வைஷ்ணவ ஆகமங்களில் லிங்க வழிபாடு

     லிங்க வழிபாடு என்பது சைவத்துடன் தொடர்புடையது என்பதை நாமறிவோம். லிங்கம் என்னும் சொல் அடையாளம் என்னும் பொருளைத் தருவது. சிவலிங்கம் என்பது எந்தையின் அடையாளம் என்னும் பொருளைக் குறிக்கும். பொதுவாக லிங்கத்தை ஆராயும் ஆய்வாளர்கள் லிங்க வடிவத்தை ஆண்குறியோடு தொடர்புபடுத்தியே ஆராய்வது வழக்கமாக உள்ளது. இத்தகையதோர் ஒரு கருதுகோள் சில இலக்கிய ஆதாரங்களிலிருந்தும் குடிமல்லத்தில் கிடைத்த லிங்கத்தை வைத்தும் உருவாகியிருக்கிறது. ஆனால் லிங்கம் என்னும் வடிவம் வேதவேள்விகளின் அக்னியிலிருந்து உருவானதாகவே தோன்றுகிறது. அக்னி எரியும்போது மூடிய வடிவில் லிங்க வடிவில் இருப்பதைக் காணலாம். க்ருஷ்ணயஜுர்வேதம் இதைத் தெளிவாக ருத்³ரோ வா ஏஷ யத³க்³னி​: என்று இதனை ருத்ரனின் வடிவாக அக்னி இருப்பதாகக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

     புராணங்கள் மற்றைய தெய்வங்களுக்கான லிங்கத்தையும் குறிப்பிடுகின்றன. வாமனபுராணம் குருக்ஷேத்ரத்தில் பார்வதியும் லிங்கவடிவில் இருப்பதைக் குறிப்பிடுகிறது.

उमा च लिङ्गरूपेण हरपार्श्वं न मुञ्चति।। वामनपुराणम् 46.7

உமா ச லிங்க³ரூபேண ஹரபார்ஸ்²வம்ʼ ந முஞ்சதி|| 

வாமனபுராணம் 46.7

       உமா எந்தையின் பிணைப்பிலிருந்து விலக விரும்பாதவளாய் லிங்க வடிவிலேயே அவரருகிலேயே வீற்றிருக்கிறாள்.

     இந்த புராணத்தில் ஸரஸ்வதிக்கான லிங்கத்தைப் பற்றிய குறிப்பும் உண்டு.

तत्रैव लिङ्गरूपेण स्थिता देवी सरस्वती। वामनपुराणम् 46.10

தத்ரைவ லிங்க³ரூபேண ஸ்தி²தா தே³வீ ஸரஸ்வதீ| 

வாமனபுராணம் 46.10

     அங்கேயே தேவியான ஸரஸ்வதியும் லிங்க வடிவில் நிலைகொணடாள். ஆகவே வெறும் எந்தை மட்டுமின்றி மற்றைய தேவர்களும் கூட லிங்கவடிவில் வழிபடத்தக்கவர்கள் என்பது புலனாகிறது. ஆகவே எல்லா லிங்கங்களையும் ஆண்குறியோடு தொடர்பு படுத்தும் கருதுகோள் பொருளற்றதாகிறது.

ஸனத்குமார ஸம்ஹிதை

     பாஞ்சராத்ர ஆகமத்திற்கு பலவகையான ஸம்ஹிதைகள் உண்டு. அவற்றுள் ஸனத்குமார ஸம்ஹிதையும் ஒன்று. இந்த ஸம்ஹிதையின் ப்ரஹ்மராத்ரம், இந்த்ரராத்ரம் மற்றும் ரிஷி ராத்ரம் என்னும் மூன்று ராத்ரங்கள் மட்டும் வெளியாகியுள்ளன. இந்த ஆகமப்பகுதி சைவ ஆகமங்களின் மறு தோற்றத்தைப் போலவே தோன்றுகிறது. இந்த ஆகமம் முழுமுதற் கடவுளாக சைவ ஆகமங்கள் கூறும் ஸதாசிவனைப் போலவே ஸதாவிஷ்ணு என்பவரைக் குறிப்பிடுகிறது. மேலும் சைவத்தின் ஸப்த மாதாக்களையும் ருத்ரர்களையும் போலவே இந்த ஆகமத்திலும் வைஷ்ணவத்தின் ஸப்த மாதாக்களும் விஷ்ணுக்களும் குறிப்பிடப்பெற்றிருக்கின்றனர்.

     இந்த ஆகமத்தின் ப்ரஹ்மராத்ரத்தின் ஆறாவது அத்யாயம் லிங்க வழிபாட்டைப் பற்றிய முக்கிய தகவலைத் தருகிறது.

लिङ्गस्य स्थापनायां चापि एष एव विधिक्रमः।

लिङ्गं तु त्रिविधं प्रोक्तं ब्राह्मं शाङ्करमेव च।।

वैष्णवं च त्रिदैवञ्च चतुर्थं परिकीर्तितम्।

मूलस्थूलं भवेद्ब्राह्मं शिरस्स्थूलं तु शाङ्करम्।।

वैष्णवं समवृत्तं च धारालिङ्गं तथैव च।

बहुबेरविधाने तु न च निर्माल्यकुल्यका।।

सनत्कुमारसंहिता, ब्राह्मरात्रम्, 6.50-53

லிங்க³ஸ்ய ஸ்தா²பனாயாம்ʼ சாபி ஏஷ ஏவ விதி⁴க்ரம​:|

லிங்க³ம்ʼ து த்ரிவித⁴ம்ʼ ப்ரோக்தம்ʼ ப்³ராஹ்மம்ʼ ஸா²ங்கரமேவ ச||

வைஷ்ணவம்ʼ ச த்ரிதை³வஞ்ச சதுர்த²ம்ʼ பரிகீர்திதம்|

மூலஸ்தூ²லம்ʼ ப⁴வேத்³ப்³ராஹ்மம்ʼ ஸி²ரஸ்ஸ்தூ²லம்ʼ து ஸா²ங்கரம்||

வைஷ்ணவம்ʼ ஸமவ்ருʼத்தம்ʼ ச தா⁴ராலிங்க³ம்ʼ ததை²வ ச|

ப³ஹுபே³ரவிதா⁴னே து ந ச நிர்மால்யகுல்யகா||

ஸனத்குமாரஸம்ʼஹிதா, ப்³ராஹ்மராத்ரம், 6.50-53

     உற்சவ மூர்த்திகளை ப்ரதிஷ்டை செய்யும் முறைகளைப் போலவே லிங்கத்தை ப்ரதிஷ்டை செய்யும் முறையும் செயல்படுத்தப்பெற வேண்டும். லிங்கங்கள் மூன்று விதமாகும். ப்ராஹ்மம், சாங்கரம் மற்றும் வைஷ்ணவம். நாலாவது லிங்கம் மும்மூர்த்திகளையும் உள்ளடக்கியது. லிங்கத்தின் அடிப்பகுதி பருத்திருந்தால் அது ப்ராஹ்ம லிங்கமாகும். நுனிப்பகுதி பருத்திருந்தால் அது சாங்கர லிங்கமாகும். எல்லா பகுதிகளும் ஸமமாக இருந்தால் அது வைஷ்ணவ லிங்கம் எனப்பெறும். தாராலிங்கம் மும்மூர்த்திகளுக்குமான லிங்கமாகும். பல தெய்வங்கள் ஒரே லிங்கத்தில் ஆவாஹிக்கப்பெற்றால் அந்த லிங்கத்தில் கோமுகத்தை அமைக்கக் கூடாது.

     ஒரு வைஷ்ணவ ஆகமத்தில் இப்படி லிங்க வழிபாடு விளக்கப்பெற்றிருப்பது மிகவும் இன்றியமையாத தகவலாகும். இத்தகைய பகுதிக்கு எடுத்துக்காட்டாக இன்று பல கிடையாவிடினும் இந்தத் தகவல் இன்றியமையாததாகிறது.

     கம்போடிய நாட்டின் ஈசான வர்மன் என்னும் மன்னனின் அதிகாரியான ஈசான தத்தர் என்பார் பொயு 625 – இல் சிவ-விஷ்ணுலிங்கத்தை எடுப்பித்ததை கம்போடிய கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பொயு 972 – இல் ஐந்தாம் ஜயவர்மன் என்னும் கம்போடிய மன்னனின் ஆட்சியில் திவாகர பட்டன் என்னும் அந்தணன் விஷ்ணு-மஹேச்வர லிங்கத்தை எடுப்பித்ததையும் அந்நாட்டுக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

     திருக்குறுங்குடியில் நம்பி கோயிலில் இடம்பெற்றிருந்த லிங்கத்தையும் இந்தப் பார்வையில் ஆராய்ந்திருக்கலாம்.

இவ்விதம் எந்தைக்கும் விஷ்ணுவுக்குமான லிங்க வழிபாட்டைப் பற்றி பல சான்றுகள் கிடைக்கின்றன.

Please follow and like us:

4 thoughts on “வைஷ்ணவ ஆகமங்களில் லிங்க வழிபாடு

 1. லிங்க சப்தம் சைவத்துக்கு மட்டுமே சொந்தமானதன்று.

  விதுரர் மஹாபாரதப் போரில் ஈடுபடமனமின்றித் தீர்த்த யாத்ரை கிளம்புகிறார்.
  விண்ணகரம் தோறும் புகுந்து பெருமாளை ஸேவிக்கிறார். ‘முகுந்த லிங்காலய
  தர்சநாதிஷு..’ என்னும் தகவலைத் தருகிறது ஸ்ரீமத் பாகவதம்

  அன்புடன்
  தேவ்

 2. நன்றி,லிங்கம் குறித்து பல அறிந்தேன்.மூன்று தெய்வங்களுக்கான தாராலிங்கத்தில் சக்திபாகம்( கோமுகை) கிடையாது என்பதால் லிங்கம் பொதுவாக ஆணுறுப்பாக இருக்கலாம்.தவிர உயிர்ப் படைப்பிற்கு மூலங்களாக உள்ள ஆண்,பெண் உறுப்புகளாக இறைமை வழிபடப்பெற்றதை தவறு என்றோ,அசிங்கம் என்றோ நினைக்கத்தோன்றவில்லை, லிங்கம் எல்லா ஆண் தெய்வங்களுக்கும் இருப்பதால் அது சிவனைமட்டும் குறிக்காது பிற ஆண் தெய்வங்களையும் குறிக்கும் போலும்.மிக்க நன்றியுடையேன்.

 3. திருக்கோஷ்டியூர் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சரபேஸ்வர லிங்கம் என்றே தனிச்சன்னிதியில் கண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *