சக்ரம் (திசைகளின் இயற்கை மாறுபாட்டை அறிவது அல்லது பறவைகளின் ஸங்கேதங்களை அறிவது), ஸம்ஸர்கவித்யை (காம சாஸ்த்ரம் அல்லது மக்களோடு பழகும் விதம்) போன்றவற்றைக் கற்றவர்களை ஸத்ரிகளாக நியமிக்க வேண்டும்.

ஸத்ரி என்னும் ஒற்றன் திரியும் ஒற்றர்களில் முதலானவன். அரசனுக்கு நம்பிக்கைக்குத் தகுந்தவன். அரசனது தினசரி அலுவல்களை ராஜப்ரணிதி என்னும் அத்யாயத்தில் குறிப்பிடும் கௌடல்யர் காலையில் ஸந்தி உபாஸனையை முடித்தவுடன் முதலில் ஒற்றர்களைக் காணவேண்டும் எனக் குறிப்பிடுகிறார். மற்றைய ஒற்றர்களைக் காட்டிலும் அரசனோடு நெருங்கிய ஸத்ரிகளே அங்கு ஒற்றர்கள் என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றனர் எனக் கொள்ளலாம். மேலும் திரியும் ஒற்றர்களில் பலவிதமான வேடங்களை அணிந்து ஒற்றறிவது ஸத்ரியேயாகும். ஆகவேதான் இத்தனை விதமான கலைகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். முக்கியமாக ஆச்ரமதர்மங்களை அறிந்து ப்ரஹ்மசாரி அல்லது துறவியின் வேடமணிந்து ஒற்றறிவது பற்றி வடமொழிக் காவியங்கள் குறிப்பிடுகின்றன(கிராதார்ஜுனீயம்). ஆகவே பிற ஒற்றர்களைக் காட்டிலும் முக்கியமானவன் ஸத்ரியே எனலாம்.

தீக்ஷ்ணன்

நகர்ப்புறங்களில் சூரர்களாகவும், தன்னைப் பற்றி எண்ணாமலும், பணத்திற்காக யானையோடும் பாம்போடும் (அல்லது புலியோடும்) மோதுபவர்கள் தீக்ஷ்ணர்கள் எனப் படுவர். தீக்ஷ்ணன் என்றால் (வலிமையில்) கூர்மையானவன் என்று பொருள். இத்தகைய தீக்ஷ்ணர்களைப் பயன்படுத்த வேண்டிய முறை பற்றி ஐந்தாம் அதிகரணத்தில் கௌடல்யர் விளக்குகிறார். அரசருக்கு த்ரோஹம் செய்பவர்களை மறைவில் தண்டிக்க இத்தகைய தீக்ஷ்ணர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.

ரஸதன்

உறவினர்களிடத்தும் அன்பற்றவன், க்ரூரமானவன், சோம்பல்தனம் உடையவன் ரஸதன் எனப்படுவான். ரஸதன் என்றால் விஷத்தைக் கொடுப்பவன் என்று பொருள். பெரும்பாலும் இவர்கள் சமையற்கட்டில் சமையற்காரனைப் போல் வேடமிட்டு வேலை செய்வர். மறைமுகமாக தண்டிக்க வேண்டியவர்களை விஷம் கொடுத்துக் கொல்வது முதலானது இவர்களது வேலை.

பிக்ஷுகீ

தொழில் செய்ய ஆசைப் படும் ஏழையும், விதவையும், மனப் பக்குவத்தையும் பெற்ற அந்தணப் பெண் துறவி பிக்ஷுகி எனப் படுவாள். இவள் அந்தப்புரத்தில் மரியாதைக்கு உரியவளாய் முக்கிய ராஜப்ரதானிகளின் இல்லங்களுக்கு ஒற்றறியச் செல்லுவாள். மொட்டையடித்தவளையும்(பௌத்த, ஜைன பெண் துறவிகள்) வ்ருஷலியையும் (அந்தணரற்ற பெண் துறவிகள்) கூட நியமிக்கலாம். வைதிக மதத்திலும் கூட திருமணத்திற்கு முன்பு அல்லது கைம்மைக்குப் பின் பெண்களுக்கும் துறவறம் உண்டு என பூஜ்யஸ்ரீ வித்யாரண்யஸ்வாமிகள் தமது ஜீவன் முக்தி விவேகத்தில் ஸ்ம்ருதிகளை எடுத்துக் காட்டி நிறுவியுள்ளார்.. அத்தகைய பெண் துறவிகளில் தொழில் செய்ய முனைவோரை அரசன் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பெண் துறவிகள் அரசியோடு இருந்து அவளை நல்வழிப் படுத்துவர். மேலும் மந்த்ரி முதலானவர்களை உளவறிவர். அந்தப்புரத்தில் மிகுந்த மர்யாதையுடன் திகழ்வதால் இவர்களை எளிதில் ஐயுறார் என்பதனால் இத்தகைய கோலமுடையோர்கள் உளவறிய மிகத் தகுந்தவர்களாகின்றனர்.

இவ்வாறு திரியும் ஒற்றர்கள் விளக்கப் படுகின்றனர். அவர்களை அரசன் தன் நாட்டில் முக்கிய மந்த்ரி, புரோஹிதர், ஸேனாபதி, இளவரசன், முக்கிய வாயிற்காப்போன், அந்தப்புர காவலதிகாரி, ப்ரசாஸ்தா (கார்யதர்சி), ஸமாஹர்த்தா (வருவாய் அதிகாரி), ஸன்னிதாதா (கருவூல அதிகாரி), ப்ரதேஷ்டா (சட்ட அதிகாரி), நாயகன் (படையின் அதிகாரி), நகர வழக்குகளை ஆயும் அதிகாரி, தொழில் அதிகாரி, மந்த்ரி சபைத் தலைவன், படைத்தலைவன், கோட்டை அதிகாரி, எல்லை அதிகாரி, கோட்டையை அடுத்துள்ள காட்டின் தலைவன் என்னும் பதினெட்டு பேர்களை ஒற்றறிய மேல் சொன்ன திரியும் ஒற்றர்களை பலவிதமான தேசத்தையும் மொழியையும் பழக்கங்களையும் உடையவராய் வேடமிட்டுக் கொள்ளச் செய்து நியமிக்க வேண்டும்.

அவர்கள் வெளியில் செல்லும் போது உளவறிய தீக்ஷ்ணர்கள் குடை, கெண்டி, விசிறி, பாதுகை முதலியவற்றைக் கொண்டு செல்லும் வேடமிட்டு பின்தொடர்ந்து அறிய வேண்டும். அவற்றை ஸத்ரிகள் நிலையொற்றர்களிடம் தெரிவிப்பர்,

ஸூதன் (சோறு சமைப்பவன்), அராளிகன் (மற்றைய தின்பண்டங்களைச் சமைப்பவன்), குளிப்பாட்டுபவன், கால் பிடிப்பவன், தரைவிரிப்பு விரிப்பவன், சிகை திருத்துபவன், அலங்கரிப்பவன், நீர்கொடுப்பவன் முதலான வேடங்களோடு ரஸதர்கள் வீட்டினுள்ளில் ஒற்ற்றிவர். கூனர், குள்ளர், வேடர், ஊமை, செவிடர், ஜடம் போன்றவர், குருடர் போன்ற வேடங்களிட்டவர்கள் அல்லது பாடுபவர், இசைக்கருவிகள் இசைப்பவர், சொற்பொழிவாற்றுபவர், குசீலவர்களும் (பெண்வேடமிட்டு ஆடுபவர்கள் அல்லது பாடிக்கொண்டே ஆடுபவர்கள்) பெண்களும் வீட்டினுள்ளில் ஒற்றறிவர். இவற்றை பிக்ஷுகிகள் நிலையொற்றரிடம் தெரிவிப்பர்.

நிலையொற்றர்களிடம் சீடர்களாக இருப்பவர்கள் ஸங்கேத எழுத்துக்களில் ஒற்றுச் செய்தியைப் பரிமாறிக் கொள்வர். ஒவ்வொரு நிலையும் பிற நிலைகளை அறியாத வண்ணம் உருவாக்க வேண்டும்.

பிக்ஷுகி ராஜப்ரதானிகளின் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் வாயில் காப்போர்கள் ஒவ்வொரு வாயிலாக உளவுச் செய்தியைக கடத்த வேண்டும். இல்லது உள்ளிருப்பவர்கள் தாய்தந்தைபோல அவர்களைக் காணச் செல்வது போலவும் கலைஞர்கள், குசீலவர்கள், பணிபெண்கள் முதலியோர் பாடல், வசனம், வாத்யம், முதலியவற்றில் மறைமுகமாகவோ அல்லது பாண்டங்களில் ஸங்கேத எழுத்துக்கள் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். அல்லது உள்ளிருப்பவர்கள், நெடுநாள் நோய், பைத்தியம் பிடித்தல், நெருப்பு பட்ட துயர், விஷம் அருந்தியது என்று ஏதேனும் சாக்கிட்டு வெளிவந்து உளவுச் செய்திகளைத் தெரிவிக்க வேண்டும். மூன்று ஒற்றர்கள் ஒரே செய்தியைத் தெரிவித்தால் அதனை நம்ப வேண்டும். (இதனையே வள்ளுவப் பெருந்தகை ஒற்றெற்றுணராமை ஆள்க உடன் மூவர் சொற்றொக்க தேறப் படும் எனக் குறிப்பிடுகிறார்.)

மீண்டும் மீண்டும் தவறிழைத்தால் மறைமுக தண்டனையோ அல்லது நீக்குவதையோ செய்ய வேண்டும்.

மேலும் சில ஒற்றர்களை எதிரிகளிடமும் ஊதியம் பெற்றுக் கொள்ளும் பதவி பெறுமாறு செய்து எதிரிகளின் உளவை அறியச் செய்ய வேண்டும். அவர்கள் இரு இடத்திலும் ஊதியம் பெறுவர். அவர்களின் மனைவி மக்களை தன் கையகப் படுத்திக் கொண்டு அவர்களை எதிரியினிடத்தில் அனுப்ப வேண்டும். அவர்களைக் கொண்டே எதிரிகளால் அனுப்பப் படும் ஒற்றர்களைப் பற்றியும் அறிய வேண்டும். இவ்வாறு எதிரி, நண்பன், நடுநிலைமையிருப்போன், தொடர்பற்ற அரசன் ஆகியோரின் நாட்டில் முன்பு சொன்ன பதினெட்டு பேர்களையொட்டி ஒற்றர்களை நியமிக்க வேண்டும்.

அவர்களின் வீட்டினுள் நடப்பதை கூனர், குள்ளர், நபும்ஸகர், கலைப்பெண்கள், ஊமை முதலான வேடமிட்டும் பலதரப்பட்ட பிரிவைச் சார்ந்த வேடமிட்டும் அறிய வேண்டும்.

கோட்டைகளில் வைதேஹகன் என்னும் நிலையொற்றர்களை நியமிக்க வேண்டும். கோட்டையை அடுத்து துறவிவேடமிட்ட நிலையொற்றர்கள் அமைவர். நாட்டில் உழவுத் தொழில் மற்றும் வாணிபம் செய்யும் நிலையொற்றர்களையும் நாட்டின் புறப் பகுதிகளில் கால்நடைத் தொழில்புரிவோரையும் நியமிக்க வேண்டும்.

காட்டில் வேடர் வடிவு கொண்டவரையும், ஜைனர்கள், காட்டுவாசிகள் முதலானவர்களையும் எதிரிகளின் நடமாட்டத்தை அறிய நியமிக்க வேண்டும். அவர்கள் விரைவில் உளவுச் செய்தியை தெரிவிப்பவர்களாக இருக்க வேண்டும்.

எதிரிகளின் ஒற்றர்களை அதே விதத்தைச் சேர்ந்த ஒற்றர்களைக் கொண்டே அறியவேண்டும். நிலையொற்றர்களைக் கொண்டு எதிரிகளின் நிலையொற்றர்களையும், திரியும் ஒற்றர்களைக் கொண்டு எதிரியின் திரியும் ஒற்றர்களையும் அறிய வேண்டும்.

அரசனின் மீதும் நாட்டின் மீதும் வெறுப்பு கொண்டவர்களைத் தகுந்த காரணத்தோடு இனம் கண்டு எதிரிகளின் ஒற்றர்கள் அவர்களை அண்டக் கூடும் என்பதனால் முக்கிய ஒற்றர்களை அவர்களிடமும் நியமிக்க வேண்டும்.

இவ்விதம் திரியும் ஒற்றர்களையும் கௌடில்யர் விளக்கியுள்ளார்.

அர்த்த சாஸ்த்ரத்துக்கு முற்பட்ட வ்ருத்த ஹாரீதர் முதலியோர் எழுதிய பல ஸ்ம்ருதி நூல்களிலும் மஹாபாரதம் முதலானவற்றிலும் ஒற்றர்களின் இன்றியமையாமை விளக்கப் பட்டுள்ளது. ஒற்றர்படையை சரியாகப் பராமரிக்க முடியாத மன்னவன் அழிந்துபடுவான் என பொருட்பால் நூல்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய ஒற்றர்களைக் கொண்டு முதலாம் ஆதித்ய சோழன் உண்மையைக் கண்டுணர்ந்தான் என உதயேந்த்ரம் செப்பேட்டின் ஐந்தாம் வடமொழிச் செய்யுள் குறிப்பிடுகிறது. (தத்வாவேக்ஷீ ஸ்வசாராத் – உதயேந்த்ரம் செப்பேடு). ஆகவே தன்னால் நேரடியாகக் கண்டுணராத பொருட்களை அரசன் ஒற்றுக் கண் கொண்டே உணர வேண்டும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *