பண்பட்ட மனத்திலெழும் பக்தியெனுமுணர்வு உறுதிபடுங்கால் அது மற்றைய உணர்வுகளைக் காட்டிலும் மேலோங்கி நிற்பது கண்கூடு. அத்தகைய பண்பட்ட பக்தி வெறுப்பு, சினம், பகை போன்ற உணர்வுகளால் உள்ளடங்காது உயர்ந்து நிற்கும். வரலாற்று காலத்திலும் பரம்பரைப் பகையைக் காட்டிலும் பக்தியே பெருஞ்செல்வமாகப் போற்றப்பெற்றுள்ளது. அக்காலக் கல்வெட்டுக்களை நோக்குங்கால் இந்தச் செய்தி வெள்ளிடைமலையாகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேந்திபுரத்தில் முதலாம் பராந்தகன் காலத்துக் கல்வெட்டு இந்தச் செய்தியை ஐயந்திரிபற தெளிவாக்குகிறது. இந்தக் கல்வெட்டு தெய்வநாயகப் பெருமாள் கோயிலிலுள்ள பிராகாரத்தின் தூணில் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 32-இல் 37-ஆம் எண்ணாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இதன் வரிகளைக் காண்போமா…
வரி 1 : ஸ்வஸ்திஸ்ரீ
வரி 2 : ஸ்ரீ மதி
வரி 3 : ரை கொ
வரி 4 : ண்ட
வரி 5 : கோப்ப
வரி 6 : ரகேசரி[ப]
வரி 7 : ன்மற்கு யா
வரி 8 : ண்டு முப்பத்
வரி 9 : தொன்றாவது
வரி 10 : திருவேந்தி
வரி 11 : ர புரத்து தே
வரி 12 : வர்க்கு பாண்
வரி 13 : டியனார் இரா
வரி 14 : ச்சிங்க பெருமா
வரி 15 : னார் மகளார் வா
வரி 16 : னவன் மாதேவி
வரி 17 : யார் சந்திராதி
வரி 18 : த்தவல்….
வரி 19 : எரிப்பதாக வை
வரி 20 : த்த நொந்தா வி
வரி 21 : ளக்கு ஒன்று
வரி 22 : க்கு வைத்த ஆ
வரி 23 : டு தொண்ணூ
வரி 24 : ற்றைய்ந்து இவ்
வரி 25 : விளக்கு,,,,
இந்தக் கல்வெட்டு பொயு 938-ஐச் சேர்ந்தது. இது பொயு 907 இல் அரசுகட்டிலேறிய முதலாம் பராந்தகனின் 31-ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பெற்றது, இந்தக் கல்வெட்டு திருவேந்திபுரதேவருக்கு நொந்தா விளக்கெரிப்பதற்காக தொண்ணூற்றைந்து ஆடுகள் தானமாக வழங்கப்பெற்றதைக் குறிப்பிடுகிறது. இந்தத் தானத்தை வழங்கியவர் பாண்டியனார் இராசசிங்க பெருமானாரின் மகளார் வானவன் மாதேவியார் ஆவார். இதில் குறிப்பிடப்பெற்ற பாண்டிய மன்னன் பொயு 900 முதல் 920 வரை அரசுகோலோச்சிய இரண்டாம் ராஜஸிம்ஹ பாண்டியனாவான். இந்தப் பாண்டியனைத்தான் பராந்தக சோழன் பன்முறைத் தோற்கடித்து இலங்கைக்கும் பிறகு கேரளத்திற்கும் உயிருக்காகத் துரத்தியவன்.
பரம்பரை பகையாளியான சோழர்களின் ஆட்சிப்பரப்பிலிருந்த கோயிலுக்கு அவர்தம் எதிரியின் மகள் தானம் அளித்திருப்பது வியத்தகு செய்தியல்லவா. ஆழ்ந்த பக்தியல்லவா பரம்பரை வைரியின் மகளை பகையாளியின் நாட்டுக் கோயிலுக்குத் தானமளிக்க வைத்ததும் அதை வைரி நாட்டினர் ஏற்க வைத்ததும் அல்லவா.
பக்தி உயிர்நேயத்தை மிகுவிப்பது என்பதுண்மை.மேலும் சேர,சோழ,பாண்டியர்கள் பெண்கொடுத்து பெண்ணெடுத்தவர்கள் என்பதும் உண்மை.அரசியல் மனிதர்களை என்னபாடுபடுத்துகிறது?