கௌசிகீச்வரர் கோயில், காஞ்சிபுரம்

 1. கோயிலின் தற்போதைய பெயர் : கௌசிகீச்வரர், சொ(தொ)க்கீச்வரர்
 2. கல்வெட்டிலுள்ள பெயர் : தெற்கிருந்த நக்கர்
 3. கோயிலின் அமைவிடம் : நகரத்திற்கு நடுவில் காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு தென் மேற்கில்அமைந்துள்ளது.
 4. கோயிலின் காலம் : இந்தக் கோயிலில் அமைந்துள்ள பரகேஸரிவர்மனின் கல்வெட்டு பண்டைய அறிஞர்கள் உத்தமசோழனுடையதாகக் கணித்தனர். அதனையொட்டி கோயிலின் காலத்தை திரு. எஸ்.ஆர்.பாலஸுப்ரமண்யம் அவர்கள் முதலாம் பராந்தகனுடைய காலமாகவும் கணித்தார். ஆனால் பிறகு திரு.கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் அவர்கள் இந்தக் கோயில் சோழர்கட்டிடக்கலையின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்ததாகவும் பரகேஸரிவர்மன் முதலாம் ராஜேந்த்ரனாகவும் இருக்கவேண்டுமென்று கட்டிடக்கலையின் அடிப்படையில் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்தக் கோயிலின் காலத்தை பதினோராம் நூற்றாண்டின் முதற்காற்பகுதியாகத் தீர்மானிக்கலாம்.
 5. கோயிலின் அமைப்பு : இது மிகவும் எளிமையான ஏகதளவிமானம். ஆறுறுப்புக்களைக் கொண்ட ஷட்வர்க்கவிமானமான இது அதிஷ்டானம், பாதவர்க்கம், கபோதவர்க்கம், க்ரீவா, சிகரம், ஸ்தூபி என்னும் ஆறுபகுதிகளைக் கொண்டது.
 6. விமானத்தின் வகை : ப்ரஸ்தரம் வரையில் நாகரமாகவும் அதற்கு மேல் வேசரமாகவும் அமைந்துள்ளது. (இவ்வகை விமானம் வேசரம் என்று சிற்பநூல்களிலும் நாகர-வேசரம் என்று ஆகமநூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.)
கௌசிகீச்வரர் கோயில்

கௌசிகீச்வரர் கோயில்

 1. கட்டிடக்கலைச் சிறப்புக்கள் :

இந்தக் கோயில் சதுரவடிவமான கருவறையையும் அதன் முன் சிறிய அர்த்தமண்டபத்தையும் கொண்டது. அர்த்தமண்டபத்திற்கு முன்னிருந்த பகுதிகள் சேதமடைந்துள்ளன. முன்னே பகுதிகள் இருந்ததை அதிஷ்டானப்பகுதியும் கபோதபகுதியும் வெட்டுப்பட்டிருப்பதிலிருந்து ஊகிக்க முடிகிறது. கோஷ்டங்களில் அர்த்தமண்டபக் கோஷ்டத்தைத் தவிர மற்றைய கோஷ்டமூர்த்திகள் 2009-இல் நிறுவப்பெற்றதை அவற்றின் கீழிருக்கும் கற்பொறிப்புக்கள் கூறுகின்றன. வின்யாஸ ஸூத்ரத்தில் அமைந்திருக்கும் கருவறையை விட அர்த்தமண்டபம் அகலத்தில் குறைந்ததாகவுள்ளது. அதிஷ்டானம் பாதபந்தமாக அமைந்துள்ளது. அதிஷ்டானத்தின் கண்டப்பகுதியில் சிங்கமுகமான ப்ரணாளிகை அமைந்துள்ளது.

