கச்சியேகம்பன் கோயிலில் இரு கரண சிற்பங்கள்

கரணங்கள் எனப்பெறும் ஆடலசைவுகள் பரதமுனிவர் இயற்றிய நாட்ய சாஸ்த்ரத்தின் நான்காம் இயலில் விளக்கப்பெற்றுள்ளன. தாண்டவலக்ஷணம் என்னும் பெயருடைய இந்த இயலில் ந்ருத்தம் மற்றும் வாக்யார்த்த அபியனத்தில் பயன்பெறும் 108 கரணங்கள் விளக்கப்பெற்றிருக்கின்றன. கரணத்தின் இலக்கணம் ஹஸ்தபாதஸமாயோக ந்ருத்தஸ்ய கரணம் பவேத் என்பதாகும். கைகள் மற்றும் கால்களின் ஒருங்கிணைந்த அசைவே கரணம் எனப்பெறும் என்பது இதன் விளக்கமாகும். தமிழகத்தில் கரணசிற்பங்கள் பல கிடைத்துள்ளன. அவற்றுள் சில வரிசையாகவும் சில தனித்தனியாகவும் செதுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் வரிசையான தொகுதிகளுள் பழமையான சிற்பங்கள் தஞ்சைப் பெரியகோயிலில் காணக்கிடைக்கின்றன. இப்போது நாம் கச்சியேகம்பன் கோயிலில் அமைந்த இரு தனி கரணசிற்பங்களைக் காண்போம்.

தண்டபாதகரணம்

            புனிதமான கம்பை நதியின் கரையில் பொருத்தப்பெற்றுள்ள ஒரு கற்பலகை ஒரு கரணத்தின் அழகிய சிற்பத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தப் பலகை பிண்டிக்கல்லால் ஆனது. இந்தப் பலகையில் மூவர் உருவங்களும் வலது கீழ்க்கோடியில் ஒரு சிவலிங்கமும் செதுக்கப்பெற்றுள்ளன. நடுவில் ஆடும் மங்கை கரண்ட மகுடத்தை அணிந்துள்ளாள். தனது இடதுகாலை தலைக்கு மேல் தூக்கியவண்ணம் அமைந்துள்ளாள். உயர்த்தப்பெற்ற வலதுகை பதாக ஹஸ்தமாக அமைந்துள்ளது. அவள்தம் காதுகளை பத்ர குண்டலங்களும் கழுத்தை க்ரைவேயகமும் அலங்கரிக்கின்றன. அவளுடைய மணிக்கட்டுக்களில் கங்கணங்கள் உள்ளன. அவளுடைய இடது கரம் ஸூசி ஹஸ்தத்தில் அமைந்துள்ளது. அவள் மேகலை அணிந்துள்ளாள். அவளுடைய ஆடை ஊருதக்னமாக அமைந்துள்ளது. ஆகவே அவளுடைய கால்முட்டி தெரிகிறது. அவளருகில் அமர்ந்துள்ள ஒரு உருவம் ஆணுடையது. அவனும் காதுகளில் பத்ரகுண்டலமும் கழுத்தில் க்ரைவேயகமும் அணிந்துள்ளான். அவன் ஒரு தாளத்திற்கான வாத்யத்தை அணிந்திருப்பது போலத் தோன்றுகிறது. இருவருக்கும் நடுவிலுள்ள ஆணும் அதே அணிகலன்களுடன் பார்வையாளரைப் போலத் தெரிகிறான். வலக்கோடியில் ஒரு சிவலிங்கம் நாகபீடத்துடன் காணப்பெறுகிறது.

            பார்வதி என்று கருதத்தக்க அந்தப் பெண்ணுருவம் தண்டபாதம் என்னும் கரணத்தில் அமைந்துள்ளது. இந்தக் கரணத்தின் இலக்கணமாவது

नूपुरं चरणं कृत्वा दण्डपादं प्रसारयेत्।

क्षिप्राविद्धकरं चैव दण्डपादं तदुच्यते।।

            இந்தக் கரணத்திற்கு இரண்டு சாரிகள் கூறப்பெற்றுள்ளன. இந்தக் கரணம் நூற்றெட்டு கரணங்களில் எண்பத்தெட்டாவது கரணமாகக் கூறப்பெற்றுள்ளது. இந்தக் கரணத்திற்கான சாரிகள் நூபுரபாதிகா மற்றும் தண்டபாதா ஆகியவையாகும். இந்தக் கரணவிலக்கணத்தில் தண்டபாதசாரி மட்டுமே முக்கியமானதாகக் கூறப்பட்டிருந்தாலும் அந்தச் சாரியின் முன்னாக நூபுரபாதிகா சாரி செய்யப்பெறவேண்டும் என்று இலக்கணம் கூறுகிறது. இந்தச் சாரியின் படி காலை அஞ்சிதமாக பின்னெடுத்து சென்று முன்னர் அக்ரதலமாக கொணர்ந்து தரையில் இறுத்தவேண்டும். இவ்வாறு செய்யும் போது காதில் பூட்டிய சதங்கை கணகணவென்று ஒலிக்கும். வடமொழியில் சலங்கைக்கு நூபுரம் என்று பெயர். சலங்கையை ஒலிப்பிப்பதால் இதற்கு நூபுரபாதிகா என்று பெயர். அதன் பிறகு காலை நேராக மேலே தூக்க வேண்டும். மேலே தூக்கிய கால் ஒரு தண்டத்தைப் போல காணப்பெறுவதால் இந்தச் சாரிக்கு தண்டபாதா என்று பெயர். இந்தச் சாரி முக்கியமானதாகையால் இந்தக் கரணத்திற்கும் தண்டபாதா என்னும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

            மேற்கண்ட கற்பலகையில் கால் தூக்கிய பெண்ணுருவம் வலதுகையில் பதாக ஹஸ்தத்தையும் இடக்கையில் ஸூசியையும் கொண்டுள்ளது. இந்தக் கற்பலகை தண்டபாதா கரணத்திற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

 

தண்டபாதகரணம்

தண்டபாதகரணம்

காவ்யப்ரகாசம் என்னும் வடமொழி இலக்கியவியல் நூலில் குற்றங்களுக்கான எடுத்துக்காட்டான பின்வரும் செய்யுள் அன்னை பவானியின் தண்டபாதத்தைவிளக்குகிறது.

जङ्घाकाण्डोरुनालो नखकिरणलसत्केसरालीकरालः

प्रत्यग्रालक्तकाभाप्रसरकिसलयो मञ्जुमञ्जीरभृङ्गः।

भर्तुर्नृत्तानुकारे जयति निजतनुस्वच्छलावण्यवापी-

सम्भूताम्भोजशोभां विदधदभिनवो दण्डपादो भवान्याः।।

ஜங்கா⁴காண்டோ³ருனாலோ நக²கிரணலஸத்கேஸராலீகரால​:

ப்ரத்யக்³ராலக்தகாபா⁴ப்ரஸரகிஸலயோ மஞ்ஜுமஞ்ஜீரப்⁴ருʼங்க³​:|

ப⁴ர்துர்ன்ருʼத்தானுகாரே ஜயதி நிஜதனுஸ்வச்ச²லாவண்யவாபீ-

ஸம்பூ⁴தாம்போ⁴ஜஸோ²பா⁴ம்ʼ வித³த⁴த³பி⁴னவோ த³ண்ட³பாதோ³ ப⁴வான்யா​:||

            அன்னை பவானியின் தண்டபாதம் காக்கட்டும். மேல்தூக்கிய அந்தப் பாதம் தாமரையையொத்திருக்கிறது. அந்தத் தாமரைக்கு முழங்காற்பகுதியே தண்டைப் போல அமைந்திருக்கிறது. கால் நகங்களின் ஒளி தாமரையின் நடுத்தாளைப் போலிருக்கிறது. செம்பஞ்சுக்குழம்பின் ஒளி புத்திதழ்களைப் போலிருக்கின்றன. அழகிய சதங்கை வண்டுகளைப் போலிருக்கிறது. அவள் தன் கணவனின் ஆடலில் தானுமியைந்தாடுகிறது. அவளுடைய உடலழகே தூய குளத்தைப் போலவும் தூக்கிய அவள் பாதம் அதிலிருந்து உருவான தாமரையைப் போலவும் அமைந்துள்ளது.

அத்தகைய பவானி நமக்கும் அருளட்டுமே…

 

புஜங்கத்ராஸிதம்

மிகவும் புகழ்பெற்ற இந்தக் கரணம்தான் ஆடல்வல்லானின் ஆனந்தத் தாண்டவத்திற்கு மூலமானது. இந்தக் கரணம் வரிசையில் இருபத்து நான்காவது கரணமாக அமைந்துள்ளது. இதன் இலக்கணமாவது

कुञ्चितं पादमुत्क्षिप्य त्रयश्रमूरुं विवर्तयेत्।

कटिजानुविवर्ताच्च भुजङ्गत्रासितं भवेत्।।

            இந்தக் கரணத்தின் பெயரின் விளக்கம் பாம்பைக் கண்டு அஞ்சுதல் என்பதாகும். பாம்பைக் கண்டு அஞ்சும்போது காலைத் தூக்குவதைப் போல தூக்குவதால் இப்பெயர் ஏற்பட்டது. இதன் இலக்கணமாவது காலைக் குஞ்சிதமாகத் தூக்கி தொடையை முக்கோணமாக சுழற்றி வைத்தலாகும்.

மேலே கச்சியேகம்பன் கோயிலில் காணப்பெறும் இந்தச் சிற்பத்தில் ஒரு ஆண் ஆடற்கலைஞன் தனது இடது காலை வலதுகாலுக்குக் குறுக்காக மேலே குஞ்சிதமாகத் தூக்கியுள்ளான். இரு கரங்களும் டோலாவாக அமைந்துள்ளன. இந்தச் சிற்பம் புஜங்கத்ராஸிதமாக அமைந்துள்ளது.

புஜங்கத்ராஸித கரணம்

Please follow and like us:

One thought on “கச்சியேகம்பன் கோயிலில் இரு கரண சிற்பங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *