விமானத்தைச் சுற்றியமையும் பிராகாரம் போன்ற கட்டிட அமைப்பே மாளிகை(வடமொழியில் மாலிகா) அல்லது திருச்சுற்று மாளிகை என்று நூல்களில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமிகாமம் மாளிகை என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது.
शालायामपि शालाङ्गा निष्क्रान्ताननशोभिता।
सा शाला मालिका ज्ञेया शास्त्रेस्मिन् कामिकाह्वये।।
சாலைக்கு அங்கமாக அமைந்து முற்பகுதியில் நீட்சி பெற்றமையும் அமைப்பே மாளிகை என்று காமிகத்தில் அழைக்கப் பெறுகிறது.
இவ்விதம் மாளிகையின் விளக்கம் ஆகமத்தில் கிடைக்கிறது. மாளிகையை ஸபைகளில் ஒன்றாகவும் கருதலாம். மாளிகையை அதன் இடத்தைப் பொறுத்து ப்ராஸாதமாளிகை, முண்டமாளிகை மற்றும் ஸௌதமாளிகை என்று மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். மேலும் அது ஸஞ்சிதம், அபஸஞ்சிதம் மற்றும் உபஸஞ்சிதம் என்று மூன்று விதமாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. மற்றோர் வகையாக த்ராவிடம், நாகரம், வேசரம், ஜாதி, சந்தம், வைகல்பம், சுத்தம், மிச்ரம், ஸங்கீர்ணம், பீஜமூலம், அங்குரம் என்னும் வகைகளாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. மாளிகையை ஸாந்தாரமாகவும் ஆறு அங்கங்களைக் கொண்ட ஷட்வர்க்கமாகவும் அமைக்கலாம்.
அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து லாங்கல மாளிகை, மௌளி மாளிகை மற்றும் பத்ம மாளிகை என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம். இவற்றுள் பத்ம மாளிகை மீண்டும் பல பிரிவுகளைக் கொண்டது.
விமானத்திற்கும் மாளிகைக்கும் நடுவில் அங்கணம் அமைக்கப்பெறும். மாளிகையின் இடைப்பகுதியில் சாலைகளையும் ஸபைகளையும் அமைக்கலாம். மாளிகையின் இரு சாலைகளின் இடைப்பகுதியில் ஹாராலங்காரங்கள் அமைந்தால் அந்த மாளிகை ஸ்ரீவர்த்தனம் எனப்பெறும். இவற்றிற்குத் தலைப்பகுதி அமையாதிருந்தால் அவ்வகை பத்ம மாளிகை ஸௌபத்ரம் எனப்பெறும். தலைப்பகுதி ஸபாகாரமாக இருந்தால் அவ்வகை பத்ம மாளிகை ஸ்ரீபத்ரம் எனப்பெறும். அங்கணப்பகுதி இரட்டிப்பாகிக் கிழக்கிலும் மேற்கிலும் வாயில்களைப் பெற்றிருந்தால் பத்ர ஸுந்தரம் எனப்பெறும். இவ்வகையில் தலைப்பகுதி ஸபாகாரமாக அமைந்தால் அவ்வகை மாளிகை மேரு காந்தம் எனப்பெறும். மேற்கண்ட அளவு இரட்டிப்பாகி முன்னும் பின்னும் வாயில்கள் அமைந்து இடைவெளிகளில் கர்ணகூடங்கள் அமைந்து இவ்வகை மாளிகை ஸுமங்கலம் எனப்பெறும்.
இவ்வகை மாளிகையில் வெளிப்புறம் கண்டஹர்ம்யங்கள் அமைந்து அவற்றின் அகலத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஒழுங்கு பெற்று, முன்னும் பின்னும் வாயில்களைப் பெற்று, இடைவெளிகளில் கூடங்கள் அமைந்து விமானத்தைப் போன்ற முகசாலை அமைந்தால் அது வர்த்தமானம் எனப்பெறும். இதற்குத் தலைப்பகுதியின்றி அமைந்தால் இது மனோரம்யம் எனப்பெறும். தலைப்பகுதி ஸபாகாரமாக அமைந்தால் அது ஸ்ரீகரம் எனப்பெறும். மற்றைய பகுதிகள் ஸ்ரீகரத்தின் வேறுபாடுகளேயாகும்.
மேற்கண்ட இலக்கணத்தோடு திருவிடைமருதூரில் அமைந்த மாளிகையை ஒப்பிட்டுப் பார்த்தால் இதனை பத்ம மாளிகையின் வகையான வர்த்தமானம் என்று அடையாளம் காணமுடியும். இங்கு கண்டஹர்ம்யங்கள் சாலாகார தலைப்பு பெற்றுள்ளன. இடைவெளியில் ஹாராந்தரங்கள் அமைந்துள்ளன. கண்டஹர்ம்யங்கள் ஷட்வர்க்கமாக அமைந்துள்ளன. ஆகவே இதனை பத்ம மாளிகையின் வகையான வர்த்தமானம் என்று அடையாளம் காணவியலும். இங்கு முழுப்படம் கிடைக்காததால் வார்ஸ்தலத்தை என்னால் காணவியலவில்லை.
காஞ்சிபுரம் கைலாயநாதர் கோயிலிலும் அமைந்துள்ளது வர்த்தமான மாளிகையே ஆகும். ஆனால் இங்கு கண்டஹர்ம்யங்கள் உட்பகுதியில் நீட்சி பெற்றுள்ளன.