கோஷ்டங்களில் வழக்கமான பஞ்சகோஷ்டமூர்த்திகள் அமைந்திருத்தல் வேண்டும். கருவறையின் வலதுபுறக் கோஷ்டத்தின் இருமருங்கும் முனிவர்கள் செதுக்கப்பெற்றிருப்பதும் மேலே தோரணத்தின் நடுவிலும் க்ரீவாகோஷ்டத்திலும் தக்ஷிணாமூர்த்தியிருப்பதும் அந்தக் கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி இருந்திருத்தலைச் சுட்டுகிறது. அர்த்தமண்டபத்தின் இடதுபுறக் கோஷ்டத்தின் மேலுள்ள தோரணத்தின் காடப்பகுதியில் சிங்கம் அமைந்திருப்பது அந்தக் கோஷ்டம் துர்க்கைக்கானது என்பதைக் காட்டுகிறது. அதற்குப் பின்னுள்ள கோஷ்டத்தின் தோரணத்தில் அன்னம் அமைந்திருப்பதும் அதன் மேலே க்ரீவாகோஷ்டத்தில் நான்முகன் அமைந்திருத்தலையும் கொண்டு அது நான்முகனுக்கான கோஷ்டம் என்பதை உணரவியல்கிறது. பின்புற கோஷ்டத்தின் தோரணத்தின் நடுவில் பத்மம் அமைந்துள்ளது. அங்கு திருமாலின் வடிவம் அமைந்திருத்தல் வேண்டும் என்பதை ஒருவாறாகு ஊகிக்கவியல்கிறது.

தேவ கோஷ்டங்கள்

தேவ கோஷ்டங்கள்

தேவகோஷ்டங்கள் வேதிகையை வெட்டியபடி அமைக்கப்பெற்றுள்ளன. எல்லா தேவகோஷ்டங்களும் அழகிய தோரணங்களால் அலங்கரிக்கப்பெற்றுள்ளன. தேவகோஷ்டங்கள் மேலே ஒரு ப்ரஸ்தரத்தைப் பெற்றுள்ளன. அந்த கோஷ்டத்தின் நகுலபாதங்கள் ப்ரஹ்மகாந்தமாக குட்யஸ்தம்பங்களின் அகலத்தில் முக்கால் பங்கில் அமைக்கப்பெற்றுள்ளன. தேவகோஷ்டங்களின் ப்ரஸ்தரம் மூலையில் கோணபட்டங்களையும் இரு அல்பநாஸிகையையும் பெற்றுள்ளன. ப்ரஸ்தரத்தின் நாஸிகள் ஸிம்ஹ முகங்களைப் பெற்றுள்ளன. ப்ரஸ்தரத்தின் கொடுங்கையானது சந்த்ரமண்டலங்களைப் பெற்றுள்ளது. கபோதப்பகுதியின் நாஸிகையிலுள்ள நடுப்பகுதியானது பத்ம பதக்கத்தைப் பெற்றுள்ளது. முகப்பட்டிகள் கருக்குகளைக் கொண்டுள்ளன. ப்ரஸ்தரத்திற்கு மேலே ஒரு ஒரு ப்ரதிவரி முனைகளில் மகரங்களோடு அமைக்கப்பெற்றுள்ளது. அதற்கு மேலே ஒரு க்ரீவாபூஷணமும் வேதிகையும் அமைக்கப்பெற்றுள்ளது. அதற்கு மேல் தோரணம் பத்ரதோரணமாக அமைக்கப்பெற்றுள்ளது. அதன் அகலம் ப்ரதிவரிக்கு ஸமமாக அமைக்கப்பெற்றுள்ளது. தக்ஷிணாமூர்த்திக்கு மேலுள்ள தோரணத்தின் காடப்பகுதியில் தக்ஷிணாமூர்த்தி உத்குடிகாஸனத்தில் அமர்ந்துள்ளார். அவரின் மேலிரு கைகளும் தீவட்டியையும் ஜபமாலையும் கொள்ள கீழிரு கைகளும் அபயமும் டோலாவாகவும் அமைந்துள்ளன.

தக்ஷிணாமூர்த்தி கோஷ்டம்

தக்ஷிணாமூர்த்தி கோஷ்டம்

மற்றைய தேவகோஷ்டங்களும் தோரணப்பகுதியைத் தவிர ஒரே மாதிரியான அமைப்புடனேயே உள்ளன. கணபதிக்கான கோஷ்டத்தின் மேலுள்ள தோரணப் பகுதி தனித்தன்மை வாய்ந்தது. அதன் மையப்பகுதி மூன்றாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. இடப்பகுதியில் உமாலிங்கன மூர்த்தி அமைக்கப்பெற்றுள்ளார். அவருடைய மேலிரண்டு கைகள் தெளிவாக இல்லை. வலது கை அன்னையின் கொங்கையை அலைந்தவாறு அமைக்கப்பெற்றுள்ளது. அன்னை கரண்ட மகுடம் பூண்டு எந்தையின் மடியில் அமர்ந்துள்ளாள். காடத்தின் மையப்பிரிவில் ந்ருத்த கணபதி அமைக்கப்பெற்றுள்ளார். அவரருகே ஒரு பூதமும் அமைக்கப்பெற்றுள்ளது. வலப்பகுதியில் அன்னை மாமரத்தின் கீழே எந்தையைப் பூசிக்கும் காட்சி அமைக்கப்பெற்றுள்ளது. இந்தத் தோரணம் மகரதோரணமாக அமைந்து மேலே கீர்த்திமுகமும் அமைக்கப்பெற்றுள்ளது.

கணபதியின் மேலுள்ள தோரணம்

கணபதியின் மேலுள்ள தோரணம்

அதற்குக் கீழேயுள்ள கோஷ்டத்தில் இடம்பெற்றுள்ள கணபதி எழில் வாய்ந்தவராக உள்ளார். அவர் கரண்ட மகுடத்தை அணிந்துள்ளார். க்ரைவேயகம், உபக்ரைவேயகம் ஆகியவை அவர் கழுத்தை அலங்கரிக்கின்றன. அவருடைய நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவை அமைக்கப்பெற்றுள்ளன. அவருடைய துதிக்கை ஸமீபத்தில்தான் புதுப்பிக்கப்பெற்றுள்ளது. அவர் முப்புரிநூலும் உதரபந்தமும் பெற்றுள்ளார். அவர் பத்மபீடத்தில் லலிதாஸனத்தில் அமர்ந்துள்ளார். பத்மபீடத்திற்குக் கீழுள்ள பகுதியில் மூன்று பூதங்களும் அவரது வாஹனமான மூஞ்சூறும் செதுக்கப்பெற்றுள்ளன.

கணபதி கோஷ்டம்

கணபதி கோஷ்டம்

வழக்கமான பூதவரிக்குப் பதிலாக இடம்பெற்றுள்ள தாமரையெழுதகம் தனிச்சிறப்பு வாயந்தது. ப்ரஸ்தரத்திலுள்ள கபோதத்தின் கொடுங்கைப் பகுதியின் கீழே முழுவதும் சந்த்ரமண்டலங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இந்தக்கோயிலின் தனிச்சிறப்பே இதன் கபோதநாஸிகளின் காடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பலவகை உருவங்களேயாகும். சிவலிங்கத்தைப் பூஜிக்கும் அன்னை, குரங்கு, பாம்பு என்று பல்வேறு ஸ்தலபுராணங்களின் உருவகங்கள் இந்த காடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.  கபோதநாஸிகளின் முகப்பட்டி பாசிக்கருக்குகளையும் முனையில் சிங்கமுகத்தையும் பெற்றுள்ளன. முன்னுள்ள சில நாஸிகைகளின் காடங்கள் பத்ம பதக்கங்களைப் பெற்றுள்ளன.

DSC03410 DSC03411 DSC03413 DSC03414 DSC03418 DSC03427 DSC03428 DSC03429 DSC03430 DSC03431 DSC03432 DSC03446 DSC03447

ப்ரஸ்தரத்திற்கு மேலுள்ள வ்யாள வரி – பூமிதேசம் முனையில் மகரங்களைக் கொண்டுள்ளது. அந்த ப்ரதிகள் அந்தரி, ஆலிங்கம், வாஜனம், கம்பம் ஆகியவற்றின் தொகுதியின் மீது அமைக்கப்பெற்றுள்ளன.

பூமிதேசமும் மேலுள்ள வர்க்கங்கள்

பூமிதேசமும் மேலுள்ள வர்க்கங்கள்

அதற்கு மேலுள்ள ருத்ரச்சந்தமான க்ரீவா மிக அழகாகச் செதுக்கப்பெற்று க்ரீவாகோஷ்டங்களைப் பெற்றுள்ளது. க்ரீவா கோஷ்டங்களில், தக்ஷிணாமூர்த்தி, யோகநரஸிம்ஹர் மற்றும் நான்முகன் ஆகியோர் அமைக்கப்பெற்றுள்ளனர். இவர்களை அமைப்பதற்கான ஆதாரம் பூர்வகாரணாகமத்தில் அமைந்துள்ளது.

कुमारं पूर्वदिग्भागे दक्षिणामूर्तिकं यमे।

वारुणे तु नृसिंहं वा केशवं वापि कारयेत्।।

ब्रह्माणमुत्तरे देशे स्कन्धरे तु विशेषतः।। पूर्वकारणागमः 7.90,91

க்ரீவாகோஷ்டத்திலுள்ள தக்ஷிணாமூர்த்தி வீராஸனத்தில் அமர்ந்துள்ளார். அவருடைய நான்கு கரங்களில் மேலுள்ள கரங்கள் தீவட்டி, அக்ஷமாலையும்  கொள்ள கீழ்க்கரங்கள் சின்முத்ரையையும் சுவடியையும் கொண்டுள்ளன. அவர் கரோடிகையோடு கூடிய ஜடாமகுடத்தைக் கொண்டுள்ளார். அழகிய கழல்கள் அவர்தம் தாள்களை அலங்கரிக்கின்றன.

க்ரீவாகோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி

க்ரீவாகோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி

பின் கோஷ்டத்தில் அமைந்துள்ள யோகநரஸிம்ஹர் கரண்டமகுடம் அணிந்துள்ளார். அவர்தம் நான்கு கரங்களில் மேலிரண்டு கரங்கள் சங்கு சக்கரங்களைப் பெற்றுள்ளன. முன்னிரண்டு கரங்களும் முட்டியையொட்டிச் சார்த்தப்பெற்றுள்ளன. யோகபட்டம் முட்டிகளை இணைத்தவாறு அமைந்துள்ளது.

க்ரீவா கோஷ்டத்தில் யோக நரஸிம்ஹர்

க்ரீவா கோஷ்டத்தில் யோக நரஸிம்ஹர்

இடது க்ரீவா கோஷ்டத்தில் இடம்பிடித்துள்ள ப்ரஹ்மா நான்கு முகங்களோடும் நான்கு கரங்களோடும் காட்சியளிக்கிறார். மேலிரு கரங்களும் அக்ஷமாலையும் கமண்டலமும் கொள்ள கீழிரண்டு கைகளும் அபயமும் கடகமும் கொண்டுள்ளன. கழுத்தணிகளும் உபவீதமும், உதரபந்தமும் அலங்கரிக்கின்றன. ஆப்ரபதமான பட்டாடை கீழ்ப்பகுதியை அலங்கரிக்கிறது. கிரீட மகுடம் தலையை அலங்கரிக்கிறது.

க்ரீவா கோஷ்டத்தில் நான்முகன்

க்ரீவா கோஷ்டத்தில் நான்முகன்

முன்னுள்ள க்ரீவாகோஷ்டத்தைத் தவிர மற்றைய க்ரீவா கோஷ்டங்களின் இருபுறமும் நன்கு செதுக்கப்பெற்ற நந்தியின் உருவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. க்ரீவாகோஷ்டங்களின் நகுலபாதங்கள் ப்ரஹ்மகாந்தமாக அமைந்துள்ளன. நகுலபாதங்களின் அடிப்பகுதியில் சிறுவேதிகை அமைந்துள்ளது. க்ரீவாகோஷ்டத்தின் மேலுள்ள மஹாநாஸிகைகள் கொடிக்கருக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பெற்றுள்ளன. அவற்றின் முனையில் ஸிம்ஹ வக்த்ரம் அமைக்கப்பெற்றுள்ளது. எல்லா மஹாநாஸிகளின் காடப்பகுதியில் விமானத்தின் சிற்றுருவம் அமைக்கப்பெற்றுள்ளது. க்ரீவா பகுதிகள் அவற்றின் அகலத்தில் மூன்றிலொருபங்கு களத்தி கொண்டுள்ளன.

DSC03455

க்ரீவாபகுதியில் அமைந்துள்ள கர்ணகூடங்கள் சிறப்பு வாய்ந்தவை. கர்ணகூடங்கள் சதுர்வர்க்க வகையைச் சேர்ந்தவை. அவற்றின் ப்ரஸ்தரங்கள் அல்பநாஸிகளைப் பெற்றுள்ளன. அவற்றின் முனைகளை கோணபட்டங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றின் ஸ்தூபிப் பகுதி காமக்கிடைக்கவில்லை. இரண்டு கர்ணகூடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மற்றொரு சிதைந்த கர்ணகூடம் கீழே காணப்பெறுகிறது.

கர்ணகூடம்

கர்ணகூடம்

அதன் மேலமைந்த ஓஷ்டப்பகுதியின் கீழ் உத்தரம், வாஜனம் மற்றும் வலபி இடம்பெற்றுள்ளன. ருத்ரகாந்தமான சிகரத்தின் மேற்பகுதியில் பாலிகைஸ்தானம், மஹாபத்மம் மற்றும் ஊர்த்வ பட்டிகை ஆகியவை அமைக்கப்பெற்றுள்ளன.

ஓஷ்டப்பகுதி

ஓஷ்டப்பகுதி

எல்லா அமைப்புக்களுக்கும் மேலாக பத்மம்,கலம், குடம், பாலிகைநாளம் மற்றும் குட்மலங்களை உடைய ஸ்தூபியானது அமைக்கப்பெற்றிருக்கிறது.

அளவுகள்

            கருவறை 15 x 15 அடிகள் அளவுள்ளது. அர்த்தமண்டபம் 5 x 12 என்னும் அளவைக் கொண்டுள்ளது. அர்த்தமண்டபத்தின் அகலம் கருவறையின் அகலத்தில் முதலில் 9/10 பங்காகவும் பின்னர் 4/5 பங்காகவும் குறைக்கப்பெற்றுள்ளது. அர்த்தமண்டபத்தின் நீளம் கருவறை நீளத்தில் மூன்றில் ஒரு பங்காக அமைந்துள்ளது.

7.1 அதிஷ்டான வர்க்கம்

     உபானத்தின் மீது கம்பம், பத்மம் மற்றும் உபோபானம் ஆகியவை அமைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் அளவுகளாவன

            உபானம்       –        1½ அம்சங்கள்

          கம்பம்             –        ½ அம்சம்

          பத்மோபானம் –        2½ அம்சங்கள்

          உபோபானம்  –        ½ அம்சம்

            அதிஷ்டானம் பாதபந்த வகையைச் சார்ந்தது. இது ஜகதி, எண்பட்டை குமுதம், கம்பம், கலம், ஊர்த்வகம்பம், வாஜனம் மற்றும் உபரிகம்பம் ஆகியவற்றைக் கொண்டது. இவற்றின் அளவுகளாவன.

          ஜகதி            –        7 அம்சங்கள்

          குமுதம்                      –        7 அம்சங்கள்

          கம்பம்             –        1 அம்சம்

          கலம்             –        3 அம்சங்கள்

          ஊர்த்வகம்பம்-                     1 அம்சங்கள்

          வாஜனம்       –        3 அம்சங்கள்

          கம்பம்             –        1 அம்சம்

இந்த அளவுகள் பூர்வகாரணாகமத்தின் பாதபந்தவகைக்குக் கூறப்பட்ட அளவுகளோடு அப்படியே பொருந்தியுள்ளது.

பர்வதாம்ʼஸ²ம்ʼ ஜக³த்யுச்சமப்³த்⁴யம்ʼஸ²ம்ʼ குமுதோ³ன்னதம்|

வஸ்வஸ்²ரம்ʼ குமுத³ம்ʼ ஜ்ஞேயமேகாம்ʼஸே²னோர்த்⁴வபட்டிகா||

கந்த⁴ரந்து கு³ணாம்ʼஸே²ன வ்யோமாம்ʼஸே²னோர்த்⁴வபட்டிகா|

மஹாபட்டீ கு³ணாம்ʼஸே²ன ஏகம்ʼ ஸ்யாத்பாத³ப³ந்த⁴னம்||

பூர்வகாரணாக³ம​: 5.22-24

அதிஷ்டானம்

அதிஷ்டானம்

7.2 வேதிவர்க்கம்

            அதனையடுத்தமைந்த வேதிகையானது பின்வரும் அளவுகளோடு அமைந்துள்ளது.

          வேதிகா கண்டம்       –        2 அம்சங்கள்

          கம்பம்           –        1 அம்சம்

          பத்மம்                    –        1 அம்சம்

          வாஜனம்       –        1 அம்சம்

          ஊர்த்வகம்பம் –        ½ அம்சம்

 

7.3. பாதவர்க்கம்

            பாதவர்க்கம் ப்ரஹ்மகாந்த வகையைச் சேர்ந்த குட்யஸ்தம்பங்களைக் கொண்டது. மாலாஸ்தானம் வரையிலான பகுதி 15 அம்சங்களைக் கொண்டது. அதன் மேலமைந்த அளவுகளாவன

          மாலை          –        4½ அம்சங்கள்

          கம்பம்           –        ½ அம்சம்

          அப்ஜம்         –        1 அம்சம்

          ஹீரகம்         –        ½ அம்சம்

          அப்ஜம்         –        1 அம்சம்

          கம்பம்           –        1 அம்சம்

லசுனம்                   –        4½ அம்சங்கள்

          கண்டம்         –        1 அம்சம்

தாடி             –        3 அம்சங்கள்

பத்மம்           –        1 அம்சம்

          மண்டி           –        2 அம்சங்கள்

பலகம்           –        2 அம்சங்கள்

வீரகண்டம்    –        4 அம்சங்கள்

          போதிகை      –        4 அம்சங்கள்

          உத்தரம்        –        5 அம்சங்கள்

மாலாஸ்தானம் முக்தாதாமத்தினாலும் அதோமுகபத்மத்தினாலும் அலங்கரிக்கப்பெற்றுள்ளது. லசுனப்பகுதி பூரிமத்தால் அலங்கரிக்கப்பெற்றுள்ளது. பாலி பத்மபாலி வகையைச் சேர்ந்தது. போதிகை பத்து-பதினோராம் நூற்றாண்டில் பொதுவான வெட்டுப்போதிகையாக அமைந்துள்ளது.

குட்யஸ்தம்பம்

குட்யஸ்தம்பம்

7.4. ப்ரஸ்தர வர்க்கம்

            அதற்கு மேலமைந்த ப்ரஸ்தர வர்க்கத்தின் அளவுகளாவன

          உத்தரம்                  –        3½ அம்சங்கள்

          வாஜனம்                 –        1 அம்சம்

          தாமரையெழுதகம்     –        3 அம்சங்கள்

          அந்தரி                    –        ½ அம்சம்

          ஊர்த்வக்ஷேபணகம் –        1 அம்சம்

            அதற்கு மேலே ஏறுவதற்கு அனுமதியற்ற காரணத்தால் மேலுள்ள அங்கங்களின் அளவீடுகளை அறியமுடியவில்லை.

            பூர்வகாரணாகமத்தில் ஏகதளவிமானத்திற்குக் கூறப்பட்ட அளவீடுகள் இந்தக் கோயிலின் அளவீடுகளோடு பொருந்தி வருகின்றன.

            க்ரீவத்தில் கர்ணகூடங்களோடு கூடிய இத்தகைய ஏகதளவிமானத்திற்கு அஜிதாகமத்தில் ஸுவிசாலம் என்னும் பெயரையும் காச்யபம், காமிகாகமம், தீப்தாகமம், மயமதம் ஆகியவற்றில் ஸ்ரீபோகம் எனவும் குறிப்பிடப்பெற்றுள்ளது.

 1. கல்வெட்டு

            இந்தக் கோயிலில் ஒரே ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. அந்தக் கல்வெட்டு அதிஷ்டானத்தின் பட்டிகைப் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கல்வெட்டின் வரிகளாவன

          வரி 1: ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பற்மற்கு யாண்டு பதினைஞ்சாவது காஞ்சிபுரமானகரத்தோம் இந்நகரத்தில் கோனேரியார் எல்லைக்குத் தெற்கு இன்நிலம் உடையார் முத்தவாள் பெற்ற கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் இந்நகரத்து கடும்பிடுகு மேற்காப்பில் கரிகாலப்பிள்ளையாற்கு திருவமுதுக்கு மாநகரத்தோம் விற்றுக்குடுக்கிற நிலமாவது வடபாற்கெல்லை

          வரி 2:            கோநேரியார் நிலத்துக்குத் தெற்கும் கீழ்பாற்கெல்லை பெருவழிக்கு மேற்கு தென்பார்கெல்லை திருவூரகத்தாழ்வாழ் நிலத்துக்கு வடக்கும் மேற்பார்க்கெல்லை குழிக்குக் கிழக்கும் இன்னாற்பாற்கெல்லை உள் அகப்பட்ட நிலம் உடையார் முத்தவாள் பெற்ற கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் பக்கல் பெறுவிலைக்….

          வரி 3:            கப்பட்ட நிலம் முன்னூறும் விற்று விலையாவணஞ்செய்து செம்பிலும் கல்லிலும் வெட்டிக்கொள்வதாகவும் செய்து குடுத்தோம் கடும்பிடுகு மேல்காப்பில் தெற்க்கிருந்த நக்கர் கோயிலில் கரிகால சோழப்பிள்ளையார்க்கு ஆச்சன் சேனாச்சனேன் தெர்க்கிருந்த நக்கர்க்கு வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்குமிக்கோயில் காணியுடைய பாதபதி எங்குச்சோழந்தரணேந்திரபட்டனும் இவந்தம்பி திருவேகம்

          வரி 4:            பட்டனும் கைக்கொண்ட பழங்காசு ௩ மூன்றுங்கைக்கொண்டோம் இவை தரணேந்த்ர பட்டஸ்ய

          வரி 5:             சிலாலேகை பண்ணிநேந் திருவேகம்ப பட்டஸ்ய.

இந்தக் கல்வெட்டு காஞ்சி மாநகரத்தார் ஆச்சன் ஸேனாச்சன் என்பானுக்கு முன்னூறு குழி நிலத்தை விற்றமையையும் மூத்தவாள் பெற்ற கைக்கோளரில் உறுப்பினரான அவர் அதைப் பெற்றுக்கொண்டு மேல்காப்பிலிருந்த தெற்கிருந்த நக்கர் கோயிலில் வீற்றிருக்கும் கரிகாலச்சோழப்பிள்ளையாருக்கு திருவமுது செய்ய இசைந்ததையும் குறிப்பிடுகிறது. அந்நிலத்தின் எல்லைகளாவன

வடவெல்லை  :               கோனேரியார் எல்லைக்கு தெற்கு

கீழெல்லை      :               பெருவழிக்கு மேற்கு

தென்னெல்லை:             திருவூரகத்தார் நிலத்திற்கு வடக்கு

மேலெல்லை    :               குழி நிலத்திற்குக் கிழக்கு

மேற்கண்ட எல்லைக்குட்பட்ட நிலம் ஆச்சன் ஸேனாச்சனுக்கு வழங்கப்பெற்றது. அதனைப் பெற்றவரே தெற்கிருந்த நக்கருக்கு சந்தி விளக்கெரிக்க மூன்று பழங்காசுகளையும் வழங்கியுள்ளார். அந்தக் கோயிலின் அர்ச்சகர்களான பாதபதியாகிய சோழன் தரணேந்த்ர பட்டன் மற்றும் அவருடைய உடன்பிறந்தானான திருவேகம்ப பட்டன் ஆகியோர் காசுகளைப் பெற்று விளக்கெரிக்க இசைந்தனர். இதனைக் கல்லிலும் செம்பிலும் வெட்ட அனுமதி வழங்கப்பெற்றது. திருவேகம்ப பட்டன் இந்த கல்வெட்டை பொறிப்பித்தான்.

இதில் குறிப்பிடப்பெற்றிருக்கும் கோனேரியார் நிலம் தற்போதுள்ள கோனேரிகுப்பத்தோடு ஒப்பிடத்தக்கது.

இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி பத்தொன்பதில் 365 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றது.

கல்வெட்டு

கல்வெட்டு

 1. புராணக்கதைகள்

            ஒருமுறை பார்வதி எந்தையின் இருகண்களையும் விளையாட்டாக மூடினாள். அதனால் எல்லாவுலகங்களும் இருண்டன. எந்தை அவளைப் பூமிக்குச் செல்லும்படி சாபமிட்டார். அந்தச் சாபத்தினால் அவளுடைய உடல் கருநிறமாக மாறியது. அந்தக் கருநிற வடிவம் உடலிலிருந்து பிரிந்து சென்றது. அந்த வடிவத்திற்கு கௌசிகீ என்று பெயர். அவளால் பூஜிக்கப்பெற்றதால் எந்தைக்கு ஈண்டு கௌசிகீச்வரர் என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தப் புராணச்செய்தி காஞ்சிப்புராணத்தில் காணக்கிடைக்கிறது.

            காஞ்சிப்புராணம்

சிவாலய சருக்கம்

 1. உமைகவுரி யாகியநாட் டிருமேனித் திமிரமதோ ருருவ மாக

            வமர் தருமூ விலைச்சூலி புரி தொக்கீசம் அப்பால் ஞால

Please follow and like us:

3 thoughts on “கௌசிகீச்வரர் கோயில், காஞ்சிபுரம்

 1. அண்ணா, மிகவும் அருமை அண்ணா!! கோயில் கட்டடக்கலை கூறும் கட்டுரைக்கு இலக்கணமாய் உள்ளது உங்களின் கட்டுரை!!

  – சுந்தரேசன்

 2. மிகவும் அருமை அண்ணா!! கோயில் கட்டடக்கலை கூறும் கட்டுரைக்கு இலக்கணமாய் உள்ளது உங்களின் கட்டுரை!!

  – சுந்தரேசன்

 3. மிக அருமையான கட்டுரை. கோவில் கட்டடக்கலை பற்றி சிறிதும் அறியாத என்னை போன்றோருக்கு இது ஒரு புதையல்/ பொக்கிஷம்! பகிர்வுக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *