மொஹம்மது என்னும் பெயரின் வடமொழியாக்கம்

     ஐரோப்பிய மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்தவர்களை யவனர்கள் என்றழைக்கும் வழக்கம் பண்டைய தமிழ் மற்றும் வடமொழி நூல்களில் காணப்பெறுவது நாமனைவரும் அறிந்ததே. காளிதாஸர் பெர்ஷியர்களை பாரசீகர்கள் என்று வழங்குவது குறிப்பிடத்தக்கது. அவரியற்றிய ரகுவம்ச மஹாகாவ்யத்தில் ரகுவின் திக்விஜயத்தை வர்ணிக்கும் காளிதாஸன் பின்வரும் குறிப்பை வழங்குகிறார்.

पारशीकांस्ततो जेतुं प्रतस्थे स्थलवर्त्मना।(Raghuvaṃśa 4.59)

பாரஸீ²காம்ʼஸ்ததோ ஜேதும்ʼ ப்ரதஸ்தே² ஸ்த²லவர்த்மனா|

     இடைக்கால வரலாற்றில் அரபிய நாடுகளுக்கும் பாரதத்திற்கும் மிகத் தெளிவான தொடர்பு இருந்து வந்ததை அறியமுடிகிறது. ராஷ்ட்ரகூடர்கள் அரபியர்களைத் தமது ஆளுநர்களாக வடகொங்காணத்திலுள்ள ஸம்யான மண்டலத்தில் நியமித்த செய்தியும் கிடைக்கிறது. நித்யவர்ஷனான மூன்றாம் இந்த்ரனின் (பொயு 914-928) சிஞ்சனிச் செப்பேடு இந்தச் செய்தியைத் தருகிறது. இந்தச் செப்பேட்டின் காலம் பொயு 926 ஆம் வருடம் ஏப்ரல் 17 ஆம் தேதி எனக் கணக்கிடப்பெற்றிருக்கிறது. இந்தச் செப்பேடு எபிக்ராஃபியா இண்டிகாவின் முப்பத்திரண்டாம் தொகுதியில் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது. இந்தச் செப்பேட்டின் பின்வரும் செய்யுட்கள் ஸம்யானமண்டலத்தின் ஆளுநரைப் பற்றிய தகவலைத் தருகின்றன.

कृष्णराजदयावाप्तकृत्स्नसंयानमण्डलः।

आसीन्मधुमतिः श्रीमान् नृपतिस्ताजिकान्वये।।17

विजित्य करदण्डेन सर्व्ववेलाकुलाधिपान्।

न्यवीविशत्समं कीर्त्या सर्वत्र करणानि यः।।18

रुच्यारञ्जितभुवनोरुणमणिरिव सुगतीपो धरावध्वाः।

भूषणभूतस्यास्याभूत् तत्सुतः सहियारहारस्य।।19

க்ருʼஷ்ணராஜத³யாவாப்தக்ருʼத்ஸ்னஸம்ʼயானமண்ட³ல​:|

ஆஸீன்மது⁴மதி​: ஸ்ரீமான் ந்ருʼபதிஸ்தாஜிகான்வயே|| 17

விஜித்ய கரத³ண்டே³ன ஸர்வ்வவேலாகுலாதி⁴பான்|

ந்யவீவிஸ²த்ஸமம்ʼ கீர்த்யா ஸர்வத்ர கரணானி ய​:|| 18

ருச்யாரஞ்ஜிதபு⁴வனோருணமணிரிவ ஸுக³தீபோ த⁴ராவத்⁴வா​:|

பூ⁴ஷணபூ⁴தஸ்யாஸ்யாபூ⁴த் தத்ஸுத​: ஸஹியாரஹாரஸ்ய|| 19

மேற்கண்ட செய்யுட்களின் பொருள்

     (முன்றாம் இந்த்ரன் ஆளும் தறுவாயில்) அவருக்கடங்கித் தாஜிக – அரபிய குலத்தைச் சேர்ந்த மதுமதி என்னும் ஆளுநர் ஆண்டான். அவன் முழு ஸம்யான மண்டலத்தையும் இரண்டாம் க்ருஷ்ணனிடமிருந்து பெற்றவன். அவன் கடற்கரையிலுள்ள மற்றைய வேந்தர்களை வென்று திறைகொண்டவன். அங்கெல்லாம் புகழோடு கூட தனது அதிகாரிகளையும் நியமித்தவன். பூமகளின் கொழுநனான அவன் தன்னொளியால் சிவந்த ரத்னத்தைப் போல உலகையொளிரச் செய்தவன். அவனுக்கு ஸுகதீபன் என்னும் மற்றொரு பெயருமுண்டு. அவன் ஸஹியாரஹாரனின் மகனாவான்.

     ஈண்டு மதுமதி என்னும் பெயர் அரபியச் சொல்லான மொஹம்மது என்பதின் வடமொழியாக்கம் என்பதில் ஐயமில்லை. இதைக்கொண்டு முதல் வடமொழியாக்கமான பெயரான மொஹம்மது என்பதைக் காணமுடிகிறது.

     இரண்டாம் சான்றாக கதம்பவம்சத்தைச் சேர்ந்த முதலாம் ஜயகேசியின் பஞ்ஜிம் செப்பேட்டிலுருந்தும் வேறோர் வடிவம் கிடைக்கிறது. இந்தச் செப்பேடு மொஹம்மது என்பதின் வடமொழியாக்கமான  மதுமதன் என்னும் பெயரைத்தருகிறது.

                மூன்றாம் சான்றாக மொஹம்மது பின் துக்ளக் என்று அறியப்பெற்ற ஸுல்தான் மொஹம்மதின் கல்வெட்டு கிடைக்கிறது. இந்தக் கல்வெட்டு கல்யாணியிலிருந்து கிடைக்கிறது. இந்தக் கல்வெட்டின் காலம் பொதுயுகம் 1326 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி என்று நிர்ணயிக்கப்பெற்றிருக்கிறது. இந்தக் கல்வெட்டு வடமொழியில் நாகரி லிபியில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு அரசனை மஹாராஜாதிராஜ ஸுரதான மஹாமதஹ (ஸ்ய) ராஜ்யே என்று குறிப்பிடுகிறது. ஈண்டு மொஹம்மது என்னும் பெயர் மஹாமதன் என்று வழங்குகிறது.

     பவிஷ்யபுராணத்தில் இடைச்செருகலாகக் கருதப்பெறும் பகுதியும் மொஹம்மது என்னும் பெயரை மஹாமதன் என்றே வழங்குகிறது. அதில் கூறப்பெற்றுள்ள மற்றைய இலக்கணங்கள் இதில் குறிப்பிடப்பெறும் மொஹம்மது இறைதூதரே என்பதை விளக்குகின்றன.

     இஸ்லாமிய அரசனான டட்ரா கானின் மகனான மொஹம்மது ஷாவால் இயற்றப்பெற்ற ஸங்கீத மாலிகை எனப்பெறும் நாட்டிய நூலில் நூலையியற்றியவர் தன்னைத்தானே மஹாமதசாஹி என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். இந்த நூலின் காலம் பொயு 17ஆம் நூற்றாண்டு என்று நிர்ணயிக்கப்பெற்றுள்ளது.

     வடமொழி உரைநடைக் காப்பியமான சிவராஜவிஜயம் என்னும் நூல் கஜினி மற்றும் கோரி மொஹம்மது ஆகியோரை மஹாமதர்கள் என்றே குறிப்பிடுகிறது.

     ஆகவே பின்வரும் மூன்று வடமொழி வடிவங்கள் மொஹம்மது என்னும் பெயரைக் குறிக்கப் பயன்படுத்தப்பெற்றுள்ளன.

  1. மதுமதி – ராஷ்ட்ரகூடர்கள் செப்பேட்டில் பயன்படுத்தப்பெற்ற பழமையான வடிவம்
  2. மதுமதன் – கதம்பச் செப்பேட்டில் காணப்பெறும் வடிவம்
  3. மஹாமதன் – இஸ்லாமிய மன்னர்களின் சாஸனங்களிலும் இலக்கியங்களிலும் காணப்பெறும் வடிவம்

இம்மூன்று வடிவங்களிலும் இறுதி வடிவமே இஸ்லாமிய வேந்தர்களாலும் ஒப்புக்கொள்ளப்பெற்றவடிவமாதலால் அந்த வடிவமே பொருத்தமானதாக ஏற்க வேண்டியதாகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *