கல்லூரி – சொல்லாய்வு

     இன்று நமது வழக்கிலுள்ள பல சொற்களும் அவற்றின் துவக்க காலபயன்பாட்டிலிருந்து வேறாக வழங்கிவருவது நாமறிந்ததே. அத்தகையதோர் சொல் கல்லூரி என்பதாகும். தற்போது உயர்கல்விகூடத்திற்கு கல்லூரி என்னும் சொல் புழங்கி வருகிறது. ஆனால் இதன் துவக்ககால பயன்பாட்டையும் வடநூல் பயன்பாட்டையும் காண்போமா.

தமிழ்நூல்களில் கல்லூரி

     தமிழ்நூல்களைப் பொறுத்தவரை கல்லூரி என்னும் சொல் ஆயுதப்பயிற்சிகூடம் என்னும் பொருளில் பயன்பட்டு வந்ததைச் சீவகசிந்தாமணியின் குணமாலையார் இலம்பகம் உணர்த்திநிற்கின்றது.

கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா

முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா

விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா

லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ.

     ஈண்டு குணமாலை தனது காதற்பெருக்கை உணர்த்தாநின்றனள். கொடிய அம்புகள் ஐந்தைக் கொண்ட மாறன் எனது முலைகட்கிடைப் பகுதியை எருக்குவியலாக்கி, உயிரையே குறியாக்கி அடித்து வருத்துகிறான். கல்லூரியையுடைய விற்பயிற்சி செய்யும் இடத்தில் பயிற்சி தொடங்கும் காலமாக எண்ணி பயிற்சியைத் துவக்கினன் என்று இந்தப் பாடலின் பொருள் அமைகிறது.

     கல்லூரிநற்கொட்டில் என்னும் சொல் விற்பயிற்சிக்கான இடமாகக்குறிப்பிடப் பெற்றிருப்பது இதன் மூலம் வெள்ளிடைமலையாகிறது.

கல்வெட்டுக்களில் கல்லூரி

     கல்வெட்டுக்களில் கல்லூரி என்னும் சொல் சுற்றுத்தாழ்வாரம் என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் முதலாம் ராஜேந்த்ரனின் கல்வெட்டு “உடையார் ஸ்ரீராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்ட சோழபுரத்து கோயிலுனுள்ளால் முடிகொண்டசோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரச் சுற்றுக் கல்லூரியில் தானம் செய்தருளாயிருந்து” என்று சுற்றுத்தாழ்வாரத்தைக் குறிப்பிடுகிறது. ஈண்டு ராஜேந்த்ரனுடைய மாளிகையின் சுற்றுத் தாழ்வாரமே கல்லூரி என்னும் சொல்லால் சுட்டப்பெற்றுள்ளது.

வடமொழி நூல்களில் கல்லூரி

     சிற்பம் தொடர்பான பல நூல்களும் கலூரீ அல்லது கலூரிகா என்னும் சொல்லாட்சியைக் கொண்டுள்ளன. காமிகாமம் கலூரிகா என்பதன் அமைப்பைச் சுட்டி ஆயுதப்பயிற்சி சாலையாக அமையும் விதத்தையும் குறிப்பிடுகிறது. கலூரீ அமையும் விதத்தையும் குறிப்பிடுகிறது. அந்த ஆகமத்தின் முப்பத்தைந்தாம் அத்யாயம் பலவிதமான சாலைகளை விளக்குந் தறுவாயில் கலூரி அமைய வேண்டிய அளவுகளைக் குறிப்பிடுகிறது. கோட்டையின் உட்பக்கம் அரச இருப்பிடத்தைச் சுற்றி அமைய வேண்டியது கலூரிகை என்று குறிப்பிடுகிறது. மேலும் கோயில் முதலிய இடங்களைச் சுற்றியும் கலூரீ அமையும் விதத்தையும் இந்த நூல் காட்டுகிறது.

மானஸாரமும் கலூரீ ஆயுதசாலையாக அமைவதையும் சுற்றாலையாக அமையும் விதத்தையும் சுட்டுகிறது. உணவுண்ணும் கூடத்தைச் சுற்றியமையும் தாழ்வாரத்தையும் கலூரி என்று இந்த நூல் குறிப்பிடுகிறது.

       மயமதத்தின் இருபத்தேழாவது அத்யாயம் வேதிகை முதலியவற்றுடனும் கொடுங்கையுடனும் கலூரியை அமைக்கும் விதத்தைக் குறிப்பிடுகிறது.

     ஹேமசந்த்ரரின் கோசநூல் கலூரி என்னும் சொல்லிற்கு ஆயுதப்பயிற்சி சாலை என்னும் பொருளைத் தருகிறது.

     ஆக இத்தகைய பயன்பாடுகள் வடமொழிநூல்களிலிருந்து கிடைப்பது உறுதியாகிறது.

     மேலே குறிப்பிட்ட நூல்களுள் காமிகாமம் சற்று காலத்தால் முந்தையது. ஆகவே கல்லூரி என்னும் சொல் காமிகாமத்தில் முகப் பழைய பயன்பாட்டைக் கொண்டதாகக் கொள்ளலாம். ஆயின் அது வடசொல்லாகத் தீர்மானிக்க இயலவில்லை. காரணம் காமிகாமத்தில் குப்பம், சேரி ஆகிய தமிழ்ச்சொற்கள் குப்ஜம், சேரிகா என்று வடமொழியாக்கம் பெற்றதேயாம். ஆகவே இச்சொல் தமிழிலிருந்து வடமொழியாக்கம் பெற்று பிறகு வடமொழி நூல்களில் பயன் கொண்டதா அல்லது வடசொல்லிலிருந்து தமிழாக்கம் பெற்றதா எனத் தீர்மானிக்க இயலவில்லை.

     இந்தச் சொல் தற்போது உயர்கல்விகூடம் என்னும் பொருளில் பயன்பட்டு வருகிறது. தேவாரக்கல்லூரி என்னும் சொற்பயன்பாடு கல்லூரியாகிய சுற்றாலையில் முற்றோதல் முதலிய செயல்கள் நிகழ்ந்தேறியிருக்கலாம் என்னும் ஊகத்தைத் தருகிறது. ஆகவே முற்றோதல் நிகழ்ந்தேறிய கல்லூரி என்னும் இடம் கல்விக்கான இடமாக வழங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

     எது எப்படியோ, ஆயுதசாலையின் பெயராக அறியப்பெற்ற கல்லூரி கல்விக்கூடத்தின் பெயராக ஆனதாலோ என்னவோ, இன்றைய கல்லூரிகள் ஆயுதப்பயிற்சி கூடங்களாகி விட்டன…

Please follow and like us:

2 thoughts on “கல்லூரி – சொல்லாய்வு

  1. கல்-கற்பி,கற்க,ல்-ற்றாக மாறியது. கல்வேர்ச்சொல்லாகும்.
    சேர்ந்துவாழுமிடம் சேரி,( சிலம்பில் பார்ப்பனச்சேரி )ஊர்ந்து அதாவது புழங்குமிடம் ஊர்,எறும்பு ஊரக்கல்லும் தேயும் என்பதில் “ஊர” என்பதன் பொருளறிக!பகுதி-பாக்கம் ஆனது.குழுமிவாழும் இடம் குப்பம்.கல் என்ற சொல்லில் இருந்து உருவான சொற்கள்பற்றி விரிவான ஆய்வுநூல் “கல்”-முனைவர் அரசேந்திரன். கல்,ஊரி கற்கச்சேருமிடம்,கற்க ஊருமிடம் எனப்பொருள் கொள்ளலாமா? சிவனின் இடக்கண்ணும் வலக்கண்ணும் ஒரேகாட்சியைப் பார்க்கின்றன.

  2. கடைசீ வரியில் கல் (வீச)உரி (மை) உண்டு என்று காட்டி விட்டீர்கள் !!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *