அரசர்களின் சாஸனங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே கிடைத்து வருகின்றன. இவற்றுள் வடமொழிச் சாசனங்களைப் பொறுத்தவரை அயோத்தியில் கிடைத்த கல்வெட்டுச்சாசனமும் கோசுண்டிசாசனமும் ஹாதிபாடா சாசனமும் மிகப் பழமையானவையாகக் கருதப்பெறுகின்றன (Indian Epigraphy by Rechord Solomon, Page 86). இந்தக் கல்வெட்டுக்கள் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று எழுத்தமைதியைக் கொண்டும் மற்றைய காரணிகளாலும் நிர்ணயிக்கப்பெற்றிருக்கின்றன. அதன் பிறகு கிபி 1-2 நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் மதுரா முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னகத்தைப் பொறுத்தவரை நாகார்ஜுனகொண்டாவில் கிடைத்த கிபி மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டே வடமொழிக் கல்வெட்டுக்களில் பழமையானது. அதன் பிறகமைந்த வடமொழிச்சாசனங்களில் பல்லவர்தம் சாசனங்களே சிறப்பான இடத்தை வகிக்கின்றன. கி.பி நான்காம் நூற்றாண்டு துவங்கி சாசனங்களை வெளியிட்ட பல்லவர்கள் முதலில் பாகதத்திலும் பிறகு வடமொழியிலும் பிறகு இருமொழிச் சாசனங்களாகத் தமிழிலும் வடமொழியிலுமாக வெளியிட்டனர். ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான பல்லவர் சாசனங்கள் அவர்தம் வரலாற்றை அறிய நுழைவாயிலாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் பல்லவர் செப்பேடு முப்பது என்னும் நூலில் தி.நா.சுப்பிரமணியன் அவர்களால் வெளியிடப்பெற்ற முப்பது செப்பேடுகளுக்குப் பிறகும் பல செப்பேடுகள் கண்டறியப்பெற்று வெளியிடப்பெற்றிருக்கின்றன. அத்தகையதொரு செப்பேடு நிருபதுங்க வர்மனின் சிற்றூர் செப்பேடாகும்.
இந்தச் செப்பேடு ஆந்திரத் தொல்லியல் துறையினரால் மல்லம்பள்ளி சோமசேகர சர்மா என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றது. ஏழு செப்பிதழ்களைக் கொண்ட இந்தச் செப்பேடு 9.2 அங்குல நீளமும் 3.9 அங்குல உயரமும் பெற்றது. இதன் முகப்பிலச்சினை வட்டவடிவமானது. பல்லவர்களின் வழக்கமான காளையினுருவும் அதற்கு முன் ஒரு விளக்கும் இடம் பெற்றுள்ள இந்த இலச்சினையில் எந்தையின் ஆயுதமான கட்வாங்கமும் அமைந்துள்ளது. மேறபகுதியில் ஒரு சிவலிங்க வடிவமும் கொற்றக்குடை, இருபுறச்சாமரங்கள் ஆகியவையும் செதுக்கப்பெற்றுள்ளன என்று இரமேசம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த வடிவம் சிவலிங்கம் போலன்றி ஸ்ரீவத்ஸமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியிட்ட அரசன்
இந்தச் செப்பேட்டை வெளியிட்ட அரசன் பல்லவர் குலத்தின் இறுதி வாரிசுகளில் ஒருவனான நிருபதுங்கவர்மனாவான். மடவலத்தில் கிடைத்த நாற்பத்தோராம் ஆட்சியாண்டு கல்வெட்டு இவ்வரசனின் இறுதியாண்டாகக் கருதப்பெறுகிறது. இவனது மற்றொரு செப்பேடான பாகூர் செப்பேடு இவனது எட்டாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றது. சிற்றூர் செப்பேடு ஆறாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றதாகும்.
செப்பேட்டின் காலம்
பல்லவர்களின் காலத்தைச் சற்றே திருத்தியமைத்து நான் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரையின் அடிப்படையில் இந்தச் செப்பேட்டின் காலமாக பொயு 851 என்று கருதுகிறேன்.
மொழியும் வரிவடிவமும்
இந்தச் செப்பேடு வடமொழி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளையும் கொண்டுள்ளது. பல்லவர் செப்பேடுகளில் பொதுவாக தமிழகத்தில் கிடைத்த செப்பேடுகளானால் வடமொழிப்பகுதி கிரந்த வரிவடிவத்திலும் ஆந்திரத்தில் கிடைத்ததானால் தெலுகு-கன்னட வரிவடிவத்திலும்தான் கிடைத்துள்ளன. இந்தச் செப்பேடு சிற்றூரில் கிடைத்திருந்தாலும் கூட கிரந்த வரிவடிவத்திலேயே இடம் பெற்றுள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த வரிவடிவம் அழகிய எழுத்துக்களைப் பெற்றுள்ளது. தமிழைப் பொறுத்தவரை தமிழ் வரிவடிவமே இடம்பெற்றுள்ளது. தமிழ்ப்பகுதியில் கவனிக்கத்தக்கப் பகுதியுண்டு. அது இக்காலத்தில் எழுதப்பெறுவதைப் போல கோத்திரப்பெயர்களும் சூத்திரப் பெயர்களும் சுருக்கெழுத்துக்களால் – பாரத்வாஜ என்பதை பார என்றும் ப்ராவசன என்பதை ப்ரா என்றும் குறிப்பிட்டிருப்பதே அந்தச் சிறப்பாகும். இது போன்ற சுருக்கெழுத்துக்கள் வேறு சில சாசனங்களிலும் காணப்பட்டாலும் இந்தச் செப்பேட்டில் அதிகமான வகையில் பயன்பட்டுள்ளன. வடமொழிச்செய்யுட்கள் ஒன்பது வகையான பாவகைகளைப் பெற்றுள்ளன.
பதிப்பு விவரம்
இந்தச் செப்பேடு 1972 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச அரசின் தொல்லியல் துறையின் ஆய்விதழில் திரு. என். ரமேசம் அவர்களால் வெளியிடப்பெற்றது. பிறகு அவர் எழுதிய இடைக்காலத் தென்னகவரலாறு என்னும் நூலிலும் இந்தச் செப்பேட்டு பகுதிகளைப் பற்றிய ஆய்வு தரப்பெற்றுள்ளது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட பல்லவர் செப்பேடு முப்பது நூலின் மறுபதிப்பில் இந்தச் செப்பேட்டின் வரிகளும் மசிப்படிகளும் மட்டுமே தரப்பெற்றுள்ளன. விளக்கம் தரப்படவில்லை.
செப்பேட்டின் நோக்கம்
நிருபதுங்க வர்மனின் ஆறாம் ஆட்சியாண்டில் காடுபட்டி முத்தரையனின் விண்ணப்பத்தால் மணையிற் கோட்டத்தில் பன்மா நாட்டைச் சேர்ந்த சிற்றூர் பழையவறமும் பிரமதேயமும் நீக்கப்பெற்று பிருதிவி மாதேவி சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரோடு இறையிலியாக வழங்கப்பெற்றது. இதன் ஆணத்தி காடுபட்டித் தமிழ்ப்பேரரையன் ஆவான்.
செப்பேட்டின் வடமொழிப்பகுதி
இந்தச் செப்பேட்டின் வடமொழிப்பகுதியில் இருபது செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன.
முதல் ஏடு இரண்டாம் பக்கம்
- स्वस्तिश्री दुर्ब्भेदन्तिमिरं यदन्यमहसामादो (आदौ) निरस्यान्तरं
- शुद्धज्ञानसदृशो निदर्श्श्य नयति स्वर्गापवर्गो (अपवर्गौ) पुनः ज्योति
- स्तत्परमम् विधातृ जगतस्सर्व्वस्य शर्व्वाह्वयम् विश्वव्याप्यं विन
- श्वरन्निरुपमन्निश्रेयसायास्तु वः।। बुध्द्यत्वन्धूकसून
- स्तबकरुचिमुषा चक्रवालेन भासां शश्वत्विश्वं विधत्ते क्षत
- तमतिमिरं यः क्षणादेव देवः धाता सर्वस्य सोयम् प्रतिनवनलिनीपत्रसं
- काश पत्रो मित्रो मित्रायतां वो नयनमविकलालोकमे
இரண்டாம் ஏடு முதல் பக்கம்
- कन्त्रिलोक्याः।। विश्वयोनिरभवन्मुरद्विषो नाभिजम्(जन्म)सरसि(सरसीरुहोदरात्)रुहोदरात्
- सूनुरस्य पदमंगिरा गिरा (पदं, अङ्गिराः गिरां)न्तत्सुतश्च सचिवश्शचीपतेः ।। तस्मादभूत् शं
- युरतश्शुभंयुर्म्मुनिर्ब्भरद्वाज इति श्रुताख्यः द्रोणोस्य सूनुर्द्रुहि
- णोपमानस्ततोशनिर्द्रौणिररिद्रुमाणाम्।। क्षत्रमोलि(क्षत्र मौलि)निहितां
- ध्रिपल्लवः पल्लवः पुनरवातरन्महीम् अप्यनेकनृपतिशन्मवा
- न्वंश एष विदितो यदाख्यया।। बभूव तस्मात् शमयन्गुणोघै
- श्शरीरिणां शोमशोवर्म्मा हरिप्रभावो हरिगुप्तनाम्नः काडार्यवर्म्मा पुनर
- स्य सूनोः।। उर्व्वी सर्व्वनृपाच्चि (अर्चितांघ्रितांघ्रिनलिनद्वन्द्वेषु भुक्त्वा चिर(ञ्ज्या)मल्ला
- दिषु पल्लवक्ष(क्षिति)तिधरेष्वस्तंतेषु क्रमात् सिंहः श्रीनरसिंह इत्यरि कु
இரண்டாம் ஏடு இரண்டாம் பக்கம்
- लस्तम्बेरमाणामभुद्यश्शय्यागृहमश्मभिर्ज्जलनिधो (जलनिधौ) चक्रे महच्चक्रिणः।।
- तस्येन्द्रप्रतिमो महेन्द्रनृपतिर्जज्ञे तनूजोत्तमो वीरोस्मात्परमे
- श्वरश्शुभयशाश्श्री राजसिंहस्ततः यः काञ्च्याम्महदश्मवेश्म विदधे शै
- लोपमं शूलिनस्तस्मात् श्रीपरमेश्वरः परबलध्वान्तांशुमाली नृ
- पः।। बभूव तस्याध्तसमस्तलोक विपल्लवः पल्लववंशके
- तुः नन्दी सुतस्तस्य मुकुन्दकल्पश्श्रीदन्तिवर्म्मा सुरदन्तिकर्म्मा।। अभूदमुष्मादधिको
- धनुष्मतां स्वयं वपुष्मानिव पुण्यसञ्चयः अरातिलक्ष्मीनलिनीमदद्विपो नृ
- पोथ नन्दी जगदेकनन्दनः।। श्रीराष्ट्रकूटनृपतेः पुनरात्मजायान्तस्मा द
- भून्नृपशतार्चितपादपद्मः राजा विराजितजगत्त्रितयो यशोभिस्तुं
மூன்றாம் ஏடு முதல் பக்கம்
- गो नृपेषु नृपतुंग इति श्रुताख्यः।। स्मि (अस्मिन्महीं) महीमवति कश्चिगत्रये
- शो राजाभवत्बलिकुलाम्बरभानुमाली यस्मिन्पराञ्जयति नाम यथार्त्थ (यथार्थ)
- मेव लोके परञ्जय इतीह जनैरवादि।। चूडाचंद्रकलेव शंकरजटा
- जूटस्य विद्युल्लते वाम्भोदस्य सुरापगेव नभसो दीप्रेव दीप्तिर्म्मणोः हंसी
- वांबुरुहाकस्य (अम्बुरुहाकरस्य) निरता देवद्विजाराधने तस्याभूत्पृथिवीभृतः पृथिविमा
- णिक्काभिधाना वधूः।। उर्व्वीं सुरैस्सर्व्व गुणोपपन्नैः स्थानार्त्थमभ्य
- र्थ्थत सा कदाचित् द्विजानुरोधादथ सापि साध्वी पतिं समभ्यर्थयद
- र्थनीयम्।। तेन शैलत्रयेन्द्रेण विप्रेन्द्र(विप्रेन्द्राणाम्)णा म (नुग्रहात्) स्था
- नम् प्रत्यवनीपालः पल्लवेन्द्रस्स याचितः।। तेभ्यो नरपतिरदि
மூன்றாம் ஏடு முதல் பக்கம்
- शन्पृथिविमहादेवि मंगलाख्या म(मंगलाख्या मसौ)ग्रामम् भूमिसुरेभ्यः
- प्रशस्य सस्योपकणु भुवम् (सस्योपकण्ठ भुवं)।। विलुप्तिरज्ञानकलिः कलाज्ञः परञ्ज
- यो रञ्जितबन्ध वर्ग्गः आज्ञप्तिरस्य द्रमिडाधिराजो धर्म्मस्य धर्म्मात्मजकीर्त्तिरा
- सीत्।। ना क्रामन्त्यापगेन्द्रास्सकलकुलगिरिश्रेणिसम्भारगुर्व्वी
- मुर्व्वीः (उर्व्वीं) सर्व्वान्नयावद्युग विगमचलोत्तुंगवीचीकलापाः स
- म्पर्कं द्वादशार्कें र्गगनतलमिदं यातयावन्न सोयन्धर्म्मस्सत्वर्द्ध (यावत् न सः अयं धर्मः सद्वर्द्धमानः)
- मानः प्रशमति सकलोपद्रवस्तावदास्ताम्।। कृतवानकृतक हृदः कृती कृत
- ज्ञः कविः कुमाराख्यः विद्यानद्यम्बु निधिः प्रशस्तशीलः प्रशस्ति मिमाम्।। प्रशस्ति
- रिय मुत्कीर्ण्णा शिल्पिना नल्पबुद्धिना नम्प नाम्ना लिपि ज्ञेन कूपग्रामनिवासिना
அவற்றின் பொருள்.
- சிவன் என்னும் பெயருடைய ஒளி உங்களுக்கு வீடுபேற்றை அருளட்டும். அந்த ஒளி முதலில் நீக்கவொண்ணாத இருளைப் போக்கியது. உள்ளே ஞானக்கண்ணைக் காட்டி துறக்கம், முக்தி ஆகியவற்றை நோக்கி வழி நடத்திச் செல்கிறது. அந்த ஒளி எல்லா உலகையும் படைத்தது. இணையற்றது.
- மூவுலகிற்கும் கண்ணான கதிரவன் உங்களுக்கு நண்பனாகட்டும். அவன் விரிந்த செம்பருத்திக் கொத்தின் அழகையும் கவரக்கூடிய தன் ஒளியால் முழுமையாக உலகனைத்தையும் நடாத்துகிறான். இருளைக் கணத்தில் போக்குகிறான். எல்லாவற்றையும் படைப்பவன். புதிய தாமரையிதழையொத்த இதழுடையவன். மூவுலகிற்கும் ஒரே கண்ணானவன்.
- திருமாலின் உந்தித்தாமரை தோன்றியவர் உலகிற்கு மூலமானார். அவருடைய பிள்ளை அங்கிரஸ். அவர் தன் வாக்கின் உறைவிடமானவர். அவருடைய மகன் இந்திரனின் மந்திரியாவார்.
- அவரிடமிருந்து சம்யு தோன்றினார். அவருக்குச் சுபம்யு என்பவர் தோன்றினார். அவருக்கு பரத்வாஜர் என்னும் பெயருண்டு. அவருடைய மகன் நான்முகனுக்குச் சமமானவரான துரோணர். அவருக்குப் பிள்ளை திரௌணியான அச்வத்தாமா. அவன் எதிரிகளாகிய மரங்களுக்கு இடியைப் போன்றவன்.
- அதன் பிறகு மன்னர் திருமுடிகளில் இருத்திய பாதக்கொழுந்தை உடைய பல்லவன் என்பவன் தோன்றினான். பல மன்னர்கள் தோன்றிய அந்த குலம் அவனுடைய பெயரால் புகழ்பெற்றது.
- அவனுக்கு இந்திரனுக்குச் சமமான வலிமையுடையவனும் தன் குணங்களால் மக்களின் சோகத்தைப் போக்கியவனுமான அசோக வர்மா தோன்றினான். அவனுடைய மகனான ஹரிகுப்தன் என்பவனது மகனாக காடார்ய வர்மா என்பவன் தோன்றினான்.
- அதன் பிறகு எல்லா அரசர்களாலும் வணங்கப்பெற்ற திருவடித்தாமரைகளையுடைய ஜ்யாமல்லன் முதலான பல்லவ அரசர்கள் உலகை நுகர்ந்து மறைந்த பிறகு எதிரி குலமாகிய யானைகளுக்குச் சிங்கமான நரசிம்மன் தோன்றினான். அவன் கடற்கரையில் கிடந்த நிலையிலுள்ள திருமாலுக்கு கற்களால் பெருங்கோவிலெடுப்பித்தான்.
- அவனுக்கு இந்திரனுக்குச் சமமான மஹேந்திரன் என்னும் அரசன் பிறந்தான். அவனுக்கு புதல்வர்களில் உயர்ந்தவனும் சிறந்த புகழழகை உடையவனும் பரமேச்வரன் பிறந்தான். அவனுக்குக் காஞ்சியில் சிவபெருமானுக்கு மலையொத்த பெருங்கற்கோயில் எடுப்பித்த இராஜசிம்மனும் அவனிடமிருந்து எதிரிகளின் படையாகிய இருளுக்குக் கதிரவனையொத்த பரமேச்வரனும் தோன்றினர்.
- அவனுக்குப் பிறகு எல்லாவுலகையும் துளிர்க்கச் செய்தவனும் பல்லவகுலத்தின் கொடி போன்றவனுமான நந்தியும் அவனுக்கு மகனாக திருமாலையொத்தவனும் தெய்வ யானைகளையொத்த செயலுடையவனுமான ஸ்ரீ தந்திவர்மனும் தோன்றினர்.
- இவனிடமிருந்து வில்லாளிகளில் சிறந்தவனும் புண்ணியத் தொகுதிகள் உருவெடுத்தைப் போன்றவனும் எதிரிகளின் திருவாகிய தாமரைக்கு மதயானையைப் போன்றவனும் உலகையெல்லாம் மகிழ்விப்பவனுமான நந்தி தோன்றினான்.
- அவனிடமிருந்து இராஷ்டிரகூட அரசனின் மகளிடம் தோன்றியவனும் நூற்றுக்கணக்கான அரசர்களால் போற்றப்பட்ட பாதங்களையுடையவனும் மூவுலகையும் தன் புகழால் திகழச்செய்தவனும் நிருபர்களில் – அரசர்களில், துங்கமானவன் – உயர்ந்தவன் என்பதால் நிருபதுங்கன் எனப்பெயர் பெற்றவனுமான அரசன் தோன்றினான்.
- அந்த அரசன் அரசாளும்போது பலிகுலமாகிய ஆகாயத்தின் கதிரவனைப் போன்றவனும் பிறரை வெல்வதால் பரஞ்ஜயன் என்று மக்களால் போற்றப்பட்டவனுமானவன் மும்மலைகளுக்கும் தலைவனாக அரசனான்.
- அந்த அரசனுக்கு – நிருபதுங்கனுக்கு, சிவனின் சடைக்குத் தலையணியான சந்திரகலை போலவும் மேகத்திற்கு மின்னற்கொடி போலவும் ஆகாயத்திற்கு ஆகாய கங்கையைப் போலவும் இரத்தினத்திற்கு அதன் ஒளியைப் போலவும், தாமரைத் தடாகத்திற்கு அன்னத்தைப் போலவும் தேவர்களையும் அந்தணர்களையும் பூஜிப்பதில் எப்போதும் ஈடுபட்டவளான பிருதிவிமாணிக்கம் என்ற பெயருடையவள் மனைவியாக இருந்தாள்.
- எல்லாகுணங்களும் நிறைந்த அந்தணர்கள் இருப்பதற்கு இடத்திற்காக அவள் ஒருமுறை அந்தணர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டாள். அவளும் தன் தலைவனை இதற்காக வேண்டிக் கொண்டாள்.
- அந்த பல்லவ அரசனும் சைலத்ரய இந்திரனால் வேண்டிக் கொள்ளப் பட்டவனாய் அந்தணர்களின் சிறந்தவர்களுக்கு இடம் வழங்கற்பொருட்டு வேண்டிக் கொள்ளப்பட்டான்.
- அந்த அரசனும் பிருதிவி மஹாதேவி மங்கலம் என்னும் பெயரோடு கிராமத்தை அந்தணர்களுக்கு தானியங்கள் நிறைந்த பூமியைத் தருமாறு ஆணையிட்டான்.
- இதற்கு ஆணத்தியானவன் திரமிடாதிராஜன் – தமிழ்ப்பேரரையன் என்பவன் ஆவான். அவன் அறியாமையாகிய கலி விலகப்பெற்றவன். கலைஞன். பரஞ்ஜயன் என்னும் பெயருடையவன். சுற்றத்தாரை மகிழ்வித்தவன். அவன் தர்மராஜரான யுதிஷ்டிரருக்குச் சமமான கீர்த்தியுடையவன்.
- எதுவரையில் எல்லா குலமலைகளின் தொகுதியின் குவியலால் பாரமுடைய பூமியை மீறி கடல்கள் மேற்பொங்கியெழும் அலைகளின் தொகுதியால் மூழ்கடிக்காமல் இருக்கின்றனவோ, எதுவரை பன்னிரண்டு சூரியர்களும் ஆகாயத்தோடு தொடர்பு ஏற்படுத்தாமல் இருக்கின்றனவோ அதுவரையில் இந்த தர்மம் நல்லவழியில் எல்லா தடைகளும் நீங்கியதாய் இருக்கட்டும்.
- கபடமற்ற இதயமுடையவனும் தர்மமுடையவனும் நன்றியறிபவனும் கல்வியின் கடலும் புகழப்பெற்ற ஒழுக்கமுடையவனுமான குமாரன் என்ற கவி இந்த பிரசஸ்தியை இயற்றினான்.
- இந்த பிரசஸ்தி அதிக அறிவுடைய நம்பன் என்னும் பெயருடைய சிற்பியால் கூபகிராமத்தில் எழுதப்பெற்றது. அவன் வரிவடிவங்களை அறிந்தவன்.
சில வரலாற்றுக் குறிப்புக்கள்
- இந்தச் செப்பேடு முதன்முதலாக ஹரிகுப்தன் என்னும் அரசனின் பெயரை அசோகவர்மனின் மகனாகத் தருகிறது,
- சோழர்தம் செப்பேடுகளில் சோழன் என்னும் ஒருஅரசன் குறிப்பிடப்பெறுவதைப் போல இந்தச் செப்பேட்டில் காடார்யன் என்னும் அரசன் குறிப்பிடப்பெற்றுள்ளான். காடவன் என்னும் சொல்லை வடமொழியாக்கம் செய்து இவ்விதம் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. என்.இரமேசம் காடுவெட்டி என்னும் அரசன் இவன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- மரபு வழியில் ஒருவனாகக் குறிப்பிடப்பெற்றுள்ள ஜியாமல்லன் என்ற பெயரும் புதியதாகக் காணப்படுகிறது. இதன் பரியாயப் பெயரான் பிருதுவிமல்லன் என்னும் பெயர்தான் இயற்பெயரா அல்லது ஜியாமல்லன் என்பதே இயற்பெயரா என்பது விளங்கவில்லை.
- இந்தச் செப்பேடு தரும் மிக அரிய தகவல் முதலாம் நரசிம்மன் கடற்கரையில் திருமாலின் கிடந்த கோலத்திற்குப் பெருங்கோயில் எடுப்பித்தான் என்னும் செய்திதான். இதுவரை முதலாம் நரசிம்மனின் காலத்ததாக சில குடவரைகள் மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் செப்பேடு முதன்முறையாக நரசிம்மனின் கற்றளிக்கோயிலைக் குறிப்பிடுகிறது. இதனை விவரித்த என். இரமேசம் அவர்கள் கடற்கரைக் கோயிலில் நடுவிலுள்ள நரசிம்ம விஷ்ணு க்ருஹம் முதலாம் நரசிம்மனுடையது என்றும் மற்ற இரு சிவனுக்கான கற்றளிகளும் இரண்டாம் நரசிம்மனுடையவை என்றும் குறிப்பிடுகிறார். மேலும் ஒற்றைக்கள் தளிகளான ஐந்து ரதங்களும் கூட முதலாம் நரசிம்மனுடையவை என்று வாதிட்டுள்ளார். ஒற்றைத்தளிகளைப் பற்றிய கருத்து ஆய்வுக்குரியது.
கடற்கரையிலுள்ள திருமாலுக்கான கோயில் குடவரையைப் போலவே தாய்ப்பாறையில் அமைந்த திருமாலின் வடிவத்தைக் கொண்டது. இத்தகைய அமைப்பைக் கொண்டே அவர் முதலாம் நரசிம்மனின் காலத்தைக் கொண்டுள்ளார். மேலும் இருபுறமும் சிவனுக்கான கற்றளி அமைந்த முறை வழக்கத்திற்கு முரணானது என்பதைக் குறிப்பிட்டு, முதலில் அமைந்த கற்றளியை அணைத்தவாறு இரண்டாம் நரசிம்மன் எழுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். திரு கே. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்கள் Encyclopedia of Indian Temple Architecture – Lower Dravida Desa என்னும் நூலில் (பக்கம் 55) திருமாலின் கிடந்த கோலத்தை ஆபிசாரிக வடிவம் என்றும் காலத்தால் முந்தையது என்றும் குறிப்பிடுவது இந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. மேலும் அவந்தி சுந்தரி கதை என்னும் நூலும் கடற்கரையில் ஏற்கனவே இருந்த திருமாலின் வடிவத்தைத் திருத்திய விதத்தைக் குறிப்பிடுவதால் கடற்கரைக் கோயிலின் நடுவிலுள்ள திருமாலுக்கான ஆலயம் முதலாம் நரசிம்மனுடையது என்று கருத இடமுண்டு.
ஆனால் 1966 ஆம் ஆண்டு இதன் முன்கூரைப்பகுதியில் கண்டறியப்பெற்ற நரஸிம்ஹவிஷ்ணுக்ருஹம் என்னும் கல்வெட்டு இராஜசிம்மனின் கல்வெட்டு இந்தக் கோணத்தைத் தடுக்கத்தான் செய்கிறது. ஆகவே முதலாம் நரஸிம்ஹன் எடுப்பித்த விஷ்ணுவிற்கு மேற்கூரை முதலிய பகுதிகளும் இயைந்த இரு சிவத்தளிகளும் இரண்டாம் நரஸிம்ஹன் காலத்தில் எடுப்பிக்கப் பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன்.
- தமிழ்ப்பகுதியில் தமிழ்ப்பேரரையன் எனக்குறிப்பிடப்பெற்றிருக்கும் பெயரை வடமொழியில் திரமிடாதிராஜன் என்று மொழிபெயர்த்திருப்பது இந்தச்செப்பேட்டுக்காலத்தில் திரமிடம் என்னும் வடசொல் தமிழைக் குறித்திருப்பதற்கு ஆவணமாகிறது.
நல்ல தகவல்கள். கொஞ்சம் புராணமும்.
Great research. God Bless You. Vishwaksenan (Sub Editor Kalki. Retd)
அருமை. உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.