ஏற்கனவே இதுவரை வெளிவராத ஸுந்தரபாண்டியனது இரு வடமொழிக்கல்வெட்டுக்களையும் முதலாம் பராந்தகனது துண்டு கல்வெட்டையும் கண்டோம். பின்வரும் துண்டுக் கல்வெட்டு ரிஷிகோபுரத்திற்கு அருகிலுள்ள வினாயகர் ஸன்னிதியின் அருகே கீழே கிடைத்தது. இதன் வரிகளைப் பார்த்து ஒரே பூரிப்பு. காரணம் விஜயநகரகாலத்திற்கு முன்பாக பெரிய நாச்சியார் என்னும் சொல்லாட்சிதான். இந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கன் (பொயு 1178-1218) காலத்தைச் சேர்ந்த்து என்பது (பாண்டியன்முடித்தலை)யுங் கொண்டருளின என்னும் சொற்றொடராலும் எழுத்தமைதியாலும் கிடைக்கிறது. இந்தக் கல்வெட்டு பசுக்களை தானமாக வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது.
வரி 1. யுங்கொண்டருளின கு
வரி 2. கொண்ட சோழமண்டலத்து
வரி 3. பெரிய னாச்சியார்க்கு இப்
வரி 4. தினாயக…..னியக…
வரி 5. க்கு தர்மமாக விட்ட பசு மு….
வரி 6. இது ரக்ஷிப்போமாக…
இதன் முக்கியத்துவமே இது பெரியநாச்சியாரைக் குறிப்பிடுவதுதான். கே.ஆர். வேங்கடராமன் ஆகியோர் Devi Kamakshi in Kanchi முதலிய நூல்களில் விஜயநகர காலத்திற்கு முன்பு காமாக்ஷியை நேரடியாகக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இல்லை என்பதைக் குறிப்பிட்டு அதனால் விஜயநகரகாலத்தில்தான் சமண அல்லது பௌத்தகோயில் மாற்றப்பெற்றிருக்கும் என்னும் தவறான கொள்கையை முன்வைத்திருந்தனர். அவர்தம் கொக்கரிப்பை நிராகரிக்கும் முகமாக நான் ஏற்கனவே வெளியிட்ட ஸுந்தர பாண்டியனின வடமொழிக் கல்வெட்டும் இந்த மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் அமைந்துள்ளது. ஸுந்தர பாண்டியனின் பதிமூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு காமகோஷ்டேசி என்று குறிப்பிடுவதும் இந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலேயே பெரியநாச்சியார் என்று குறிப்பிடுவதும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னமேயே அன்னை இங்கே எழிலுற வீற்றிருப்பதைக் காட்டுமுகமாக அமைந்துள்ளன. சோழர் கல்வெட்டுத் துண்டுகள் முதலாம் ராஜராஜன் காலந்தொட்டு கிடைத்தாலும் கூட அவற்றில் தெய்வத்தின் பெயர் கிடைக்கவில்லை. முதன்முறையாக பெரியநாச்சியார் என்னும் சொல்லாட்சி இந்தச் சோழர்கல்வெட்டில் கிடைத்திருப்பது இறும்பூதெய்த வைக்கிறது.
நாச்சி என்றசொல் தலைவி என்ற பொருளுடையதா?
good, we had the fortune to clean it..!