பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வேத வேதாங்க சான்றுகள்

              பண்டைய வரலாற்றை ஆராயும்போது அதற்கான இருமுகங்கள் தெரியவரும். அதன் ஒருமுகம் எல்லா சான்றுகளையும் ஆராய்ந்து அவற்றை வரிசைசெய்து அவற்றின் மூலம் உண்மையை வெளிக்கொணர்வதாகும். மற்றொரு முகம் கர்ண பரம்பரையாகவும் இலக்கிய ரீதியாகவும் உள்ள தரவுகளைக் கொண்டுவரும் நம்பிக்கையாகும். இவ்விரண்டிலிருந்தும் ஸமதொலைவிலிருந்து ஆய்வை மேற்கொள்வது ஆய்வாளர்களின் கடமையாகும்.  அவ்விதமான ஆய்வில் தர்க்கரீதியில் சரியான பழஞ்செய்திகளையும் ஆய்ந்து பிழிவான உண்மையை ஏற்பது நிகழும். இவ்வாறாக இலக்கிய தரவுகளும் வரலாற்றைப் புனரமைப்பதில் சிறப்பான இடத்தைப் பிடிக்கின்றன.

            மனிதன் இயற்கையான குகைகளில் வாழ்ந்தபோது அவனுடைய அறிவானது அவன் நேரிட்டு கண்ட வேட்டை, அவனுடைய ஸாஹஸங்கள் மற்றைய வாழ்க்கைநிலைகளையும் பதிவு செய்யத் தூண்டியது. அவனுக்கு எழுதும் அறிவில்லாமையால் அவன் வசித்த குகைகளில் ஓவியங்களாக வரையத்துவங்கினான். மொழியானது தனது ஆரம்பவடிவில் இருந்தபோது மனிதனின் நுட்பமும் வளர்ந்து புதிய பதிவிடும் முறையைக் கையாளத் துவங்கினான். இவ்வாறாகத்தான் எழுதும் முறை மலரத்துவங்கியது.

குகை ஓவியம்

குகை ஓவியம்

            நமது பாரதநாட்டில் குகையோவியங்களுக்குப் பிறகு மிகப்பழமையான எழுத்துப்பதிவாகக் கிடைப்பவை சிந்து சமவெளி முத்திரைகளேயாகும். இவை ஏறத்தாழ ஐயாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். இவற்றிலிருந்து தரவுகளை மீட்டமைக்கும் ஆய்வு இன்று வரை தொடர்ந்து வருகிறது. அவற்றின் மொழி, எழுதும் முறை, அவற்றிலுள்ள தரவுகள் என்று அனைத்தும் இன்று வரை சர்ச்சைக்கான பொருளாகவே இருந்துள்ளன.

            அவற்றிற்குப் பிறகு முழுமையாகப் படிக்கப்பட்ட தரவுகள் ப்ராஹ்மியில் அமைந்த பொதுயுகத்திற்கு முன்பு ஐந்து முதல் நான்கு வரையிலான நூற்றாண்டுகளைச் சேர்ந்த பதிவுகளேயாம். இடையில் திரு. எஸ்.ஆர்.ராவ் அவர்களால் கண்டறியப்பெற்ற த்வாரகை எழுத்துக்களைப் பற்றிப் பிறகு காண்போம். இந்த ஆவணங்கள் பொயு முன் நான்கைந்து நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறினாலும் இவற்றை மறுதலிக்கும் சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எழுத்தியலின் பொற்காலமாகக் கருதத் தக்கது ஸம்ராட் அசோகனின் காலமேயாம். இது பொயு முன் மூன்றாம் நூற்றாண்டாகும். அவனுடைய ஆவணங்கள் நாட்டின் அனைத்து பாகங்களிலும் கிடைக்கின்றன. ஆயினும் அதற்கு முற்பட்டதாகக் கருதத் தக்க சில ஆவணங்களும் உண்டு. அவை

  • ஜபல்பூர் மாவட்டம் ஏரனிலும் தக்ஷசிலாவிலும் கிடைத்த இரு நாணயங்கள் பொயு முன் 4 ஆம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பெற்றிருக்கின்றன.
  • பிப்ரஹ்வாவில் கிடைத்த ஜாடியிலுள்ள எழுத்துக்கள் பொயுமுன் ஐந்தாம் நூற்றாண்டாகக் கணக்கிடப்பெற்றுள்ளது.
பிபரஹ்வா ஜாடி

பிபரஹ்வா ஜாடி

  • பட்டிப்ரோலுவில் கிடைத்த கற்பலகையெழுத்துக்கள் பொயு முன் 4 ஆம் நூற்றாண்டாகக் கணக்கிடப்பெற்றிருக்கின்றன.
பட்டிப்ரோலு பலகைக் கல்வெட்டு

பட்டிப்ரோலு பலகைக் கல்வெட்டு

  • பங்களாதேஷில் போக்ராவில் கிடைத்த மஹாஸ்தான கல்வெட்டு அசோகனுக்கு முந்தையதாகக் கருதப்பெறுகிறது.
மஹாஸ்தான கல்வெட்டு

மஹாஸ்தான கல்வெட்டு

  • ஆஜ்மீரில் பத்லியில் கிடைத்த கல்வெட்டு பொயு 483 எனக் கணக்கிடப்பெற்றிருக்கிறது.
  • நாட்டின் மிகப்பழைய செப்பேடான ஸோகௌரா செப்பேடு பொயு முன் நான்காம் நூற்றாண்டாகக் கணக்கிடப்பெற்றிருக்கவேண்டும்.
ஸோகௌரா செப்பேடு

ஸோகௌரா செப்பேடு

  • தமிழகத்திலும் ஸ்ரீலங்காவிலும் கிடைத்த மட்பாண்டக் கீறல்களும் அசோகனுக்கு முற்பட்டவையாகக் கருதப்பெறுகின்றன.

இவை அசோகனுக்கு முற்பட்டதாகக் கருதப்பெற்றாலும் கூட அவற்றின் காலக்கணக்கீட்டில் குறிப்பாக பட்டிப்ரோலு, ஸோகௌரா மற்றும் மஹாஸ்தான ஆவணங்களைப் பற்றிய கருத்து வேறுபாடு அறிஞர்களுக்கு உண்டு.

ஆயினும் பண்டைய இந்தியாவில் எழுதும் முறை  பொயு முன் ஐந்தாம் நூற்றாண்டிலேயே துவங்கியிருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டுக் கூறவியலும்.  இங்கு எழும் கேள்வியென்னவென்றால் வேதங்கள்தாம் நாட்டின் மிகப்பழைய இலக்கியங்கள் என்பது தீர்மானமாயிருக்கிறது. புதிய காலக்கணக்கீடுகள் அவை சிந்து சமவெளி நாகரீகத்துக்கு ஸமமான ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் பழையவை என்று நிர்ணயிக்கின்றன. என்றால் அத்தகைய வேதங்களில் எழுதும் முறைகளைப் பற்றிய ஏதேனும் குறிப்புக்கள் இருக்கவேண்டுமல்லவா, அவையெங்கே என்பதுதான்.

இதற்கான  விடை வேதங்களை எழுதக்கூடாது என்ற விதியிருந்தது என்பதில் முடிகிறது. அதனால்தான் அதற்கு எழுதாக்கிளவியென்னும் பெயர் ஏற்பட்டது. அது காதிலிருந்து காதிற்கு என்பதைப் போல கர்ணபரம்பரையாகத்தான் பரப்பப்பெற்றது. ஆயினும் வேதநூல்களிலும் வேதாங்க நூல்களிலும் எழுத்தியலைப் பற்றிய நேர்முகமான, மறைமுகமான சான்றுகள் இல்லாமல் இல்லை.

ரிக்வேதம்

இந்த வேதம்தான் உலகிலேயே வாழும் இலக்கியங்களில் மிகப்பழமையானதென்று தீர்மானிக்கப்பெற்றிருக்கிறது. இந்த வேதத்திலிருந்து சில மந்த்ரங்களை அறிஞர் பலர் பண்டைய எழுத்தியலுக்குச் சான்றாகக் காட்டுகின்றன. அவற்றுள் பத்தாவது மண்டலத்திலுள்ள பின்வரும் மந்த்ரம் மிகவும் முக்யமானது.

सहस्रं मे ददतोष्टकर्ण्यः शरवो देवेष्वक्रत। (10.62.14)

ஸஹஸ்ரம்ʼ மே த³த³தோஷ்டகர்ண்ய​: ஸ²ரவோ தே³வேஷ்வக்ரத|  (10.62.14)

மேற்கண்ட மந்த்ரம் ஆயிரம் அஷ்டகர்ணிகளான பசுக்கள் தானம் கொடுக்கப்பெற்றதைச் சுட்டுகிறது. இங்கு அஷ்டகர்ணி என்னும் சொல்லுக்குப் பொருள் கொண்ட அறிஞர்கள் இருவிதமாகக் கூறினர். ஒருவிதப் பொருளில் காதில் எட்டு என்னும் எண் எழுதப்பெற்ற பசுக்கள் என்றும் மறுவிதத்தில் எட்டு என்னும் எண்ணைப் போன்ற காதையுடைய பசுக்கள் என்றும் இருவிதமாகப் பொருள் கொண்டு எட்டு என்னும் எண் வழக்கத்திலிருந்ததாக அறிஞர்கள் கொண்டனர். ஆனால் இந்தப் பொருள் சர்ச்சைக்குரியது என்று நான் கருதுகிறேன். காரணம் வேதங்களுக்கு உரையியற்றிய ஸாயணாசார்யாள் இந்தப் பொருளை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் அஷ்ட என்னும் சொல்லிற்கு நீண்ட என்னும் பொருளைக் கொண்டு நீண்ட காதையுடைய பசுக்கள் என்றே குறிப்பிடுகிறார். ஆகவே நாம் மற்றைய சான்றுகளைப் பார்ப்போம்.

மற்றைய சான்றுகள் மறைபொருளால் எழுத்தியலைச் சுட்டுகின்றன. ஸம்ஹிதைகளிலுள்ள பங்க்தி, த்விபதீ, த்ரிபதா முதலிய பாவகையுடன் தொடர்புடைய சொற்கள் அவற்றிற்கு முன்னரே எழுதுமுறை இருந்ததற்குச் சான்றாக அமைந்துள்ளது. ரிக்வேதத்தின் சில மந்த்ரங்கள் அவை ஒரு தேரைப் போல அமைக்கப்பெற்றதைக் குறிப்பிடுகின்றன. (इमां ते वाचं वसूयन्त आयवो रथं न धीरः स्वपा अतक्षिषुः 1.130.6)

யஜுர்வேதம்

இந்த வேதத்தில் இடம்பெற்றுள்ள மீப்பெரு எண்கள் அவற்றின் குறியீடுகளின் பயன்பாடின்றி புரிந்திருக்க வாய்ப்பில்லை. தைத்திரீய ஸம்ஹிதையில் பத்தின் மடங்குகளான பெருக்கத்தால் பரார்த்தம் எனப்பெறும் 1000000000000 என்னும் எண் வரையிலான எண்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. அதற்குக் குறைவான எண்களான தசம் (10), சதம் (100), ஸஹஸ்ரம் (1000), அயுதம் (10000), நியுதம் (100000), ப்ரயுதம் (1000000), அர்புதம் (10000000), ந்யர்புதம் (100000000), ஸமுத்ரம் (1000000000), மத்யம் (10000000000) மற்றும் அனந்தம் (100000000000) ஆகிய எண்கள் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன. மற்றோரிடத்தில் பன்னிரண்டின் மடங்குகளைக் காணவியல்கிறது. இதைப் போலவே அர்த்தம் (½), பாதம் (¼), சபம் (⅛) மற்றும் கலா (1/16) எனப்பெறும் பின்னவெண்களும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய எண்கள் அவற்றிற்கான குறியீடுகளின்றி பயன்பாட்டில் வந்திரா என்பது உறுதியாகிறது.

