பின்வரும் கல்வெட்டு சோழபுரத்திலுள்ள ஒரு இடிபாடுற்ற சிவன் கோயிலிலிருந்து திரு. ஜீ. வெங்கோபராவ் அவர்களால் அகழ்ந்தெடுக்கப் பெற்றது. இந்தக் கல்வெட்டு வடமொழி மற்றும் தமிழ் என்னும் இரு மொழியிலும் அமைந்துள்ளது. வடமொழிப்பகுதி இரண்டரைச் செய்யுட்களோடு ஒன்பதாம் நூற்றாண்டைய க்ரந்த எழுத்துக்களில் எழுதப்பெற்றுள்ளது. தமிழ்ப்பகுதி கம்பவர்மனின் எட்டாம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. தமிழ்ப்பகுதி கங்கர் பரம்பரையைச் சேர்ந்த ராஜாதித்யன் என்பான் தனது தந்தையான ப்ருத்விபதி கங்கரையர் என்பார் இறந்து பட்டமையால் பள்ளிப்படையும் நினைவகமும் எடுப்பித்து ஒரு அந்தணருக்குத் தானம் அளித்தமையைக் குறிப்பிடுகிறது. பல்லவர் கொடிவழிக்காலத்தை நான் செய்த மீளாய்வின் படி இந்தக் கல்வெட்டின் காலம் பொயு 856 ஆகும். இதில் குறிப்பிடப்பெற்றிருக்கும் ப்ருத்வீ கங்கரையர் மேலைக்கங்கர் பரம்பரையின் முதலாம் ப்ருத்விபதியாகக் கொள்ளவியலாது. காரணம் அவனுடைய மகனின் பெயர் மாரஸிம்ஹனாகும். இதில் ராஜாதித்யனென குறிப்பிடப்பெற்றிருப்பதால் கிளைவழியைச் சேர்ந்த மன்னனாகலாம்.
இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா இண்டிகாவின் ஏழாந்தொகுதியில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
வரி 1: | स्वस्तिश्री। गांगेयवंश्यो विजयाभिरामः श्रीमाधवस्तस्य सुतो बभूव। छेत्ता शिलास्तम्भमपि प्रसिद्धः तद्वंशजोभूत् प्रथितोत्तिवर्मा।(1) ……………. गो………….. |
வரி 2: | नृपतिः परन्तपः। नृपाभिवन्द्यः शिवभक्तिमान् कविर्विकल्पकल्लोलपदार्थतत्परः। (2) राजादित्याख्यभूपः सुरतरुसदृशो नऱ्गतिनाम………. रमसौ |
வரி 3: | दापयामास वीरः। (3) கோ விசைய கம்பர்க்கு யாண்டு எட்டாவது ப்ருதிவிகங்கரையர் அதீதராயின பிற்பாடு தத்புத்ர ராஜாதித்யன் மஹாதேவன் பர ந்ருபதி மகுட கட்டித சரண |
வரி 4: | ன் தமப்பனாரைப் பள்ளிப்படுத்தவிடத்து ஈச்வராலயமும் அதீதகாரமும் எடுப்பித்து கண்டு செய்வித்தான். ப்ரவசன ஸூத்திரத்து கௌசிக கோத்ரத்து பெரும் பார்ப்பான் திட்டை சர்மா… |
स्वस्तिश्री।
மங்கலம்.
गांगेयवंश्यो विजयाभिरामः श्रीमाधवस्तस्य सुतो बभूव।
छेत्ता शिलास्तम्भमपि प्रसिद्धः तद्वंशजोभूत् प्रथितोत्तिवर्मा।(1)
வெற்றியினால் அழகுறத் திகழும் ஸ்ரீமாதவன் என்பான் கங்கர் வம்சத்தில் அவனது புதல்வனித் தோன்றினான். அவன் கற்றூணை இரண்டாகப் பிளந்து புகழ் பெற்றவன். அந்த வம்சத்தில் புகழ்பெற்ற அத்திவர்மனும் தோன்றினான்.
……………. गो…………..नृपतिः परन्तपः।
नृपाभिवन्द्यः शिवभक्तिमान् कविर्विकल्पकल्लोलपदार्थतत्परः। (2)
பெருந்தவமுடையவனும் மன்னவர்களால் வணங்கத்தக்கவனும் ஈசனின் மீது பக்திமை பூண்டவனும் கவியும் மாறுபட்ட சொற்களின் பொருளையும் அறிபவனுமான மன்னன் ……………..
राजादित्याख्यभूपः सुरतरुसदृशो नऱ्गतिनाम………. रमसौ
दापयामास वीरः। (3)
ராஜாதித்யன் என்னும் பெயருடைய அரசன் கற்பகமரத்தையொத்தவன். நற்கதியென்னும் பெயர்…… அந்த வீரன் கொடுத்தான்.
கோ விசைய கம்பர்க்கு யாண்டு எட்டாவது ப்ருதிவிகங்கரையர் அதீதராயின பிற்பாடு தத்புத்ர ராஜாதித்யன் மஹாதேவன் பர ந்ருபதி மகுட கட்டித சரணன் தமப்பனாரைப் பள்ளிப்படுத்தவிடத்து ஈச்வராலயமும் அதீதகாரமும் எடுப்பித்து கண்டு செய்வித்தான். ப்ரவசன ஸூத்திரத்து கௌசிக கோத்ரத்து பெரும் பார்ப்பான் திட்டை சர்மா…
வெற்றியுடைய கம்ப வர்மரின் எட்டாவது ஆட்சியாண்டில் ப்ருத்வி கங்கரையர் இறந்து பட்ட பின்னர் அவனுடைய மகனும் மற்றைய அரசர்களின் மகுடத்தால் உராயப்பெற்ற பாதங்களை உடையவனுமான ராஜாதித்யன் மஹாதேவன் என்பான் அவன் பள்ளிப்படுத்த இடத்தில் ஒரு சிவன் கோயிலையும் ஒரு நினைவகத்தையும் எடுப்பித்தான்.
ப்ரவசனஸூத்ரத்தையும் கௌசிக கோத்ரத்தைய.ம் சேர்ந்த பெரும் அந்தணனான திட்டை சர்மா என்பானுக்கு……
இந்தக் கல்வெட்டு முடிவடையவில்லை. சோழர்களுக்கு முந்தைய பள்ளிப்படையை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
தத்புத்திரன் என்றால் தத்து எடுத்த புத்திரனா?சத் என்றால் உண்மை அல்லவா?
இல்லை தத்புத்ரன் என்றால் அன்னாருடைய புத்ரன் என்றே பொருள்..