இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை

     ஸனாதன தர்மத்தில் ஸமூஹ மேம்பாட்டிற்காகப் பலவகையான சடங்குகள் கூறப்பெற்றிருக்கின்றன என்பதை நாமறிவோம். போரில் வெல்லவும் பலவகையான சடங்குகள் கூறப்பெற்றிருக்கின்றன. நம்முடைய முன்னோர்கள் இத்தகைய சடங்குகளைத் தம் வெற்றிக்காகவும் நன்மைக்காகவும் மேற்கொண்டனர். அத்தகையதோர் சடங்கு காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்க கல்வெட்டால் அறியக்கிடக்கிறது.

     இந்தக் கல்வெட்டு பொயு 1166 முதல் 1178 வரையாண்ட இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் காலத்தைச் சேர்ந்தது. அவனுடைய ஆட்சியில் இலங்கையிலிருந்து படை தமிழகத்தில் புகுந்து பல கோயில்களையும் அழித்தது. மக்களுக்கும் சொல்லொணாத் துயரை அளித்தது. இந்தப் படை சோழனால் துரத்தப்பெற்ற குலசேகர பாண்டியனுக்குத் துணையாக தமிழகம் புகுந்தது.

     இந்த இலங்கைப் படையைப் பெரும் அபாயமாகக் கண்டனர் சோழப்படையினர். ஆகவே போரில் வெல்ல பூஜை பரிஹாரங்களையும் செய்ய விழைந்தனர். ஸ்வாமிதேவர் என்றழைக்கப்பெற்றவரும் ராஜகுருவுமான ஜ்ஞானசிவரை இதற்காக வேண்டிக்கொண்டனர். அவர் இருபத்தெட்டு நாட்கள் அகோர பூஜை செய்தார். அதன் பயனாக ஜயத்ரத தண்டநாதனும் லங்காபுரி தண்டநாதனும் வழிநடத்திய இலங்கைப்படை தோற்றோடியது. இத்தகைய போரில் வெற்றியைத் தேடித் தந்ததற்காக அந்த ராஜகுருவிற்கு ஆல்பாக்கம் என்னும் சிற்றூர் தானமாக வழங்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு ராஜாதிராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டைக் குறிப்பதால் இதன் காலம் பொயு 1171 ஆகும்.

ins1 copyins2 copy

இந்தக் கல்வெட்டு இரண்டாம் ராஜாதிராஜனின் மெய்கீர்த்தியுடன் துவங்குகிறது. துவக்கத்திலேயே இலங்கைப்படை தமிழகத்தில் மேற்கொண்ட அக்ரமங்களை கூறும் இந்தக் கல்வெட்டு ராமேச்வரம் கோயிலில் நிகழ்த்திய அட்டூழியங்களையும் கூறுகிறது. சோழர்களின் சிற்றரசனான எதிரிலி சோழ சம்புவரையன் என்பான் ராஜகுருவான ஸ்வாமிதேவரை அணுகி ஜபம், ஹோமம், அர்ச்சனைகள் முதலிய பரிஹாரங்களைச் செய்து எப்படியாவது சோழப்படையை வெல்விக்குமாறு வேண்டினான். அவரும் நிகழும் சூழ்நிலையை அறிவதாகவும் ராமேச்வரம் கோயிலைக் கொள்ளையடித்து பூஜையையும் நிறுத்திய சிவத்ரோஹிககளான இலங்கைப்படையினரை விடமாட்டேன் என்றும் கூறி இருபத்தெட்டு நாட்கள் ஆபிசாரிகமாக அகோர பூஜை செய்தார். இதற்கிடையே சோழ தளபதியான பல்லவராயரிடமிருந்து ஓலை வந்தது. வலிமை மிக்க இலங்கைப் படைத் தோற்றோடுவதாகத் தகவல் வந்தது. இதனை ஸ்வாமிதேவரின் காலடியில் அர்ப்பணித்த சம்புவரையன் ஏதேனும் பெற்றுக்கொள்ளுமாறு கோரினான். ஸ்வாமிதேவரும் ஆல்பாக்கத்தைத் தருமாறு கேட்டார். அந்த சிற்றூர் நீர்வார்த்துத் தரப்பட்டது. இறுதியிலுள்ள ச்லோகங்கள் தானத்தின் பெருமையையும் அதை அழித்தாரின் பாவங்களையும் கூறும் ஒம்படைக் கிளவியாக அமைந்துள்ளது.

Please follow and like us:

One thought on “இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை

  1. Ithu pondra poojaigal vijayalayar kaalam thodangi chzhargal veezhum varai veru eppozhuthenum nadanthullatha?

    Valimai kundriya chozhanukku ithu pondra nambikkaigalil manam sendru vittathu polum thondrugirathu..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *