தாமிரம் செப்புப்பெருங்காலத்திலிருந்தே மனிதனின் பயன்பாட்டிலுள்ளது. ஆகவே இது எழுதுதற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே பயன்பட்டு வந்திருக்கிறது. தாமிரத்தை அடித்துத் ஏடுகளாக்கி எழுத்துக்களைப் பொறிப்பர். பழங்காலத்துச் செப்பேடுகளில் குறிப்பாக தக்ஷசிலாவின் செப்பேடும் மேலைக்கங்கர்களின் செப்பேடுகளும் பனையோலைகளின் வடிவிலேயே அமைந்துள்ளன. வட இந்திய செப்பேடுகள் தென்னிந்திய செப்பேடுகளைக் காட்டிலும் அகலமாக அமைந்துள்ளன. செப்பேட்டாவணம் பல செப்பிதழ்களைக் கொண்டிருக்கும். இவற்றை ஒன்றிணைத்து அவற்றின் தலைப்பகுதியிலேயோ அல்லது இடப்புறத்திலேயே ஒரு துளையிட்டு அதன் வழியாக ஒரு பித்தளையிலான கம்பியைக் கொடுத்து அந்தக் கம்பியின் முனைகளை இணைத்து அதன் இணைப்புப் பகுதியில் அரசனின் இலச்சினையைப் பொறிப்பர். இதனால் ஏடுகளின் பிற்சேர்க்கையும் மாறுபாடும் தவிர்க்கப்பெறும். முதல் மற்றும் இறுதியிதழ்கள் உட்பக்கம் மட்டுமே எழுதப்பெறும். ஏனைய இதழ்கள் இருபுறமும் எழுதப்பெறும். நான்கு முனைகளும் சிறிதே உயர்த்தப்பெறும். இதனால் இதழ்கள் உராய்வு தவிர்க்கப்பெறும். இதில் எழுதப்பெறும் செய்யுட்கள் அரசவைக் கவிஞரால் இயற்றப்பெற்று ஆசாரியால் பொறிக்கப்பெறும்.
செப்பேடுகள் வடமொழியில் தாம்ர படம், தாம்ர பட்டிகா, ..பலகம், பத்ரம், சாஸனம், தானபத்ரம் எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பெறுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலும் வட மற்றும் தென்னிந்தியாவில் செப்பேடுகளின் பயன்பாடு ஒரேபோலேயும் பிறகு தென்னாட்டில் அதிகரித்தும் காணப்பெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு
http://sarasvatam.in/ta/2015/06/19/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2/
பொதுவாக செப்பேடுகளில் காணப்பெறும் பொருள் அரச ஆவணமாகவே அமைந்துள்ளது.
மிகப்பழமையான செப்பேடு ஸோகௌரா என்னுமிடத்தில் கிடைத்துள்ளது. இது எழுத்தியல் அடிப்படையில் அசோகனுக்கு முற்பட்டதாகக் கருதப்பெறுகிறது. இந்தச் செப்பேட்டில் எழுத்துக்கள் பொறிக்கப்பெறாமல் மண்ணில் அச்செடுத்து ஒற்றியெடுக்கப்பெற்றுள்ளது.
இரண்டாவது பழைய செப்பேடு பஞ்சாபிலுள்ள ஸ்ரீவிஹாரம் என்னுமிடத்தில் கிடைத்த செப்பேடாகும். இதன் காலம் பொயுமு 46 என்று நிர்ணயிக்கப்பெற்றுள்ளது. தக்ஷசீலத்தில் கிடைத்த செப்பேட்டின் காலம் பொயு முதலாம் நூற்றாண்டு என்று நிர்ணயிக்கப்பெற்றுள்ளது.
சில இடங்களில் செப்பேடுகளில் இலக்கிய பொருளும் கிடைத்துள்ளது. 1922 ஆம் ஆண்டு திருப்பதியில் ஏழுமலையான் கோயிலிலுள்ள ஸங்கீர்த்தன பாண்டாகாரத்திலிருந்து நூற்றுக்கணக்கான செப்பேடுகள் கண்டெடுக்கப்பெற்றன. இவற்றில் தாள்ளபாகம் அன்னமாசார்யாரின் கீர்த்தனங்களில் 12000 கீர்த்தனங்கள் எழுதப்பெற்றவையாகக் கிடைத்தன.
தாள்ளபாகம் வாரியாரின் சில பாடல்களும் 1904 இல் கிடைத்துள்ளன.