அதர்வவேதம்

            இந்த வேதத்தில்தான் முதன்முறையாக எழுதுமுறைக்கான நேரடிச்சான்று கிடைக்கிறது. இந்த வேதத்தின் ஏழாம் காண்டத்திலுள்ள பின்வரும் மந்த்ரம் தான் அந்த சான்று.

अजैषं त्वा संलिखितम् अजैषम् उत संरुधम्। (7.50.5)

அஜைஷம்ʼ த்வா ஸம்ʼலிகி²தம் அஜைஷம் உத ஸம்ʼருத⁴ம்|  (7.50.5)

மேற்கண்ட மந்த்ரம் இரு சூதாடிகளிடையேயான உரையாடலாக அமைந்துள்ளது. ஒருவன் மற்றொருவனைப் பார்த்து இந்தப் பகடைகளில் எழுதப்பெற்ற குறியீட்டைக் கொண்டு உன்னை எளிதில் வென்று விடுவேன் என்று கூறுவதாக அமைந்துள்ளது. இங்கு ஸம்லிகிதம் என்னும் சொல் முதன்முறையாக எழுதுவது என்னும் பொருளில் நேரடியாக அமைந்துள்ளது. வேதங்களில் எழுதுமுறைக்கான நேரடியான சான்றாக இது அமைந்துள்ளது.

சிக்ஷை நூல்கள்

            சிக்ஷை நூல்கள் வேதத்தின் அங்கமாகக் கருதப்பெறுபவை. இவை வேதத்தை உச்சரிக்க வேண்டிய முறையைக் கூறுகின்றன. பாணினீய சிக்ஷையில் வரும் பின்வரும் மந்த்ரம் வேதத்தை உரைப்பவர்களுள் மட்டமான வேதபாடகனின் இலக்கணங்களைக் கூறுகிறது.

गीती शीघ्री शिरःकम्पी तथा लिखितपाठकः।

अनर्थश्चाल्पकण्ठश्च षडेते पाठकाधमाः।। 32

கீ³தீ ஸீ²க்⁴ரீ ஸி²ர​:கம்பீ ததா² லிகி²தபாட²க​:|

அனர்த²ஸ்²சால்பகண்ட²ஸ்²ச ஷடே³தே பாட²காத⁴மா​:|| 32

       யாஜ்ஞவல்க்ய சிக்ஷையிலும் இதே செய்யுள் யதாலிகித பாடகன் என்னும் சிறு பேதத்தோடு இடம்பெற்றுள்ளது. இங்கே அதமபாடகனுக்கான இலக்கணங்கள் பாடலாகப் பாடுபவன், வேகமாக ஓதுபவன், தலையை ஆட்டி ஓதுபவன், எழுதிவைத்துப் படிப்பவன், பொருள் புரியாமல் ஓதுபவன், மிகவும் மெல்லிய குரலில் கூறுபவன் ஆகிய இவ்வறுவறும் அதம பாடகர்கள் என்று சிக்ஷை கூறுகிறது.

            இங்கே எழுதிவைத்துப் படிப்பவன் என்று எதிர்மறைப் பொருளில் குறிப்பிட்டிருந்தாலும் எழுதும் முறைக்கு சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

            பாரஸ்கர க்ருஹ்ய ஸூத்ரத்திலும் ததா அதிபதே ப்ரலிகஸ்வ என்னும் வரி இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

படங்கள்  – இணையச்சுடுகை…

Please follow and like us:

2 thoughts on “பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வேத வேதாங்க சான்றுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *