பாண்டியர் தம் அறிவார்ந்த அலுவலர்கள் இருவர்

அறிவு சார் வேலைகளும் அலுவலக வேலைகளும் மிகவும் அரிதாகவே ஒருவரிடமே மலிந்து நிற்கும். அத்தகையதோர் அரிய ஒருங்கிணைப்பு இடைக்கால வரலாற்றில் கல்வெட்டுக்கள் வாயிலாக காணக்கிடைக்கிறது. மிகப் பண்டைய உலகத்து அரசர் பரம்பரைகளுள் ஒன்றான பாண்டியர்தம் அவையில் அத்தகையதோர் ஒருங்கிணைப்பு இருந்ததை அறிய முடிகிறது. அத்தகைய இருவரைப் பற்றி இப்போது பார்ப்போம்

மாறன் காரி

            இவன் பராந்தகன் நெடுஞ்சடையனான முதலாம் வரகுணனின் அவைக்களத்து அமைச்சன். இவனது அலுவலகப்பெயர் மூவேந்த மங்கலப்பேரரையன் என்பதாகும். இவன் கரவிந்தபுரம் (களக்குடி) என்னும் ஊரைச்சேர்ந்தவன். இவனுடைய இளவல் மாறன் எயினன் என்பவனாவான். அவன் பாண்டிமங்கல விசையரையன் என்னும் பட்டமுடைத்தவன். இருவரும் மாறன் என்பவனுடைய மகன்களாவர். மூத்தோன் மறைந்தகாலை இளையோன் அமைச்சுப்பணியேற்றனன்.

மூத்தோனான மாறன்காரியே வேள்விக்குடிச்செப்பேட்டில் ஆணத்தியாகக் குறிப்பிடப்பெற்றவன். அந்தச் செப்பேடு மாறன் காரியை மதுர கவியென்றும் சாஸ்த்ரங்களை அறிந்தவன் என்றும் குறிப்பிடுகிறது. ஆனைமலையில் அமைந்த கல்வெட்டும் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டின் தமிழ்ப்பகுதி அவனெடுப்பித்த திருமாலுக்கான கற்றளியில் அவன் மறைந்து பட்டபின்னர் அவனிளவல் முகமண்டபம் எடுப்பித்ததையும் குறியாநிற்கிறது. அந்தக் கல்வெட்டின் வடமொழிப்பகுதியாவது.

வரி 1 :          करवन्दपुरनिवासी श्रीमान्वैद्यःशिला

வரி 2 :          गृहं विष्णोः। अकृत कृती मधुरकविर्म्म

வரி 3 :          धुरतरो मारसूनुरिदम्। (1) मंत्री स ए

வரி 4 :          व मतिमान्पाण्ड्यस्य परान्तकाभिधान

வரி 5 :          स्य। अमितर्द्धिमग्रजेभ्यः प्रादादिम

வரி 6 :          ममग्रहारमपि।।(2) कलेः सहस्रत्रि

வரி 7 :          तयेब्दगोचरे गतेष्टशत्यामपि सैकसप्ततौ। कृतप्र

வரி 8 :          तिष्ठो भगवानभूत्क्रमादिहै

வரி 9 :          षः पौष्णेहनि मासि कार्त्तिके।

வரி 1 : கரவந்த³புரனிவாஸீ ஸ்ரீமான்வைத்³ய​:ஸி²லா

வரி 2 : க்³ருʼஹம்ʼ விஷ்ணோ​:| அக்ருʼத க்ருʼதீ மது⁴ரகவிர்ம்ம

வரி 3 : து⁴ரதரோ மாரஸூனுரித³ம்| (1) மந்த்ரீ ஸ ஏ

வரி 4 : வ மதிமான்பாண்ட்³யஸ்ய பராந்தகாபி⁴தா⁴ன

வரி 5 : ஸ்ய| அமிதர்த்³தி⁴மக்³ரஜேப்⁴ய​: ப்ராதா³தி³ம

வரி 6 : மமக்³ரஹாரமபி|| (2) கலே​: ஸஹஸ்ரத்ரி

வரி 7 : தயேப்³த³கோ³சரே க³தேஷ்டஸ²த்யாமபி ஸைகஸப்ததௌ| க்ருʼதப்ர

வரி 8 : திஷ்டோ² ப⁴க³வானபூ⁴த்க்ரமாதி³ஹை

வரி 9 : ஷ​: பௌஷ்ணேஹனி மாஸி கார்த்திகே|

இந்தக் கல்வெட்டின் மிகவும் இன்றியமையாத தன்மை இது கலியுகத்தைக் குறிப்பிடுவதால் அமைகிறது. இந்தக் கல்வெட்டு திருமாலுக்கான கற்றளி கலியுகம் 3871 கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை எடுப்பிக்கப்பெற்றதாகக் குறிப்பிடுகிறது. இதற்கான பொருத்தமான தேதிகளாவன

  1. பொயு 770, அக்டோபர் 28
  2. பொயு 770, நவம்பர் 4
  3. பொயு 770, நவம்பர் 11
  4. பொயு 770, நவம்பர் 18

ஆகியனவாம். இந்தக் கல்வெட்டு மதுரகவியும் பராந்தகன் என்னும் பாண்டியமன்னனின் அமைச்சருமான மாறன் காரி திருமாலுக்கான கற்றளியும் எடுப்பித்து அக்ரஹாரத்தையும் அந்தணர்களுக்கு அளிப்பித்ததைக் குறிப்பிடுகிறது. வேள்விக்குடி செப்பேடு மாறன் காரியைப் பின்வருமாறு வருணிக்கிறது.

आसीत् मङ्गलराजो मधुरतरः शास्त्रवित्कविर्व्वाग्मी।

आज्ञप्तिरस्य वैद्यः करवन्दपुराधिवास्तव्यः।। 18

இதன் பொருளாவது – இந்தச் செப்பேட்டின் ஆணத்தி, மதுரகவியும் நல்ல சொல்வல்லானும், சாஸ்த்ரங்கள் அறிந்தவனும், கரவிந்தபுரத்தில் வசிப்பவனும் வைத்தியருமான மங்கலராஜன் என்பவனாவான்.

இதில் குறிப்பிட்ட கரவிந்தபுரம் என்பது திருநெல்வேலியிலுள்ள உக்கிரன் கோட்டையாகும்.

தென்னவன் தமிழ்வேள்

            இந்த அலுவலன் சோழன்றலைகொண்ட வீரபாண்டியனின் (பொயு 939-959) காலத்தைச் சேர்ந்தவன். அவ்வரசன் முதலாம் பராந்தகனில் துவங்கி இரண்டாம் பராந்தகன் காலம் வரையில் இருந்தவன். அவன் ஆதித்ய கரிகாலனால் கொல்லப்பட்டவன். அவனுடைய ஒரு அலவலன் கீழ்மாத்தூர் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றுள்ளான். அந்தக் கல்வெட்டைக் காண்போம்.

வரி 1:  தண்டமிழொடாரியநூல் வ

வரி 2: வல்ல தமிழ் வேள் வண்டமருஞ்சோலை சூழ் மாத்தூரில் சண்டபடி என்றுங் குன்றாமைய் பார்த்தியற்றுமா….ராடி என்றும் பூம்போதவற்கு. பூமிசை மடந்தையும் புனைதமிழ்ப் புல… நாமிசை

வரி 3: மடந்தையும் நன்கினிதிருக்க மார்வு முகவு மற்றவர்க்களித்த தாள்கெழு தடந்தோட் சதுராசாரன் மைத்தன் இத்தோ… வர்க்குங் கச்சி மூதூர் கிழவோர் படுவண் கீர்த்தி மரபுளான் வாடிக் கூடி … முதல் வந்…

வரி 4:    த கோளரி மலர்த் தென்னர் கோமான் கன்னி நன்னாட்டு புளக வாசற் போரரும் புரிசை கனக மாளிகைக் களந்…. மலன் இறைவரை மகளிரேற்றிய விளக்கமறுரை கடற் பக்கத்தாரிருள் கடியும் பு…றை .. யூருடை

வரி 5:  ய பெருளான் மறை பொருட்டரிசனமாறும் தமிழ்கள் மூன்றும் வரிசையிலமைந்த வடநூல் வகையு நீதி நூலையு மேதகு புராணமும் பாதஞ்சல முதற் பனுவற் பயன்களும் மெய்ம்மையுணர்ந்..று வீரபாண்…

            இந்தக் கல்வெட்டு தமிழ்ச் செய்யுளாக அமைந்துள்ளது. ஆனால் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்தக் கல்வெட்டில் வீரபாண்ட்யனின் அலுவலன் தமிழ்வேள் என்று குறிப்பிடப்பெற்றுள்ளான். வீரபாண்ட்யனின் அம்பாஸமுத்ரம் கல்வெட்டைக் கொண்டு இவனுடைய முழுப்பெயர் தென்னவன் தமிழ்வேள் என்று உய்த்துணரவியல்கிறது.

            கல்வெட்டின் துவக்கமே அவன் வடமொழி தென்மொழியிரண்டிலும் வல்லான் என்று குறிப்பிடுகிறது. – தண்டமிழோடாரியம் வல்லான். அவனுடைய. முன்னோர்கள் கச்சிமூதூரைச் (காஞ்சீபுரத்தை) சேர்ந்தவர்கள். அவன் திருமகளாலும் கலைமகளாலும் தழுவப்பெற்றவன். அவன் மாத்தூருறையும் இறைவனிடம் அன்புபூண்டவன். அவன் மறையிலும், ஆறு தரிசனங்களிலும் (ந்யாயம், வைசேஷிகம், ஸாங்க்யம், யோகம், மீமாம்ஸை, வேதாந்தம்), மூன்று தமிழிலும், வடமொழி பனுவல்கள் பலவற்றிலும், புராணங்களிலும் பதஞ்ஜலியார் செய்த வடமொழியிலக்கணப் பேருரையிலும் வல்லவன்.

            இவ்வாறு குறிப்பிட்டதனால் அவன் இருமொழி வல்லான் என்பது தெளிவாகிறதன்றோ.

            இவ்விதம் திருந்லெவேலியிலிருந்து ஒருவரும், காஞ்சீபுரத்திலிருந்து ஒருவருமாக இரு அறிவுசெறிந்த அலுவலர்களைக் காணமுடிகிறது.

            ஆனால் கேள்வி என்னவென்றால் நான் திருநெல்வேலியில் பிறந்து காஞ்சியில்தான் வாழ்கிறேன். எனக்கு ஏன் அறிவேயில்லை……

Please follow and like us:

One thought on “பாண்டியர் தம் அறிவார்ந்த அலுவலர்கள் இருவர்

  1. அறிவாளிகளால்தான் அறிவாளிகளை இனம் காண முடியும்;
    பாம்பின்கால் பாம்பறியும்

    தேவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *