காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் இரு புதிய வடமொழிக்கல்வெட்டுக்கள்

காஞ்சியின் முழுமுதல் தெய்வமான அன்னை நகரின் நடுநாயகமாக வீற்றிருக்கிறாள். இங்கு அன்னைக்கு காமாக்ஷி என்றும் அவள் வீற்றிருக்குமிடம் காமகோஷ்டம் – தமிழில் காமகோட்டம் என்றும் வழங்கப்பெறுகிறது. இங்கு அமைந்துள்ள தர்மசாஸ்தாவின் ஸன்னிதியும் கரிகாலசோழனோடு தொடர்புடைய பெருமையுடையது. பொயு ஒன்பதாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்திற்கு எழுதப்பெற்ற உரையான அடியார்க்கு நல்லார் உரை இத்தகையதோர் பெருமையைப் பின்வரும் செய்யுளால் குறிப்பிடுகிறது.

கச்சி வளைக்கைச்சி காமகோட்டங்காவல்

மெச்சியினிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு

கம்ப களிற்றான் கரிகாற்பெருவளத்தான்

செம்பொன் கிரிதிரித்த செண்டு.

பெருயானை வலி படைத்த கரிகாற்சோழன் காஞ்சியில் வளைதிகழும் கைகள் கொண்டவள் இருக்கும் காமகோட்டத்தில் காவலிருக்கும் சாஸ்தாவின் கைச்செண்டைக் கைக்கொண்டு பொன்மலையான மேருவைக் கலங்கடித்தான் என்பது இதன் பொருள்.

இந்தச் செய்யுளே கோயிலின் தொன்மையைச் சுட்ட பல அறிஞர்களாலும் மேற்கோளாகக் காட்டப்பெறுகிறது. இந்தச் செய்யுள் சாஸ்தாவின் ஸன்னிதியில் அதிஷ்டானத்தின் கீழே 15-ஆம் நூற்றாண்டு எழுத்துக்களால் எழுதப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஸன்னிதியில் மேலும் இரு வடமொழிக்கல்வெட்டுக்களும் ஒரு தமிழ் கல்வெட்டும் அமைந்துள்ளன. இந்த மூன்று கல்வெட்டுக்களும் தொல்லியல் துறையின் அறிக்கைகளிலோ அல்லது வேறு அறிஞர்களாலோ குறிப்பிடப்படவில்லை. இரு கல்வெட்டுக்களும் 13-ஆம் நூற்றாண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ளன.

முதல் கல்வெட்டு

            முதல் கல்வெட்டு சாஸ்தா ஸன்னிதியின் சுவரில் எழுதப்பெற்றுள்ளது. இதன் வரிகளாவன

காமாக்ஷி அம்மன் கோயிலில் வடமொழிக்கல்வெட்டு.

காமாக்ஷி அம்மன் கோயிலில் வடமொழிக்கல்வெட்டு.

வரி 1 :        स्वस्तिश्रीकामकोष्ठे शिखरापता

வரி 2 :         ग्रमवासममहाशास्तुरीशसूनोः। का

வரி 3 :         ञ्चीपुरग्राहकपाण्ड्यदेवः काञ्चीपुरीमण्डनमात

வரி 4 :         तान।

வரி 1 : ஸ்வஸ்திஸ்ரீகாமகோஷ்டே² ஸி²க²ராபதா

வரி 2 : க்³ரமவாஸமமஹாஸா²ஸ்துரீஸ²ஸூனோ​:| கா

வரி 3 : ஞ்சீபுரக்³ராஹகபாண்ட்³யதே³வ​: காஞ்சீபுரீமண்ட³னமாத

வரி 4 : தான|

இந்தக் கல்வெட்டில் அரசனின் பெயர் காஞ்சீபுர-க்ராஹகன் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. அது சடையவர்மன் ஸுந்தரபாண்ட்யனாகும். இந்த வடமொழிப்பகுதியின் பொருள். காஞ்சீபுரத்தைக் கைக்கொண்ட பாண்ட்ய தேவன் ஈசனின் மகனான சாஸ்தாவுக்கு காஞ்சீபுரத்திற்கே அணியானதைப் போன்றதொரு திருமுன்பை எடுப்பித்தான்.

            இதிலிருந்து ஸுந்தரபாண்ட்யன் சாஸ்தாவுக்கு திருமுன்பு எடுப்பித்த செய்தி தெளிவாகிறது.

கல்வெட்டு 2

இந்தக் கல்வெட்டு முதற்கல்வெட்டின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. இதன் வரிகள்

இரண்டாம் வடமொழிக்கல்வெட்டு.

இரண்டாம் வடமொழிக்கல்வெட்டு.

வரி 1 :         आकाशविधिमतिलंघयत्। भश्शृङ्गञ्च यैश्शेखरित

வரி 2 :         ..अक(अर्क)बिम्बम्। काञ्चीपुरग्राहकपाण्ड्यदेवश्शास्तु

வரி 3 :         गृहं शाश्वतमेव चक्रे।

வரி 1 : ஆகாஸ²விதி⁴மதிலங்க⁴யத்| ப⁴ஸ்²ஸ்²ருʼங்க³ஞ்ச யைஸ்²ஸே²க²ரித

வரி 2 : ..அக(அர்க)பி³ம்ப³ம்| காஞ்சீபுரக்³ராஹகபாண்ட்³யதே³வஸ்²ஸா²ஸ்து

வரி 3 : க்³ருʼஹம்ʼ ஸா²ஸ்²வதமேவ சக்ரே|

இந்தக் கல்வெட்டும் ஸுந்தரபாண்ட்யன் சாஸ்தாவுக்கு நிலையான திருமுன்பு எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறது. அந்த ஆலயம் ஆகாயத்தையும் தாண்டியதாகவும் கதிரவனை உச்சியணியாகக் கொண்டதாகவும் திகழ்வதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதன் மூலம் விண்முட்டுமளவிற்கு ஸுந்தரபாண்ட்யன் சாஸ்தாவிற்கு திருக்கோயில் எடுப்பித்தது தெளிவாகிறது. ஆனால் இன்று கூரைப்பகுதியோ அல்லது பெரும் கற்றளியோ சாஸ்தாவின் ஸன்னிதியில் காணப்பெறவில்லை.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *