லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்

     பொதுவாக ஒரு பகுதியில் அல்லது நாட்டில் வெளியிடப் பெறும் ஆவணங்களான செப்பேடுகள்,கல்வெட்டுக்கள் போன்றவற்றில் இடம்பெறும் ப்ரசஸ்தியில் உவமானங்களாக புராண புருஷர்களோ அல்லது அவர்தம் மூதாதையரோதான் இடம் பெறுவர், இராமபிரான், தர்மர், அர்ஜுனன் போன்றவர்களோடு வெளியிடும் மன்னனையோ அல்லது அவர்தம் மூதாதையரையோ ஒப்பிட்டுத்தான் அரசாங்க கவிகள் யாப்பர். ஆனால் லாவோஸில் கிடைத்த ஒரு கல்வெட்டில் பொற்கைப் பாண்டியன் குறிப்பிடப்பெற்றிருப்பது மிகவும் சிறப்பான தகவலாகும்.

பொற்கைப் பாண்டியன்

     இவன் நீதி வழுவாது செங்கோல் செலுத்தியவன். கீரந்தை என்னும் வேதியன் வெளியூர் செல்லும்போது நகர்வலம் செல்லும் அரசன் காப்பான் என்று கூறியதைக் கேட்டு நெகிழ்ந்து ஒருநாள் பேச்சுக் கேட்டு கதவைத் தட்ட வேதியன் வந்ததை அறிந்து மற்றைய வீடுகளையும் தட்டி அதற்குத் தண்டனையாகத் தனது கரத்தையே துணித்தவன். பிறகு பொன்னாலான கையைப் பூண்டமைபற்றி இவனுக்குப் பொற்கைப் பாண்டியன் என்னும் பெயர் வழங்கலாயிற்று. இவனைப் பற்றிக் கூறும் சிலப்பதிகாரம்

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி,

புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்

“அரைச வேலி அல்லது யாவதும்

புரை தீர் வேலி இல்” என மொழிந்து,

மன்றத்து இருத்திச் சென்றீர்: அவ்வழி

இன்று அவ் வேலி காவாதோ?, என,

செவிச் சூட்டு ஆணியின், புகை அழல் பொத்தி,

நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,

வச்சிரத் தடக் கை அமரர் கோமான்

உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை

குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,

(இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – சிலப்பதிகாரம் கட்டுரைக்காதை)

                என்று கூறுகிறது. குணமாலை என்னும் நூல்

நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன்

ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த

பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்

கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த

விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்

பன்மாண் சாயல் பரதவர் மகட்கே

என்று இவன் புகழைப் பாடுகிறது. இத்தகைய நீதியாளனின் புகழ் ஆறாம் நூற்றாண்டில் இன்றைய கிழக்காசிய நாடுகளிலும் பரவலாக வழங்கியது போலும்.

     இன்றைய லாவோஸின் ஒரு பகுதி அற்றை நாளில் சம்பாசக்தி என்று வழங்கிவந்தது. இப்போது அப்பகுதி சம்பாஸக் என்று வழங்கப்பெறுகிறது. இந்தப் பகுதியில் மேனாள் இளவரசரின் அரண்மனைக்கருகில் ஒரு வடமொழிக் கல்வெட்டு கிடைத்தது. இந்தக் கல்வெட்டு எழுத்தமைதி கொண்டு 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நிர்ணயிக்கப்பெற்றுள்ளது. கதம்பர்களின் எழுத்தை ஒத்தவாறு அமைந்துள்ளது இதன் எழுத்தமைதி. இந்தக் கல்வெட்டுத்தான் பொற்கைப் பாண்டியனைக் குறிப்பிடுகிறது. இதனை வெளியிட்ட மன்னவனின் பெயர் மங்களராஜன் அல்லது தேவானீகன் என்பதாகும். இந்தக் கல்வெட்டு 64 வரிகளில் அழகிய வடமொழிச் செய்யுட்களையும் உரைநடையையும் கொண்டுள்ளது.

                இந்தக் கல்வெட்டின் துவக்கம் அந்த மன்னவன் சங்கர-நாராயண-பிதாமஹர்களின் அருளினால் முடிசூடினான் என்று மும்மூர்த்திகளையும் குறிப்பிடுகிறது.

     இந்தக் கல்வெட்டு அந்த மன்னனை ஒப்பிடும் உவமானங்களாவன –

युधिष्ठिर इव सद्धर्मे भगीरथनरपतिरिव प्रजापालने धनञ्जय इव रिपुगणविजये इन्द्रद्युम्न इव भूरियज्ञविधाने, शिबिरिव … पालने, भगवन्महापुरुषब्राह्मण्यतानुसारीव ब्राह्मण्यभावे, कनकपाण्ड्य इव न्यायरक्षणे, महोदधिरिव गाम्भीर्य्ये मेरुरिव स्थैर्ये …

யுதி⁴ஷ்டி²ர இவ ஸத்³த⁴ர்மே ப⁴கீ³ரத²னரபதிரிவ ப்ரஜாபாலனே த⁴னஞ்ஜய இவ ரிபுக³ணவிஜயே இந்த்³ரத்³யும்ன இவ பூ⁴ரியஜ்ஞவிதா⁴னே, ஸி²பி³ரிவ … பாலனே, ப⁴க³வன்மஹாபுருஷப்³ராஹ்மண்யதானுஸாரீவ ப்³ராஹ்மண்யபா⁴வே, கனகபாண்ட்³ய இவ ந்யாயரக்ஷணே, மஹோத³தி⁴ரிவ கா³ம்பீ⁴ர்ய்யே மேருரிவ ஸ்தை²ர்யே …

தர்மத்தில் யுதிஷ்டிரரைப் போன்றவன், மக்களைக் காப்பதில் பகீரதனை ஒத்தவன், எதிரிகளை வெல்வதில் விஜயன், பல யாகங்களைச் செய்வதில் இந்த்ரத்யும்னன், … காப்பதில் சிபியைப் போன்றவன், வேததர்மத்தை அனுஸரிப்பதில் விஷ்ணு, நீதியைக் காப்பதில் கனகபாண்ட்யன், கம்பீரத்தில் பெருங்கடல், நிலைத்தன்மையில் மேருமலை

     என்று செல்கிறது கல்வெட்டு. இதில் நமக்குத் தேவையான குறிப்பு, நீதியை நிலைநாட்டுவதில் கனகபாண்ட்யன் அதாவது பொற்கைப் பாண்டியனையொத்தவன் என்னும் குறிப்புத்தான். பொற்பாண்டியன் என்னும் பொருள்படும்படி கனகபாண்ட்யன் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.

     எங்கோ கிழக்குமூலையிலுள்ள ஒரு நாட்டில் ஆறாம் நூற்றாண்டிலமைந்த வடமொழிக் கல்வெட்டு பாண்டிய மன்ன்னைப் புராணபுருஷர்களைப் போல உவமானமாகக் குறிப்பிடுவது தமிழர்தம் பெருமை தாரணியில் பரவியிருந்த முறைமையை எடுத்தியம்புவதுதானே…

Please follow and like us:

2 thoughts on “லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்

  1. மணீமேகலையீல் கூறப்படும் சம்பாபதீதான் லாவோசா?அருமை.இப்படியல்லவா இருக்கவேண்டும் அரசன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *