காஞ்சிபுரத்திற்கே கவினழகாய் திகழும் கைலாயநாதர் கோயிலில் பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பெற்றுள்ளன. ஆயினும் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஒன்றில் பதிப்பிக்கப்பெறாத இரண்டு கல்வெட்டுக்கள் இன்னமும் அங்கே கண்சிமிட்டாமல் இல்லை.
கல்வெட்டு -1
இந்தக் கல்வெட்டு கருவறை நோக்கும்போது வலதுபுற மூலையில் அமைந்துள்ள தேவகுளிகையில் அமைந்துள்ளது. அந்த தேவகுளிகையின் உட்புற சுவரில் செதுக்கப்பெற்றுள்ளதால் இதை எவரும் கவனிக்கவில்லையென்று கருதுகிறேன். இந்தக் கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டைய பல்லவ க்ரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது. இது இக்கோயிலைக் கட்டிய ராஜஸிம்ஹனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டில் இரண்டு வரிகள் மட்டுமே உள்ளன. இதன் வரிகளாவன
வரி 1 अत्यन्तकामः अ
வரி 2 वनलान्त….
வரி 1 அத்யந்தகாம: அ
வரி 2 வனலாந்த….
கல்வெட்டின் முதல்வரி ராஜஸிம்ஹனின் விருதுப்பெயர்களின் ஒன்றைக் குறிப்பிடுகிறது. அதைத் தொடர்ந்து அகரம் மட்டும் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் வரி பொருளற்றுத் துண்டாக அமைந்துள்ளது.
கல்வெட்டு -2
மற்றொரு கல்வெட்டு நுழைவாயிலின் வலதுபுறம் அமைந்துள்ளது. நுழைவாயிலுக்கும் வெளியே ஆறு தேவகுளிகைகள் அமைந்துள்ளன. அவற்றுள் இரண்டாவது தேவகுளிகை நித்யவினீதேச்வரக்ருஹம் என்று பொறிப்புடன் கூடியது. மூன்றாவது தேவகுளிகையின் பட்டிகைப்பகுதியில் இந்கத் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டு தமிழில் அமைந்துள்ளது,.
வரி 1 த்து நின்றருளின பெருமானடிகள் எண்ணாழியும் வழுவாதி…
இந்தக் கல்வெட்டு துண்டுக் கல்வெட்டான போதிலும் சிறப்பான செய்தியைக் கொண்டுள்ளது. இந்தக் கல்வெட்டு நின்றருளின பெருமானடிகள் என்று துவங்குகிறது. பொதுவாக இந்த அடைமொழி திருமாலைக் குறிக்கவே பயன்படுத்தப்பெறும். இந்தக் கல்வெட்டைத்தாங்கும் பகுதி தனியாகப் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது இந்தக் கல்வெட்டு வேறேதேனும் திருமாலின் கோயிலிலிருந்து இங்கே பொருத்தப்பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது. எட்டு நாழி அளவுள்ள ஏதோ நிவந்தத்தைக் குறிக்கும் இந்தக் கல்வெட்டை முனைவர் ஸி. மீனாக்ஷி குறிப்பிட்ட போதிலும் இதன் வரியையோ அல்லது இதைப் பற்றிய விளக்கத்தையோ அவர் அளிக்கவில்லை.