வடமொழி செய்யுட் காவியங்களில் சுவடியியற் குறிப்புகள்

                வடமொழியில் செய்யுட் காவ்யங்கள் பொதுவாக செய்யுட் காவியங்கள், உரைநடைக் காவியங்கள் இரண்டும் கலந்த சம்பூ காவ்யங்கள் என்னு மூவகைப்படும். குறிப்பிட்ட வரையறைகளின்படி பாவகைகளுடன் இயற்றப்பட்ட காவியங்களே செய்யுட் காவியங்கள். இவ்வகைக் காவியங்கள் காளிதாசன் முதலிய பல கவிமணிகளால் இயற்றப் பட்டவையாம். இவ்வகைக் காவியங்களிலும் சுவடியியற்குறிப்புக்கள் காணப்படுகின்றன. ரகுவம்ச மஹாகாவ்யத்தில்

லிபேர்யதா²வத்³க்³ரஹணேன வாங்மயம்ʼ

நதீ³முகே²னேவ ஸமுத்³ரமாவிஸ²த்|

                என்று குறிப்பிடுகிறார். இதன் பொருளாவது

                 நதியின் மூலமாக கடலை அடைவது போல் எழுத்துக்களின் உள்ளபடி அறிவதன் மூலமே இலக்கியத்தை அறியமுடியும் என்று எழுத்தியல் தொடர்பான குறிப்புளது. மேலும்  குமாரஸம்பவ காவ்யத்தில் இமயமலையின் வர்ணனையின் போது

न्यस्ताक्षरो धातुरसेन यत्र

भूर्जत्वजः कुञ्जरबिन्दुशोणाः।

व्रजन्ति विद्याधरसुन्दरीणाम्

अनङ्गलेखक्रिययोपयोगम्।।

ந்யஸ்தாக்ஷரோ தா⁴துரஸேன யத்ர

பூ⁴ர்ஜத்வஜ​: குஞ்ஜரபி³ந்து³ஸோ²ணா​:|

வ்ரஜந்தி வித்³யாத⁴ரஸுந்த³ரீணாம்

அனங்க³லேக²க்ரியயோபயோக³ம்||

                என்று குறிப்பிடுகிறார். இதன் பொருளாவது யானைகளின் மீது காணப்படும் புள்ளிகளைப் போன்று சிவந்ததும் தாதுக்களின் ரஸத்தினால் தானே எழுதப்பட்டதும் போன்றதான பூர்ஜபத்ரங்கள் விஞ்சையரின் காதல் கடிதம் எழுதுவதற்கு பயன்பட்டது. இதன்மூலம் பூர்ஜபத்ரங்களில் எழுதும் வழக்கமும் அதன் பயன்பாடும் விளங்குகிறது. மேலும் வித்வான்களின் ஔடதம் என்று பெயர் பெற்ற நைஷதீய காவ்யத்திலும்

தலோத³ரே காஞ்சனகேதகஸ்ய க்ஷணான் மஷீபா⁴வுகவர்ணரேக²ம்|

தஸ்யைவ யத்ர ஸ்வமனங்க³லேக²ம்ʼ லிலேக² பை⁴மீ நக²லேக²னீபி⁴​:||               இதன் பொருள்

                                தங்கத்தாழம்பூவின் நடுவில் மையினால் கோடுகளைக்கொண்டு தமயந்தீ தன் நகமெனும் எழுத்தாணியால் காதற்கடிதம் எழுதினாள். இதன் மூலம் மையினால் எழுதப்பெறுவதற்கான குறிப்பு விளங்கும்.

                இவை தவிர காவ்யமீமாம்ஸை என்னும் நூலிலும் எழுதுதல் தொடர்பான குறிப்புக்கள் காணப்படுகின்றன

ப²லகேஷு வார்திகமாத்³யம்

என்று பலகைகளில் எழுதும் விதத்தைப் பற்றிய குறிப்புளது.

                மேலும் குணாட்யன் எனும் பெருங்கவி தான் போட்ட சூளுரையில் தோற்றதால் காட்டினில் மனிதர்கள் பேசும் மொழிகளை விடுத்து, பிசாசுகள் பேசும் பைசாச மொழியைக் கேட்டு அதிலேயே புலமை பெற்று அதை எழுதுவதற்கு தன் குருதியைப் பயன்படுத்தினான் என்னும் குறிப்பு கதாஸரித்ஸாகரம் என்று அவர் இயற்றிய நூலிலேயே இதற்கான குறிப்புள்ளது.

மைதாம்ʼ வித்³யாத⁴ரா ஹார்ஷுரிதி தாமாத்மஸோ²ணிதை​:|

அடவ்யாம்ʼ மஷ்யபா⁴வாச்ச லிலேக² ஸ மஹாகவி​:||

                இதன் பொருள்

                இதனை வித்யாதரர்கள் களவாடக்கூடாதென்று எண்ணிய அவர் காட்டில் மை கிடைக்காததால் தன் குருதியால் எழுதினார். இதைத் தவிர பதஞ்சலி சரிதம் என்னும் நூலில் சந்த்ர சர்மாவென்னும் பண்டிதர் ஓர் ஆலமரத்தின் மீதமர்ந்து ப்ரஹ்மராக்ஷஸன் சொன்ன இலக்கண உரையை தன்னகங்களால் ஆலிலைகளில் எழுதினார் என்னும் குறிப்பு இருக்கிறது.

अपचितवटपत्रजालगर्भे नखशिखरेण द्रुतं लिलेख तावत्।

அபசிதவடபத்ரஜாலக³ர்பே⁴ நக²ஸி²க²ரேண த்³ருதம்ʼ லிலேக² தாவத்|

இதன் பொருள்

                முதிராத ஆலிலை நடுவில் தன் நகமுனையைக் கொண்டு வேகமாக எழுதினார். இதன்மூலம் ஆலிலை மற்றும் இரத்தத்தினைக் கொண்டும் எழுதுவது தொடர்பான குறிப்பு நோக்கற்பாலது.

                                மேலும் உரைநடை காவியங்களிலும் இத்தகைய குறிப்புகள் காணப் படுகின்றன. உரைநடை காவியங்களில் முக்கியமானதாகவும் பாணபட்டரால் எழுதப் பட்டதுமான காதம்பரி என்னும் நூலில்

       பட்டிகாலிகி²தது³ர்கா³ஸ்தோத்ரேண

                என்று துர்க்கையின் ஸ்தோத்ரம் துணியில் எழுதப் பட்டதிற்கான குறிப்புள்ளது. மேலும் ஹர்ஷ சரிதம் என்னும் நூலிலும்

       ஸங்க்²யாலேக்²யபட்டிகாமிவ குபே³ரகோஸ²ஸ்ய

                என்று குபேரனின் பொக்கிஷத்தின் எண்ணிக்கை எழுதும் துணி போல என்று துணியில் எழுதும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

                இவ்விதமாக வடமொழிக்காப்பியங்கள் பண்டைய இந்தியாவின் எழுத்தியலைப் பற்றி பலவிதமான தகவல்களைத் தருகின்றன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *