பாண்டியரின் அதிகாரியான பல்லவர் வழித்தோன்றல்

ஆதித்ய சோழனால் வீழ்த்தப்பட்ட அபராஜித பல்லவனுக்குப் பிறகு பல்லவ குலம் தன் பெருமையிழந்து பின்வந்த அரசர்களுக்கு அதிகாரிகளாகவும் அடங்கியும் கிடக்கும் நிலையெய்தியது. ஆதித்ய சோழன் பல்லவர் குலத்தோன்றலாகிய த்ரிபுவனமாதேவியை மணந்திருந்தான். கரந்தைச் செப்பேடும் முதலாம் பராந்தகன் ஒரு பல்லவனோடு போரிட்டதைக் குறிப்பிடுகிறது. சுந்தர சோழனின் காலத்தில் பார்த்திவேந்த்ராதிவர்மன் என்பான் தொண்டைமண்டலத்தின் தலைவனாக நியமிக்கப்பெற்றிருந்தான். இவனுக்குப் பல்லவர் குலத்தோடான தொடர்புக்கு தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கோப்பெருஞ்சிங்கன் என்பான் மீண்டும் பல்லவகுலத்தை நிறுவினான். அவனுக்குப் பிறகு மீண்டும் பல்லவர் குலம் பிற்காலபாண்டியருக்கு அதிகாரியாகத் திகழ்ந்தது. காஞ்சிக்கருகிலுள்ள திருப்புட்குழியில் விஜயராகவபெருமான் கோயிலில் உள்ள பின்வரும் கல்வெட்டு எடுத்த கையழகியான் பல்லவராயன் என்னும் பல்லவகுலத்தோன்றல் குலசேகரபாண்டியனுக்கு (1268-1311 CE) அதிகாரியாகப் பணியாற்றிய செயலைக் குறிக்கிறது. அந்தக் கல்வெட்டு அந்த அதிகாரி குலசேகரபாண்டியனின் தோள் குணமாக அந்தக் கோயிற்பிரானுக்கு முகமண்டபம் எடுப்பித்த செய்தியைக் குறிப்பிடுகிறது. இந்த வடமொழிக் கல்வெட்டைத்தொடரும் தமிழப்பகுதி ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பொன்வேய்ந்தவனும் குலசேகரனின் தந்தையுமான சுந்தரபாண்டியனை வாழ்த்துகிறது.

     இந்தக் கல்வெட்டு கோயில் முகமண்டபத்தின் கீழைச்சுவரடியில் காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு தொல்லியல் துறையின் 1899 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் 19-ஆம் எண்ணாகக் குறிப்பிடப்பெற்றிருந்தது. அதன்பிறகு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஆறில் 455 ஆம் எண்ணாக மூலம் மட்டுமாக பதிப்பிக்கப்பெற்றது.

வரி 1: स्वस्तिश्री।। जटायुसरसस्तटे घटयतो निवासस्पृहां वितीर्णकुलशेखरक्षितिपबाहु

வரி 2: रक्षाविधेः। विधायमुखमण्डपं रणमहोक्षनाम्नो हरेरुदस्तकरसुन्दरो जय

வரி 3: ति पल्लवाधीश्वरः। வாழ்க பொன்மேய்ந்த மகீபதி வாழ்க செந்தமிழ் மா

வரி 4: லை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன் வாழ்க சுந்தரமன்ன

வரி 5: வன் தென்னனேய். பெருமாள் குலசேகரதேவர் திருத்தோளுக்கு நன்றாக எடுத்த கையழகியா

வரி 6: ன் பல்லவராயர் செய்வித்த தன்ம[ம்].

स्वस्तिश्री।।

மங்களம்.

பாவகை – ப்ருத்வீ

जटायुसरसस्तटे घटयतो निवासस्पृहां

वितीर्णकुलशेखरक्षितिपबाहुरक्षाविधेः।

विधाय मुखमण्डपं रणमहोक्षनाम्नो हरे

रुदस्तकरसुन्दरो जयति पल्लवाधीश्वरः।

ஜடாயுஸரஸஸ்தடே க⁴டயதோ நிவாஸஸ்ப்ருʼஹாம்ʼ

விதீர்ணகுலஸே²க²ரக்ஷிதிபபா³ஹுரக்ஷாவிதே⁴​:|

விதா⁴ய முக²மண்ட³பம்ʼ ரணமஹோக்ஷனாம்னோ ஹரே

ருத³ஸ்தகரஸுந்த³ரோ ஜயதி பல்லவாதீ⁴ஸ்²வர​:|

          உதஸ்த-கர-ஸுந்தரன் (எடுத்த கை அழகியான்) எனப்பெயர் கொண்ட பல்லவர் தலைவன் வெல்கிறான். அவன் ஜடாயு தீர்த்த்ததின் கரையில் வாசம் கொள்ள விழையும் போரில் ஏறான திருமாலுக்கு முகமண்டபம் எடுப்பித்தான். தன் மன்னனான குலசேகரனின் தோளைக் காப்பாற்றியமையால் இதனை எடுப்பித்தான்.

வாழ்க பொன்மேய்ந்த மகீபதி

வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்

வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன்

வாழ்க சுந்தரமன்னவன் தென்னனேய்.

          பொன் வெய்ந்த மன்னவன் வாழ்க. தமிழ்நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன் வாழ்க. எல்லா மண்டலங்களையும் கொண்டவன் வாழ்க. சுந்தரபாண்டியனான தென்னவர் தம் மன்னவன் வாழ்க.

பெருமாள் குலசேகரதேவர் திருத்தோளுக்கு நன்றாக எடுத்த கையழகியான் பல்லவராயர் செய்வித்த தன்ம[ம்].

மன்னவனான குலசேகரதேவர் தம் தோள் குணமாவதற்காக எடுத்த கையழகியானான பல்லவராயன் செய்வித்த தர்மம் இதுவாகும்.

     இந்தக் கல்வெட்டின் மூலம் குலசேகர பாண்டியனுக்கு பல்லவ குலத்தோன்றல் அதிகாரியாக பணியாற்றியமை தெளிவாகிறது. குலசேகரபாண்டியனுக்கு தோளில் காயம் ஏற்பட்டிருந்த செய்தி முந்தைய ஆசிரியர்கள் எவரும் சுட்டாமையும் தெரிகிறது.

     இறைவனின் பெயரை ரண-மஹோக்ஷன் போரில் ஏறையொத்தவன் என்றும் எடுத்த கை அழகியான் என்னும் பெயரை உதஸ்த – கர – ஸுந்தரன் என்றும் வடமொழியில் குறிப்பிடப்பெற்றிருப்பது வோக்கத்தக்கது.

Please follow and like us:

3 thoughts on “பாண்டியரின் அதிகாரியான பல்லவர் வழித்தோன்றல்

  1. பல்லவர்கள் பிற்காலத்தில் சோழபாண்டியர்க்கு அதிகாரிகளாக இருந்தனர் என்பதை நான் அறியத்தந்தமைக்கு நன்றி! பல்லவர் பிற அரசுகளுடன் திருமணவுறவு கொண்டிருந்தனர் என்பதும் போற்றத்தக்கது.மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பார்கள். தோற்றவர் எனினும் பெண்கொண்டமை மதிப்புக்குரியது. சரி ஒரு ஐயம்! பல்லவர்கள் வன்னியர்கள் என்பதற்கு ஏதேனும் சான்று உண்டா?அதுபற்றி உங்கள் கருத்தைக் கூறுக!

  2. Kadavas are Vanniyas. Kadava Kopperunjinga Pallavan’s ancestors clearly specified in the inscriptions that they belongs to the caste of “Vanniyas”. Even Kopperunjingan specified in an inscriptions that he is “Sambu Mannavan” (Sambu Kula Mannavan). The Sambuvaraya Chieftains, who also hails from the “Vanniya Caste” claims that they hails from “Pallavas”. More over they clearly specified in the insciptions that they are “Relatives to Kadavas”. One of the curious inscription belongs to Sambuvarayas from Kanchipuram says that, “Chola Kings belongs to Sambuvarayar Vamsam” (Chola Mannar Attrugindra dharmam engal vamsathu dharmam). Imperial Cholas and Kadavas marriage relationship proves that, they both belongs to “Kshatriyas”. Aditya Chola’s queen “Kaduvettigal Thirubuvanamadevi Variyakkan” belongs to the Kadava Royal Family. Similarly, the Kulottunga Chola-I queens, Kadavan Madevi, Kamba Madevi, Thiyagavalli belongs to Kadava Royal Family. Kopperunjingan married the daughter of Kulottunga Chola-III. Raja Raja Chola-III married the daughter of Kopperunjinga Pallavan. Kadava Kopperunjingan claims that the he belongs to “Pallava Kula Parijatham”. Similarly the Sambuvarayas claims that they belongs to “Pallavan Sambu Kula Perumal”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *