இதுவரை சுவடிகளுக்கான முக்கியமான எழுதுபடுபொருட்களான பனையோலை. பூர்ஜபத்ரம், காகிதம் மற்றும் ஸாஞ்சிபாத்தைப் பற்றிப் பார்த்தோம். இப்போது நாம் முக்கிய மற்ற பொருட்களைப் பார்ப்போம். முக்கியமற்ற பொருட்கள் இரு பிரிவுகளாக உள்ளன.
- உலோஹங்கள்
- உலோஹமற்ற பொருட்கள்
உலோஹங்களில் இப்போது நாம் அரச உலோஹமான தங்கத்தைப் பயன்பாடு சுவடித்துறையில் எவ்விதம் அமைந்துள்ளது என்று காண்போம். தங்கமும் தாமரத்தைப் போல எளிதில் உருகும் தன்மையுடையது என்பதாலும் அதனையும் அடித்து ஏடுகளாக்கி எழுதவியலும். ஆயினும் அதன் அருமையையும் விலையையும் கருத்திற்கொண்டு அது அரிதாகவே எழுதப்பயன்படுத்தப்பெற்றுள்ளது.
இலக்கியச்சான்றுகள்
பௌத்த ஜாதக நூல்கள் தங்க ஏடுகள் (ஸுவண்ண பத்ரம்) முக்கியமான இலக்கியங்களையோ அல்லது அறநூல்களையோ அல்லது முக்யமான வீட்டுத்தரவுகளையோ எழுதப்பயன்படுத்தப்பெற்ற செய்தியைத் தருகின்றன. பாரவியின் செய்யுட்களில் ஒன்றான ஸஹஸா ந விததீத ந க்ரியாம் என்னும் செய்யுளை தங்கத்தில் பொறித்து வைத்தனர் என்னும் செய்தியையும் காண்கிறோம்.
நைஷதீய சரிதம் தங்க தாழை மடல்களில் எழுதப்பெற்றதைக் குறிப்பிடுகிறது.
दलोदरे काञ्चनकेतकस्य क्षणीन्मषीभावुकवर्णरेखाम्।
तस्यैव यत्र स्वमनङ्गलेखं लिलेख भैमीनखलेखनीभिः।। (6.63)
பழைய சுவடிகள்
தக்ஷசீலத்தின் அருகிலுள்ள கங்கு ஸ்தூபத்தில் ஒரு தங்கச்சுவடி கிடைத்தது. இது கரோஷ்டி லிபியில் எழுதப்பெற்றது.
பர்மாவில் பழைய ப்ரோம் நகருக்கருகில் மௌக்கான் என்னும் சிற்றூரில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு தங்க ஏடுகள் கிடைத்துள்ளன. இவை ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கருதப்பெறுகின்றன.
பர்மாவின் ஹ்மாஸ்வா என்னும் கிராமத்திலிருந்து 20 தங்க ஏடுகள் கிடைத்துள்ளன. இவையும் அதே காலத்தைச் சேர்ந்தவை. இவை தெலுகு-கன்னட லிபியில் எழுதப்பெற்றுள்ளன.
வட இலங்கையில் இரண்டு கிலோ எடையுள்ள தங்க நூல் ஒன்று கிடைத்துள்ளது. இது 1500 ஆண்டுகள் பழமையானது.
ப்ரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மலையாள வரிவடிவத்தில் எழுதப்பெற்ற தங்க சுருள் ஒன்று உள்ளது.
மைசூர் அரண்மனையிலுள்ள தங்கக் கொற்றக் குடையில் வடமொழியில் 24 செய்யுட்கள் பொறிக்கப்பெற்றுள்ளன.