தமிழ் நூல் விளக்கங்களில் வடமொழியின் பங்கு

தமிழ் நூல் விளக்கங்களில் வடமொழியின் பங்கு

            பாரதபூமியில் தோற்றம் நிகழ்ந்ததென்றென்று அறியமுடியாது சிறந்து விளங்கும் மொழிகள் இரண்டு. ஒன்று வடமொழி, மற்றொன்று தென்மொழியாம் செந்தமிழ். இவ்விரு மொழிகளும் பண்டைநாள் முதல் வழங்கிவரும் பேறுடையவை. தரத்திலும் சுவையிலும் நிகரானவை. இரு மொழிகளும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவை என்பது மரபுவழி வந்த நம்பிக்கை. வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியைக் குடமுனிக்கு வகுத்தருளும் கொல்லேற்றுப்பாகர் என்பது காஞ்சிபுராணச்செய்தி

 இவ்விருமொழிகளிலும் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துள்ளது என்பது இருமொழியறிந்த நடுநிலையான அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் செய்தி. வடமொழியில் வேதத்தின் பொருள்கூறும் கலை மயங்கியகாலை தமிழ்மொழியின் உதவி தேவைப்பட்டிருக்கிறது. இது உயர்வு நவிற்சியல்ல. மீமாம்ஸô சாஸ்த்ரத்தின் கரைகண்டு அதன் சூத்திரங்களுக்கு உரையெழுதிய சபரஸ்வாமியும் அதற்கு விவரணம் எழுதிய குமாலபட்டரும் கூறிய உண்மையிது.

            மீமாம்ஸா சூத்திரங்களின் தொகுப்பில் பிகநேமாத்யதிகரணம் என்றொரு அத்தியாயம் உண்டு. இந்தத் தொகுப்பில் வேதத்தில் காணப்படும் பொருள்புயாத சொற்களுக்குப் பொருள் கொள்ளுதல் எப்படி என்ற விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பிகம், நேமம், தாமரஸம், சதம், பரிமண்டலம் என்பன போன்ற சொற்கள் அப்போது வைதிகமொழியில் வழக்கில் இல்லை. ஆனால் பிறமொழிகளில் இந்தச் சொற்கள் சில பொருட்களில் வழக்கில் இருந்தன. ஆகவே பிறமொழிகளில் கூறப்படும் பொருளை ஏற்பதா அல்லது வேதமொழியின் இலக்கண, நிகண்டுகளைக் கொண்டு புதிய பொருளைக் கற்பிப்பதா என்று விவாதித்து மற்றையமொழிகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிபு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே பிகம் என்றால் குயில், நேமம் என்றால் பாதி, தாமரஸம் என்றால் தாமரை என்பன போன்ற பொருட்களை எடுத்து கையாண்டுள்ளனர். இங்கு மற்றைய சொற்களை ஆய்வுக்கு விடுத்தாலும் தாமரஸம் என்றால் தாமரை என்னும் பொருள் தமிழிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை ஒருதலையாகத் தீர்மானிக்க முடிகிறது.

            இதற்கு ஆதாரமாக இதற்கு விளக்கவுரை எழுதிய குமால பட்டர் பிறமொழிகள் என்பதற்கு தமிழ் முதலான மொழிக்ள் (த்ரவிடாதி பாஷாயாம்) என்று கூறுவதிலிருந்தும் சோறு, அதர், பாம்பு, மாலை, வயிறு என்று ஐந்து தமிழ்ச்சொற்களைப் பற்றி விவாதித்திருப்பதாலும் வேதத்தின் சொல்லை விளக்க, தமிழின் உதவி தேவைப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. மேலும் தென்னாட்டார் தற்குறிப்பேற்ற அணியில் வல்லவர் என்று வடமொழிக்கவிகள் கொண்டாடுவதிலிருந்தும் தமிழ்மொழியில் தற்குறிப்பேற்றத்தின் தாக்கமே தென்னாட்டாரை வடமொழியிலும் அந்த அணியின் சிறப்பை ஏற்படுத்தத் தூண்டியது என்பதைப் புந்துகொள்ளமுடிகிறது.

  1. தமிழில் வடமொழியின் தாக்கம்

            இதனைப் போன்றே தமிழ்மொழி இலக்கியங்களிலும் வடமொழியின் பலவிதமான தாக்கங்களைப் பார்க்கமுடிகிறது. தமிழின் மிகப்பழமையான இலக்கியங்களான சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றுவரை இத்தகைய தாக்கங்கள் உள்ளன. இவ்வகைத் தாக்கங்களை இருவகையாகப் பிக்கலாம்.

  1. மொழியியல் தாக்கங்கள்
  2. மரபியல் தாக்கங்கள்

            இவ்வகை தாக்கங்கள் காணப்படுவதால் இவற்றைப் புந்து கொள்ள வடமொழியின் அறிவு இன்றியமையாததாகிறது.

1.1. மொழியியல் தாக்கங்கள்

            மொழியியல் தாக்கங்கள் பலவகையில் காணப்படுகின்றன. இலக்கணரீதியாகயும் இலக்கியரீதியாகவும் பலவிதமான தாக்கங்களையும் ஒற்றுமைகளையும் நம்மால் காணமுடிகிறது. மொழியியல் தாக்கங்களை எழுத்தியல் தாக்கங்கள், பொருளியல் தாக்கங்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.

1.1.1. எழுத்தியல் தாக்கங்கள்

            எழுத்தியல் ரீதியாக பல ஒற்றுமைகளையும் தாக்கங்களையும் தமிழில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியர் எழுத்துக்களின் தோற்றம் தொடர்பான தமது நூற்பாவில்

            எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து

            சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற்

            பிறப்பொடு விடுவழியுறழ்ச்சி வாரத்து

            அகத்தெழு வளியிசை யறப நாடி

            அளவிற் கோட லந்தணர் மறைத்தே

(தொல் எழுத்து, 102)

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி என்னும் நான்குவகை நிலைகளைக் குறிப்பிட்டு இவை அந்தணர் மறையினின்று அறியத்தக்கவை என்றும் குறிப்பிடுகிறார். இந்த நான்கு நிலைகளும் க்வேதத்திலும் ஏனைய வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

            சத்வாரி வாக் பரிமிதா பதானி

                        தானி விதுர்ப்ராஹ்ணா யே மனீஷிண:

            குஹா த்ரீணி நிஹிதா நேங்கயந்தி

                        துரீயம் மனுஷ்யா வதந்தி

            (ரிக்வேதம் 1.164.45)

என்பது ரிக்வேதப்பகுதி. சொல்லின் நிலைகள் நான்கு. இவற்றை அறிவாளிகளான அந்தணர்கள் அறிவர். மூன்று நிலைகள் உள்ளடங்கி இயங்குகின்றன. நான்காவது நிலையை மனிதர்கள் பேசுகின்றனர் என்பது இதன் பொருள். அளவிற்கோடல் அந்தணர் மறைத்தே என்னும தொடரும் தானி விதுர்ப்ராஹ்மணா யே மனீஷிண: என்னும் தொடரும் ஒன்றாக இருப்பது நோக்கற்பாலதாகும். இந்த ரிக்வேதப் பகுதியை அறியாதவர்களுக்கு தொல்காப்பிய நூற்பாவுக்குப் பொருள்கூறல் கடினமாக இருக்கும் என்பது கண்கூடான செய்தி.

            மேலும் பிறப்பியலிலுள்ள பல நூற்பாக்கள் ப்ராதிசாக்யம் எனப்படும் வேத இலக்கணத்தின் பகுதிகளை ஒத்திருப்பதையும் காணமுடியும்.

            எடுத்துக்காட்டாக சில

            ககார ஙகார முதனா வண்ணம் (தொல் எழுத்து. 89) என்னும் நூற்பா

            ஹனுமூலே ஜிஹ்வாமூலேன கவர்கே ஸ்பர்சயதி (தைத்திரீய ப்ராதிசாக்யம் 2.35) என்னும் சூத்திரத்துடனும்

            சகார ஞகாரமிடைநா வண்ணம் (தொல். எழுத்து 90) என்னும் நூற்பா

            தாலௌ ஜிஹ்வாமத்யேன சவர்கே (தை. ப்ரா. 2.36) என்னும் சூத்திரத்துடனும்

            அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின்

            நாநுனி பரந்து மெய்யுற வொற்றத்

            தாமினிது பிறக்குந் தகார நகாரம் (தொல். எழுத்து. 93) என்னும் நூற்பா

            ஜிஹ்வாக்ரேண தவர்கே தந்தமூலேஷு

            தந்த்யானாம் ஜிஹ்வாக்ரம் ப்ரஸ்தீர்ணம்  என்னும் சூத்திரங்களோடும்

            இஈ எஏ ஐயென விசைக்கும்

            அப்பா லைந்து மவற்றோ ரன்ன

            அவைதாம்

            அண்பன் முதனா விளிப்புற லுடைய (தொல். எழுத்து. 86) என்னும் நூற்பா

            தாலவ்யா ஏகாரசகாரவர்கா: இகாரைகார: சகார: (க்வேத ப்ராதிசாக்யம் 1.19) என்னும் சூத்திரத்தோடும்

            டகார ணகார நுனிநா வண்ணம் (தொல். எழுத்து 91) என்னும் நூற்பா

            ஜிஹ்வாக்ரேண ப்ரதிவேஷ்ட்ய மூர்தனி டவர்கே (தை.ப்ரா. 2.37) என்னும் சூத்திரத்துடனும் வெகுவாகப் பொருந்தி ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. ஆகையால் இந்த நூற்பாக்களும் பொருள் கூறும் வேளை இந்த சூத்திரங்களின் அறிவும் தேவையும் ஏற்படுவதையும் மறுப்பதற்கில்லை.

1.1.2. பொருளியல் தாக்கங்கள்

            பொருளியல் ரீதியாகவும் வடமொழியின் தாக்கத்தையும் பல ஒற்றுமைகளையும் தமிழ் மொழியில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக

            எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். சொல் 150) என்னும் நூற்பா சொல்லுக்குக் கூறும் வரையறை சுக்லயஜுர் வேதத்தின் ப்ராதிசாக்யத்தில் மூன்றாம் அத்யாயத்தில் இரண்டாவதான சூத்திரமாகிய அர்த்த: பதம் என்னும் வரையறையை ஒத்திருப்பதைக் காணமுடிகிறது.

            பிரயோகவிவேகத்தில் இரண்டாம், மூன்றாம் வேற்றுமைப் பிவுகள் வடமொழி வேற்றுமையை ஒத்திருப்பதாகக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

            மேலும் சொல்லை பெயர், வினை, இடை, உ என நான்கு விதமாகப் பித்துள்ளதும் க்வேத மற்றும் யஜுர்வேத ப்ராதிசாக்யங்களில் காணப்படும் நாம, ஆக்யாத, உபஸர்க, நிபாத என்னும் நான்குபிவை ஒத்திருப்பதையும் காணமுடிகிறது.

            மேலும் மூன்றாம் வேற்றுமையின் நூற்பாவான இன்னானேது (தொல். சொல். 74) பாணினியின் சூத்திரமான ஹேதௌ என்று ஏதுவைக் குறிப்பிடும் சூத்திரத்தை ஒத்திருத்தலும் குறிப்பிடத்தக்கது.

            மேலும் நாட்ய சாஸ்திரத்தில் நாட்யதர்மி, லோகதர்மி என்று குறிப்பிடப்படுவன நாடக வழக்கினு முலகிய வழக்கினும் என்னும் நூற்பாவை ஒத்திருக்கின்றன.

            மெய்ப்பாட்டியலில் குறிப்பிடும் எட்டுவகை மெய்ப்பாடுகளும் அவற்றின் வகைகளும் நாட்யசாஸ்திரவிளக்கத்தை ஒத்திருக்கின்றன,.

            அதிகாரமுறை, தொகுத்துக் கூறல், வாராததான் வந்தது முடித்தல் போன்ற உத்திகளும் அர்த்தசாஸ்திரத்தில் கௌடல்யர் குறிப்பிடும் யமர்த்தமதிக்ருத்யோச்யதே தததிகரணம், ஸமாஸவாக்யமுத்தேச:, வக்தவ்யேன ஸாதனம் ப்ரதேச: என்பன போன்ற பலவகையான யுக்திகளை ஒத்திருப்பதையும் காணமுடிகிறது.

            இவை போன்ற பல பொருளியல் தாக்கங்களைத் தமிழ்மொழியில் காணமுடிகிறது.

1.2. மரபியல் தாக்கங்கள்

            தமிழிலக்கியங்களில் வைதிக நெறி மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளின் தாக்கங்கள் பலவிடங்களில் காணப்படுகின்றன. பல வேதச் செய்திகளும் புராணச் செய்திகளும் உவமானமாக, செய்தியாகப் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளன. ஆகவே அவற்றிற்கு மூலமான மரபுச் செய்திகளை அறியாமல் இவற்றிற்கு பொருள் கூறல் கடினமானதாக அமையும். எடுத்துக்காட்டாக  நால்வகை வர்ணம் பற்றிய செய்தியும் மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் என்னும் எட்டுவித மணமுறைகள் பற்றிய செய்தியும் தர்மசாஸ்திரத்தின் கருத்தை ஒத்தமைந்துள்ளன. தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது.  மேலும் துகாலம் முடிந்த மனைவியோடு கூடும் தர்மசாஸ்திரச் செய்தி

            பூப்பின் புறப்பா டீரறுநாளும்

            நீத்தன் றுறையா ரென்மனார் புலவர் (தொ. பொருள் 185))

என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன் கூறிய

            ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்

என்னும் தொடலுள்ள பார்ப்பனமாக்களும் என்னும் சொல்லிற்கு தன்குலத் தொழில் விடுத்த பார்ப்பனர்கள் என்று பொருள்கோடலே பொருத்தமாக இருக்கும். பார்ப்பனர்கள் தங்கள் குலத்தொழில் செய்ய வழியிலாதபோது க்ஷத்ய, வைச்யர்களின் தொழிலை மேற்கொள்ளலாம் என்னும் கௌதமர் மற்றும் போதாயன தர்மசூத்திரங்களின் பொருளறிந்தவர்களால்தான் இத்தகைய பொருளைக் கொள்ள முடியும். மேலும் வேள்விகள் மற்றும் வேள்வித்தூண்களான யூபங்களைப் பற்றியும் ஏராளமான செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. யூபநட்ட வியன்களம் பலகொல் போன்ற தொடர்களில் யூபம், களம் ஆகிய வைதிக நெறிச்சொற்கள் பயன்பட்டிருப்பதை அறியமுடிகிறது. இவற்றிற்கு வைதிகநெறியைப் பற்றிய அடிப்படையறிவு வாய்ந்தவர்களால் மட்டுமே பொருள்கூறவியலும். மேலும் ப்ரூணஹத்யா, ப்ரஹ்மஹத்யா என்று தர்மசாஸ்திரங்கள் மகாபாதகங்களாகக் கூறும் பாவங்களை

            மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

            பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

என்னும் வகள் அப்படியே கையாண்டுள்ளமை நோக்கத்தக்கது. மேலும்

            நன்றாய்ந்த நீணிமிர்ச்சடை

            முதுமுதல்வன் வாய்ப்போகாது

            ஒன்று புந்த வீரண்டின்

            ஆறுணர்ந்த வொருமுதுநூல்

            இகல்கண்டோர் மிகல்சாய்மார்

            மெய்யன்ன பொய்யுணர்ந்து

            பொய்யோராது மெய்கொளீஇ

            மூவேழ்துறையு முட்டின்று போகிய

            என்னும் புறநானூற்று வரிகளுக்கு வேத இலக்கியங்களைப் பற்றிய அறிவின்றி பொருள் கூறல் பொருந்தாதென்பது வெள்ளிடைமலை. இங்கு மூவேழ் துறை என்பது ஏழு பாகயஜ்ஞங்கள், ஏழு ஹவிர்யஜ்ஞங்கள் மற்றும் ஏழு ஸோம ஸம்ஸ்தங்களைக் குறிக்கும்.மேலும் தர்மம் குறுகிய காலை பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதோடமிருந்து கல்வியையும் ஆசாரத்தையும் அறியலாம் என்னும் கெüதம தர்மசாத்திரத்தின் பொருளை

            வேற்றுமை தெந்த நாற்பாலுள்ளும்

            கீழ்ப்பா லொருவன் கற்பின்

            மேற்பா லொருவனு மவன்கட் படுமே

என்னும் புறநானூற்று வரிகளில் காணமுடிகிறது.மேலும் கருடசயனம் எனப்படும் யாகத்தின் வருணனை

            பருதி யுருவிற் பல்படைப் புசை

            எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

            வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம்

என்னும் புறநானூற்று வரிகளில் காணப்படுகிறது. மேலும் தர்ப்பைப் புல்லின் மேல் கணவனுக்காக விதவையான மனைவி பிண்டமிடும் செய்தியை

            தன்னமர் காதலி புன்மேல் வைத்த

            இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்

என்னும் புறநானூற்றுவரிகளால் அறியமுடிகிறது.மேலும் முத்தீ, இருபிறப்பாளர், அறுதொழிலர் போன்ற வைதிகச் சொற்களை சங்க இலக்கியங்களில் பலவிடங்களில் காணமுடிகிறது. மேலும் திருமுருகாற்றுப்படையின்

            சேவடி படருஞ் செம்ம லுள்ளமோடு

            நலம்பு கொள்கைப் புலம்பிந் துறையுஞ்

            செலவுநீ நயந்தனை யாயின்

என்னும் வரிகள் கடோபநிஷத்தின் வரிகளை ஒத்து மிகச் சரியான மொழிபெயர்ப்பாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

            இவை தவிர இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் பல நுட்பமான செய்திகளும் பல புராணச் செய்திகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

            கடுந்தே ராம னுடன்புணர் சீதையை

            வலித்தகை யரக்கன் வெüவிய ஞான்றை (புறநா 378)

            வென்வேற் கவுயர் தொன்முது கோடி

            முழங்கிரும் பெüவ மிரங்கு முன்றுறை

            வெல்போ ராமன் அருமறைக் கவித்த

            பல்வீ ழாலம் போல் (புறநா 70)

ஆகிய வகள் இராமாயணத்தையும்

            ஈரைம்பதின்மரும் பொருது களத்தவிய (பெரும்பாணாற்றுப்படை 415)

            நூற்றுவர் மடங்க

            வபுனை வல்வி லைவ ரட்ட

            பொருகளம் போலும் (முல்லை, 5, 56þ8)

ஆகிய வகள் மகாபாரதத்தையும் குறிப்பிடுவன. மேலும் பரிபாடலில் முப்புரமெத்த சிவனின் வருணனை மகாபாரத வர்ணனையை ஒத்திருக்கக் காணலாம்.

            ஆதி யந்தண னறிந்துப கொளுவ

            வேத மாபூண் வையத்தே ரூர்ந்து (பபாடல் 5, 22þ23)

            மேலும் தேவர் வேண்ட முப்புரமெரிசெய்த செய்தி மகாபாரதத்தில் காணப்படுவது போலவே கலித்தொகையிலும்

            அடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின் (கலி, பாலை 1)

கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

            பரிபாடலில் முருகப்பெருமானின் தோற்றத்தைப் பற்றிய வர்ணனை இராமாயணம் மற்றும் மகாபாரத வருணனைகளை ஒத்துள்ளது.

            மேலும் திருமுருகாற்றுப்படை முருகனைக் காண முப்பெருந்தேவரும் முப்பத்துமுக்கோடி தேவர்களும் வந்தனர் என்று குறிப்பிடும் வரிசை மகாபாரதவர்ணனையை ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. மேலும் அருந்ததியைக் காணல் போன்ற புராணமரபுகள் பல இலக்கியப்பகுதிகளில் காணப்படுகின்றன. பிறகு வந்த இலக்கணநூல்கள் பகுவிரீகி போன்ற தொகைகளைக் கூட வெகுவிரியன் என்றும் பயன்படுத்தியுள்ளமை நன்னூல் போன்ற நூல்கள் வடசொற்களுக்கும் இலக்கணம் கூறியமை ஆகிய பகுதிகள் வடமொழியறிவின்றி அறியக் கடினமானவை.

            இவை தவிர உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் கூற்றைக் கொண்டு இலக்கியவிளக்கத்தில் வடமொழியின் பங்கைத் தெளிவாக அறியமுடியும். சிந்தாமணியைப் பதிப்பித்த அவர் ஒரு பாடத்தை நிர்ணயிக்கத் தடுமாறியமை குறித்து அவருடைய வாக்கால் காணலாம்.

            இது கொம்பு, இது சுழி என்று வேறு பித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. ரகரத்திற்கும் காலுக்கும் வேற்றுமை தெயாது. சரபம் சாபமாகத் தோற்றும். சாபம் சரபமாகத் தோற்றும். ஓடத்தில் சரடு என்று வந்திருந்த வார்த்தையை சாடு என்றே எண்ணியிருந்தேன். தரனென்பதைத் தானென்று நினைத்தேன். யானை நாகத்திற்றோற்றுதலின் என்று ஓடத்தில் இருந்தது. யோசித்து யோசித்துப் பார்த்தேன். யானைகளில் வனசரம், கிரிசரம், நதிசரம் என்ற மூன்று வகையுண்டென்று கேட்டிருக்கிறேன். நாகமென்பது மலையாக இருக்குமென்றும் கிரிசரமாகிய யானையைக் குறித்ததாகக் கொள்ளலாமென்றும் தோற்றியது. ஒரு நண்பர் ஜைன சம்பிரதாயத்தில் நாகத்தின் வயிற்றில் யானை முதலில் பிறந்ததென்று இருக்கலாமோ என்னவோ என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். அது நாகத்தில் பிறந்ததோ அல்லது நரகத்திற் பிறந்ததோ ஒன்றும் விளங்கவில்லையே என்றுச் சொல்லிச் சித்தேன்.

            யானை நாதத்தில் தோற்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்பு என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார். காந்தருவ தத்தையோடு இசைபாடித் தோற்றவர்களை நோக்கி

            இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால்

            வேறு மென்னின் இசைவதொன் றன்று கண்டீர்

என்று ஒருவன் சொன்னதாக வரும் சந்தர்ப்பத்தில் யானையால் வெல்லுதல் அது என்பதை விளக்குவதன் பொருட்டு நச்சினார்க்கினியர் அந்த வாக்கியத்தை எழுதியிருந்தார். ஆகவே இங்கே இசையோடு சம்பந்தமுடைய விஷயம் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். இவற்றையெல்லாம் யோசிக்கையில் யானை நாதத்தில் தோற்றுதலின் என்று இருக்க வேண்டுமென நிச்சயித்தேன். பல பிரதிகளில் தெளிவாக நாகத்தில் என்றே காணப்பட்டது. ஒரு பிரதியில் மட்டும் நாதத்தில் என்ற பாடம் காணப்பட்டது.

            இவ்வாறு அவர் கூறுகிறார். இரகுவம்சகாவியத்தின் பதினாறாவது ஸர்க்கத்தில் யானைகள் ஸோமநாதத்திலிருந்து தோன்றியதாகக் காளிதாசர் கூறுகிறார். இதற்கு மல்லிநாதர் இயற்றிய விளக்கவுரையில் ஒருமுறை பிரம்மதேவர் சூரியனின் அண்டகபாலங்களைத் தட்டிச் சாமவேதத்தைப் பாடினார். அந்த நாதத்திலிருந்து யானைகள் உருவாயின என்று பாலகாப்பியம் என்னும் கஜசாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பதாக மேற்கோள் காட்டியுள்ளார். உ.வே.சா அவர்கள் இரகுவம்சத்தையோ அல்லது கஜசாஸ்திரத்தையோ கண்ணுற்றிருந்தால் ஐயத்தோடு பாடநிர்ணயம் செய்யவேண்டி வந்திருக்காது.

முடிவுரை

            இதுகாறும் கூறியவற்றால் தமிழ்நூல் விளக்கங்களை உள்ளபடி பெறவும் வடமொழியின் பங்கும் அதில் விவரிக்கப்பட்டிருக்கும் மரபுகளின் அறிவும் தேவையாகிறது என்பது வெள்ளிடைமலையாகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *