சோழர்படை கங்கமண்டலத்தைப் பத்தாம் நூற்றாண்டில் கைப்பற்றிய பிறகு அங்கு அழகிய கோயில்களையும் சமைத்தது. கோலாரில் உள்ள ஸப்த மாதா கோயில் ராஜேந்த்ர சோழனின் ஆணைப்படி அவனுடைய படைத்தளபதியால் எடுப்பிக்கப்பெற்றது. இது அந்த கோயிலுள்ள ஒரு கல்வெட்டால் உறுதியாகிறது. இந்தக் கல்வெட்டில் வழக்கமான மெய்கீர்த்திக்குப் பிறகு ராஜேந்த்ர சோழனின் 22ஆம்ஆட்சியாண்டில் சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டிலுள்ள வெண்ணாட்டு அமண்குடி என்னும் பெயர்கொண்ட கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்தைச்சேர்ந்த நராக்கண் என்னும் குடிப்பெயர் கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் ராமனான ராஜேந்த்ர சோழ ப்ரஹ்ம்மாராயனின் மகன் மாராயன் அருமொழியான சேனாபதி உத்தமசோழப்ரஹ்ம மாராயன் இந்தக் கோயிலை செங்கல்லில் இருந்து கற்றளியாகி மாற்றியதையும் இந்தக் கோயிலில் நிலவும் கதிரவனும் உள்ள வரை நுந்தாவிளக்கு எரிப்பதற்காக ஏழு சாவாமூவா நல் எருமைகளை அந்தக் கோயிலில் ஆராதனை செய்யும் சிவப்ராஹ்மணர்களான ஆலன் வினகன் மற்றும் சங்கரன் தியம்பகன் ஆகியோர் உள்ளிட்ட சிலரின் வசம் ஒப்படைத்ததைக் குறிப்பிடுகிறது. இதற்காக நூறுபலம் நிறையுள்ள விளக்கையும் கொடுத்ததையும் குறிப்பிடுகிறது.
அதன் பிறகு இந்தக் கோயிலைக் கற்றளியாக்க உதவிய அந்தணர்களாகிய ஜயங்கொண்ட சோழமண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகிணூர் நாட்டுக் காட்டுமானபாக்கத்தைச் சேர்ந்த மூத்த வகைத்தூதன் திருப்பொறி அம்பலத்தாடி என்பவனும் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு எயிநாங்குடையானான மூத்தவகைத்திருப்பள்ளித் தொங்கலுடையான் சிந்தாமணி சங்கரன் என்பவனும் சந்தி விளக்கு ஒன்றை வைத்ததையும் குறிப்பிடுகிறது.
மெய்கீர்த்திக்குப் பின்னான இந்தக் கல்வெட்டின் வரிகள் கீழே தரப்பெற்றுள்ளன. இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா கர்ணாடிகாவின் 10ஆம் தொகுதியில் 108ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்த்ர சோழ தேவர்க்கு யாண்டு 22 ஆவது சோழமண்டலத்துக் கங்காசாயரத்துக் குவளால நாட்டு குவளாலத்துப் பிடாரியார் கோயி.. முன்பு இட்டிகையாலெடுத்து நின்றது.. ங்கி உடையார் ஸ்ரீராஜேந்த்ர சோழதேவர் அருளிச்செய்ய எடுப்பித்தான் சோழ ம…லத்து உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு அமண்குடியான கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்து நராக்கண் ஸ்ரீ க்ருஷ்ணன் ராமனான ராஜேந்த்ர சோழ ப்ரஹ்ம்மாராயன் மகன் மாராயன் அருமொழியான சேனாபதி உத்தமசோழப்ரஹ்ம மாராயன் இக்கோயில் எடுப்பித்து இதேவர்க்கு சந்த்ராதித்ய வரை எரிக்கக் கடவதாக ஜனவார்கல்பமென்னும் …. த திருநுந்தாவிளக்கொன்றினுக்கு இக்கோயிலில் சிவப்ராஹ்மணன் ஆலன் வினகனுஞ்சங்கரன் தியம்பகனும் உள்ளிட்டார் வசம் வைத்த சாவா மூவா நல்லெருமை ஏழு இவ்விளக்கு நின்றெரிய இட்ட நுந்தா விளக்கு நிறை ஆயிரவனது கோலால் நூற்றுப்பலம் இவற்கேயித்திருக்கோயில் எடுப்பித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகிணூர் நாட்டுக் காட்டுமானபாக்கத்து ப்ராஹ்மணன் மூத்த வகைத்தூதன் திருப்பொறி அம்பலத்தாடி க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு எயிநாங்குடையானான மூத்தவகைத்திருப்பள்ளித் தொங்கலுடையான் சிந்தாமணி சங்கரன் குவளாலத்துப் பிடாரியார்க்கு சந்த்ராதித்ய வரை எரிப்பதாக இத்தேவரை ஆராதிக்கும் சிவப்ராஹ்மணர் வசம் ஒரு சந்தி எரிப்பதாக வைத்த சந்தி விளக்கு ஒன்று.
மேற்கண்ட கல்வெட்டு குறிப்பிடும் நராக்கண் க்ருஷ்ணன் ராமனே தஞ்சை பெரியகோயிலின் மதில்சுவரை எடுப்பித்தவன் என்பதும் அவன் மனைவி முதலியோரும் கோயிலுக்குப் பல தானங்களையும் வழங்கியோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.