மற்றைய சில கருவிகளும் சுவடிகளை எழுதுங்கால் பயன்படுத்தப் பெறுகின்றன. வட்டங்களும் கோடுகளும் வரைய சுழற்கருவிகளும் அளவிகளும் கூட பயன்படுத்தப்பெறுகின்றன. ராயபஸேணிய ஸுத்தம் என்னும் ஜைன நூல் சுவடிகளோடு தொடர்புடைய பலவிதமான கருவிகளைக் குறிப்பிடுகிறது. கூழாங்கற்களும் சங்கும் கூட மென்மையாக்கும் கருவிகளாகப் பயன்படுகின்றன. எழுத்தாணிகளை வைக்கும் பெட்டிகளும் கூட பயன்படுத்தப்பெறுகின்றன. சிலவேளை மைக்கூடுகள் இத்தகைய எழுத்தாணிப்பெட்டகத்தோடு இணைக்கப்பட்டதாய் கிடைத்துள்ளன. மற்றைய சில கருவிகள் கீழே குறிப்பிடப்பெற்றுள்ளன.
ரேகாபடீ
பூர்ஜபத்ரம் அல்லது காகிதத்தில் கோடுகளை நேராக வரைவதற்காக ஒரு விதமான பலகை பயன்பட்டது. அந்தப் பலகையில் நேரான கம்பிகளைப் பொருத்தியிருந்தனர். இதன் மீது காகிதத்தை வைத்து பஞ்சினால் கம்பிகள் மீது தேய்க்கும்போது கம்பியின் அச்சு காகிதத்தில் விழும். இதைக்கொண்டு நேராக எழுதவியலும். இவை ரேகாபடீ அல்லது ஸமாஸபடீ எனப்பெற்றன.
லிப்யாஸனம்
இந்தக் கலைச்சொல் ராயபஸேணிய ஸுத்தத்தில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. உரையாளர்கள் இதனை மைக்கூடு என்று கருதினர். ஆனால் பிற்காலத்திய ஆய்வுகள் இது சுவடிகளை வைக்கும் வ்யாஸபலகை எனப்பெறும் சிக்குபலகை என்று நிரூபிக்கின்றன.
ச்ருங்கலா என்று ராயபஸேணிய ஸுத்தம் குறிப்பிடுவது மைக்கூடோடு இணைக்கும் சங்கிலியைக் குறிப்பிடுவதாகும். அந்த ஸுத்தம் குறிப்பிடும் கம்பி என்பது சுவடிகளின் இருபுறமும் வைக்கப்பெறும் பலகைகளைக் குறிக்கும்.