மேலைச் சாளுக்ய பேரரசின் பெண்ணரசி

     முதலாம் நரஸிம்ஹ பல்லவன் மேலைச் சாளுக்யர் தம் கோநகராம் வாதாபியைத் தூளாக்கி எரிகொளுவிய செய்தியை நாமறிவோம். ஈடற்ற பேரரசனாகத் திகழ்ந்த இரண்டாம் புலகேசியும் கூட அவனது கரங்களால் மாண்டுபட்டான். இவ்விரு செய்திகளும் வாதாபியிலுள்ள பொயு 642 இல் பொறிக்கப்பெற்ற பல்லவ சாஸனத்தாலும் அவர்தம் குலச் செப்பேடுகளாலும் உய்த்துணரக் கிடக்கிறது. இரண்டாம் புலகேசியின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய மகன்களான ஆதித்யன், சந்த்ராதித்யன் மற்றும் முதலாம் விக்ரமாதித்யன் ஆகியோர் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். விக்ரமாதித்யனின் ஹொன்னூர் செப்பேட்டில் இவர்களின் மற்றொரு தமையனான ரணராகவர்மன் என்பான் குறிப்பிடப்பெற்றிருந்தாலும் கூட அவன் அரசாட்சியில் செயலொன்று புரிந்தானில்லை. இரண்டாம் புலகேசி மரணமடைந்ததன் பின்னர் வாதாபியை விட்டொதுங்கி வாழ்ந்த அவனுடைய மக்களில் ஆதித்யவர்மன் முடிசூடினான். அவன் பொயு 645 வரையில் மூன்றாண்டுகள் கோலோச்சினான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான அபிநவாதித்யன் ஓராண்டு 646 வரையில் கோலோச்சினான். அதன் பிறகு ஆதித்யனின் இளவலான சந்த்ராதித்யன் 649 வரையில் மூன்றாண்டுகள் கோலோச்சினான். அதன்பிறகு அவனுடைய மனைவியான விஜயபட்டாரிகா என்பவள் ஐந்து ஆண்டுகள் கோலோச்சினாள். அவளுடைய மகன் சிறுவனாக இருந்தமையால் இவளே அரசைச் செலுத்தினாள் என்றே அறிஞர் கருதுகின்றனர்.

     மேற்கண்ட தகவல்கள் அந்தக் குலத்தினர் வெளியிட்ட செப்பேடுகளைக் கொண்டு உய்த்துணரக் கிடக்கின்றன. விஜயபட்டாரிகா வெளியிட்ட இரு செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவை அந்த அரசியின் ஆட்சியை வெளிப்படுத்துகின்றன.

     முதல் செப்பேடான நேரூர் செப்பேடு அவளுடைய ஐந்தாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றது. இந்தச் செப்பேடு ஆச்வயுஜ மாதத்தின் பௌர்ணமிக்குப் பிறகு இரண்டாம் நாளில் வெளியிடப்பெற்றது. இந்தச் செப்பேடு சாளுக்ய குலத்தின் வரலாற்றை இரண்டாம் புலகேசி வரையில் தருகிறது. பிறகு அந்த அரசியின் கணவனான சந்த்ராதித்யனைப் பற்றிக் கூறுகிறது. இந்தச் செப்பேடு விஜயபட்டாரிகா நரகாக்ரஹாரத்தில் சில நிலங்களை ஆர்யஸ்வாமி தீக்ஷிதர் என்பவருக்கு அளித்ததை ஆவணமாக்குகிறது.

     இரண்டாம் செப்பேடு கோச்ரேவைச் சேர்ந்ததாகும். இந்தச் செப்பேடு வைசாக மாதத்தின் வளர்பிறையின் பன்னிரண்டாம் நாளில் வெளியிடப்பெற்றதாகும். இந்தச் செப்பேடு விஜயமஹாதேவி மேற்கூறிய நாளில் விரதமிருந்து பிறகு கொடையளித்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

vijaya

     சில அறிஞர்கள் விஜயபட்டாரிகா தனியே ஆளவில்லையெனவும் இவை அவளுடைய கணவரின் காலத்திலேயே வழங்கப்பெற்றவையெனவும் குறிப்பிடுகின்றனர். அவ்விதம் ஒருவேளை கணவனின் காலத்தில் வெளியிடப்பெற்றிருந்தால் “ஸ்வ-ராஜ்ய-பஞ்சம-ஸம்வத்ஸரே” – தன்னுடைய ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில் – என்னும் செப்பேட்டு வாசகம் எவ்விதம் பொருந்தும். ஆகவே மேலைச்சாளுக்ய குலத்தை மீண்டும் பெருமையுறச்செய்த முதலாம் விக்ரமாதித்யன் ஆட்சிக் கட்டிலில் அமரும் வரையில் விஜயதேவி ஆட்சி செய்ததாகவே கோடல் பொருத்தமானதாகும்.

     அவளுடைய சிறுவனான மகனைப் பற்றித் தகவல்களில்லை. அவளுக்குப் பின் ஆண்டவர்களும் அவர்தம் செப்பேடுகளில் அவளைக் குறிப்பிட்டாரில்லை. ஆயினும் மேற்கண்ட செப்பேடுகளைக் கொண்டு மேற்கூறிய முடிவு சரியே என்று கொள்வது சரியாக இருக்கிறது.

     நாம் இந்திய வரலாற்றில் ருத்ரமாதேவி, ஜான்ஸி ராணி என்று பல அரசிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் எவரும் போற்றாத இந்த அரசியையும் நினைந்து கொள்வோமே……

Please follow and like us:

One thought on “மேலைச் சாளுக்ய பேரரசின் பெண்ணரசி

  1. வரலாறு போற்றுவோம்.ஆசானை வணங்குவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *