பொயு 971-இல் உத்தமசோழன் இளவரசனா…

  மேதகு நந்திபுரி ஸுந்தர சோழன் அரசுகட்டிலேறிய காலம் பொயு 957 என்று நிறுவப்பெற்றிருக்கிறது. இந்த முடிவு அவனுடைய கல்வெட்டுக்களிலுள்ள வானியற் குறிப்புக்களைக் கொண்டு முடிவு செய்யப்பெற்றுள்ளது, அவனுடைய கல்வெட்டாவணங்கள் பதினேழாம் ஆட்சியாண்டு வரை கிடைத்துள்ளன. திருமால்புரம் (S.I.I III, 117 & 118), நெமலி (139 of 1942-43), அல்லூர் (377 of 1903) மற்றும் திருமழவாடியிலுள்ள (2 of 1920) கல்வெட்டுக்கள் அவருடைய பதினேழாம் ஆட்சியாண்டைக் கொண்டிருக்கின்றன. கோயில் தேவராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டு (230 of 1923) அவருடைய பதினேழாம் ஆட்சியாண்டைக் குறித்தாலும் மதிரைகொண்ட மாராயரின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்பெற்ற மதிரைகொண்ட மாராயர் ஒருவேளை ஸுந்தரசோழனாக இருக்கும் தறுவாயில் அவன் பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தது உறுதியாகிறது. ஆகவே அவனுடைய இறுதியாண்டு பொயு 973 அல்லது பொயு 975 என்பது திண்ணமாகிறது. ஆனால் அது முதலாம் பராந்தகனாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். திரு. என். ஸேதுராமன் அவர்களின் கணிப்பான ஸுந்தரசோழனுடையது என்னும் கூற்றிற்கு வலுவிருப்பதாகத் தெரியவில்லை.

            உத்தமசோழனைப் பொறுத்தவரை அவனுடைய திருவிடைமருதூர் கல்வெட்டு (265 of 1907) கலியுகம் 4083-ஐக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டின் வரிகள் ஸ்வஸ்திஸ்ரீ கலியுகவருஷம் நாலாயிரத்தெண்பத்து மூன்று உத்தமசோழராகிய கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு ௰(௩) என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆகவே கலியுகம் 4083 உத்தமசோழரின் 13 ஆம் ஆட்சியாண்டு என்பது தெளிவாகிறது. ஸ்ரீ. ஸேதுராமன் (Early Cholas, Mathematics reconstructs the chronology, Page 11) இந்தக் கல்வெட்டை நன்காய்ந்து இதில் குறிப்பிடப்பெற்றுள்ள கலியாண்டு கத கலி வர்ஷம் என்றும் நடப்பாண்டு இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதாரமாக உய்யக்கொண்டான் திருமலையில் உள்ளக் கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்வெட்டில் கலியாண்டு 4080 எனவும் சக ஆண்டு 901 ஆகவும் குறிப்பிடப்பெற்றுள்ளது. மற்றுமுள்ள பல கல்வெட்டுக்களையும் ஆய்ந்து உத்தமசோழன் கோலோச்சத் துவங்கிய ஆண்டு பொயு 971 என்று நிர்ணயித்துள்ளார்.

            இங்கேதான் நமது பிரச்சினை துவங்குகிறது. ராஜேந்த்ரனின் திருவாலங்காட்டுச் செப்பேடு வேறுவிதமான கருத்தைத் தெரிவிக்கிறது. அந்தச் செப்பேட்டின் 69-ஆவது செய்யுள் பின்வருமாறு

प्रबलकलिबलान्धध्वान्तविध्वंसहेतोः स्वयमरुण्मॊऴिवर्म्मा प्रार्थ्यमानः प्रजाभिः।

अचकमत न राज्यं स्वे पितृव्ये स्वदेशप्रणयिनि मनसापि क्षत्रधर्म्मार्थवेदी।।

ப்ரப³லகலிப³லாந்த⁴த்⁴வாந்தவித்⁴வம்ʼஸஹேதோ​:

ஸ்வயமருண்மொழிவர்ம்மா ப்ரார்த்²யமான​: ப்ரஜாபி⁴​:|

அசகமத ந ராஜ்யம்ʼ ஸ்வே பித்ருʼவ்யே ஸ்வதே³ஶ

ப்ரணயினி மனஸாபி க்ஷத்ரத⁴ர்ம்மார்த²வேதீ³||       

          வலிமை வாய்ந்த கலிகாலத்தின் பலமான இருளைப் போக்க வேண்டிய காரணத்தால் மக்களால் வேண்டிக்கொள்ளப்பெற்றவனாயினும் அருண்மொழிவர்மன் க்ஷத்ரியதர்மத்தை அறிந்தவனாய் அவனது சிற்றப்பன் தன்னாட்டின் மீது காதல் கொண்டிருந்ததால் தன் மனதாலும் நினைத்துப்பார்க்கவில்லை.

            மேற்கண்ட செய்யுளை மேற்கொள் காட்டிய அறிஞர் பெருமக்கள் இரண்டாம் ஆதித்யன் மறைந்துபட்ட பிறகு ஸுந்தர சோழனும் இறந்து பட்டதாகவும், அதன் பிறகு மக்கள் கேட்டுக் கொண்டாலும் பின்னர் ராஜராஜன் என்று பெரும்பெயர் கொண்ட அருண்மொழிவர்மன் தனதுரிமையான அரசை விட்டுக் கொடுத்தான் என்றே கூறியுள்ளனர்.

            இங்கேதான் முக்கியமான பிரச்சனை எழுகிறது. உத்தமசோழன் அரசுகோலோச்சத் துவங்கியது பொயு 971-இல். ஆனால் ஸுந்தர சோழனின் கடைசி ஆட்சிக்காலம் பொயு 973-இல். ஆகவே ஸுந்தர சோழன் இறந்து பட்டபின்னரே உத்தமசோழன் அரசுகட்டிலேறினான் என்னும் கூற்று பொருந்தாதாகிறது.

            இதற்குப் பொருத்தமான தீர்வாவது –

            உத்தமசோழன் ஸுந்தரசோழனின் ஆட்சிக்காலத்தில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பெற்றான் என்பது அவனது திருவொற்றியூர் கல்வெட்டால் தெளிவாகிறது. அந்தக் கல்வெட்டின் வரிகளாவன

வரி 1 : ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோவிராசகே

வரி 2 : சரி பன்மர்க்கு யாண்டு ஐஞ்சாவது உடையார்

வரி 3 : உத்தமசோழ தேவர்ருடன் வந்த

வரி 4 : கலேசி பெருந்தரத்துச் சிங்கமய்யன் மகன்

வரி 5 : கடுத்தலை நாகமய்யன் திருவொற்றியூர்

வரி 6 : மஹாதேவர்க்கு ஆசந்திரதாரமும் ஒரு நந்தா

வரி 7 : விளக்கெரிப்பதற்கு வைத்த சாவா மூவா பேரா

வரி 8 : டு தொண்ணூறு. ஈழ விளக்கு ஒன்று. இது பன்மா

வரி 9 : ஹேஸ்வர ரக்ஷை

       இந்தக் கல்வெட்டில் உத்தமசோழன் உடையார் என்னும் சிறப்படைமொழியோடு குறிப்பிடப்பெற்றிருக்கிறான். இந்தக் கல்வெட்டின் காலத்தில் இரண்டாம் ஆதித்யன் உயிரோடிருந்த போதும் உத்தம சோழன் பொதுவாக இளவரசருக்குப் பயன்படுத்தப்பெறும் சொல்கொண்டு உடையார் என்று குறிப்பிடப்பெற்றிருக்கிறான். இந்தச் சிறப்பு அடைமொழி வேறுசில சிற்றரசர்களுக்கும் பயன்படுத்தப்பெற்றிருப்பினும் ஈண்டு பயன்படுத்தப்பெற்றுள்ள விதம் அவனை ஒரு இளவரசனாகவே நடத்தியமையைக் காட்டுகிறது.

             ஆகவே உத்தமசோழன் பொயு 971-இல் இளவரசனாக முடிசூட்டப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஸுந்தர சோழன் விண்ணுலகு போந்த பின்னர் மக்கள் ராஜராஜனை வேண்டியிருத்தல் கூடும். உத்தமசோழன் இளவரசனாக அறிவிக்கப்பட்டதனால் க்ஷத்ரிய தர்மத்தை அறிந்த ராஜராஜன் அரியணையை ஏற்காதிருதிருத்தல் வேண்டும். க்ஷத்ர-தர்மார்த்த-வேதீ என்னும் செய்யுளிலுள்ள சொல், இளவரசனான உத்தமசோழனையே தொடர்ந்து அரசனாக அனுமதித்த செயலை இறைச்சிப் பொருளால் சுட்டுவதாகவே கொள்ள வேண்டும்.

    மற்றொரு முக்கியமான செய்தியும் இதில் மறைந்திருக்கிறது. உத்தமசோழன் பதினாறாண்டுகள் அரசுகோலோச்சினான். ஆகவே அவனுடைய ஆட்சி பொயு 987-இல் முடிந்திருத்தல் வேண்டும். ராஜராஜசோழன் பொயு 985-இல் அரசுக்கட்டிலேறியதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே ராஜராஜன் பொயு 985-இல் இளவரசனாகவே முடிசூடியிருக்க வேண்டும். 987-இல் உத்தமசோழனின் ஆட்சிக்குப்பின்னரே முழு மன்னனாக ஆகியிருத்தல் வேண்டும். எனவே தான் மன்னனாகப் பொறுப்பேற்ற பின்னரே திக்விஜயத்தைத் துவக்கியிருத்தல் வேண்டும். இந்தச் செய்தியை உறுதி செய்யும் செய்யுளும் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் இடம்பெற்றுள்ளது.

त्रिजगदवनदक्षमम्बुजाक्षं स्वयमवतीर्णममुन्निरूप्य चिह्नैः।

अरुण्मॊऴिमभिषिच्य यौवराज्ये धरणिधुरं मधुरान्तको बभार।। 70

த்ரிஜக³த³வனத³க்ஷமம்பு³ஜாக்ஷம்ʼ ஸ்வயமவதீர்ணமமுன்னிரூப்ய சிஹ்னை​:|

அருண்மொழிமபி⁴ஷிச்ய யௌவராஜ்யே த⁴ரணிது⁴ரம்ʼ மது⁴ராந்தகோ ப³பா⁴ர||  70

மூவலகையும் காக்க வலிவுள்ள திருமால் தானாக இறங்கி வந்ததை அவனுடைய உடலிலுள்ள சிஹ்னங்களைக் கொண்டு உறுதி செய்த மதுராந்தகன் (உத்தமசோழன்) அருண்மொழிவர்மனை இளவரசுப்பட்டத்தில் முடிசூட்டி பூபாரத்தைத் தாங்கினான்.

அருண்மொழி வர்மன் தனது மூன்றாம் ஆட்சியாண்டு முதலே ராஜராஜன் என்னும் பட்டத்தைத் தாங்கினான். அதற்கும் காரணம் இதுவாகத்தானே முடியும்.

Please follow and like us:

One thought on “பொயு 971-இல் உத்தமசோழன் இளவரசனா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *