காஞ்சி காமகோடி பீடச்செப்பேடுகள் – 1

விஜயகண்ட கோபாலதேவனின் செப்பேடு

     பண்டைய காலத்தில் கோயில்கள், மடங்கள், மதத்தைச் சேர்ந்தோருக்கு நிலங்களும் மற்றைய பொருட்களும் வழங்கப்பெற்றன. அத்தகைய தானங்கள் ஓலைச்சுவடி, செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆகியவற்றில் பதிவு செய்யப்பெற்றன. ஆகவே இவற்றிற்கு த்ரிபலீ சாஸனம் என்ற பெயருண்டு. அத்தகைய செப்பேடுகள் ஸ்ரீமத் ஆதிசங்கரபகவத்பாதர்களிடமிருந்து உருவாகியதாகக் கூறும் காஞ்சி காமகோடி பீடத்திலும் உள்ளன. உண்மையில் இந்த மடத்தில் சோழர் முதலியோருடையதாக 125 செப்பேடுகள் இருந்ததாக் கூறப்பெறுகிறது. கர்னல் மெக்கன்ஸி அவர்களின் மராட்டி மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு. பாபு ராவ் அவர்களின் கூற்று 1828 இல் வெளியான கர்னல் மெக்கன்ஸி தொகுப்பு இரண்டில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

     “1817 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 – நான் நான்கு ரூபாய்களுக்கு பழம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு தலைமைப் பீடாதிபதியான சங்கராசார்யரைப் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்துகொண்டு அவருடைய மடத்திலிருக்கும் செப்பேடுகளின் நகல்களைத் தருமாறு வேண்டினேன். ஆனால் மடத்திலுள்ள சில அலுவலர்கள் அவர்கள் பல்லாண்டுகளாகப் போரின்போதும் காப்பாற்றி வந்திருந்த அவற்றை நான் பறித்து விடுவேனோ என்னும் அச்சத்தினால் காட்ட மறுப்பு தெரிவித்தனர். பிறகு நான் அவர்களைத் தேற்றினேன். நம்பிக்கையூட்டினேன். அவற்றின் மூலங்களைக் கொள்ளாமல் வெறும் நகல்களை மட்டுமே பெற்றுக் கொள்வேன் என்று கூறினேன். அவர்கள் அதற்கு நான் எனது எஜமானரிடம் விடுபட்டுப் போன சிற்றூர்களையும் போக்யங்களையும் மீட்டுத் தருவதாகக் கடிதம் அளித்து உதவுவதானால் பீடாதிபதிகள் குருவாகத் திகழ்ந்த சேர, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர அரசர்கள் வழங்கிய செப்பேடுகளைக் காட்டுவதாகக் கூறினர். நானும் அவ்வணே பரிந்துரைக் கடிதத்தை வழங்கினேன். பிறகு எனது உறுதியின் மீது நம்பிக்கை வைத்து பீடாதிபதி மகிழ்ந்து எனக்கு அரசர்களின் தகவல்களைத் தரவிசைந்தார். அவர் தமது அக்ரஹாரத்திற்குக் கூட்டிச் சென்று என்னிடம் 125 செப்பேடுகளைக் காண்பித்தார். அவற்றில் இரண்டின் நகலையும் வழங்கினார். பிறகு ஐந்து ரூபாய் மதிப்புள்ள சால்வையைப் போர்த்தி எனக்கு விடையளித்தார். அரசர்களின் ஆவணங்களையும் நாணயங்களையும் காட்டுவதாகவும் கூறினார்.”

                இவ்விதம் 1828-ஆம் ஆண்டு நூலில் குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆனால் 1916 ஆம் ஆண்டு திரு.டி.ஏ. கோபிநாதராவ் அவர்கள் அவற்றைப் பதிப்பிக்கத் தேடிய போது வெறும் பத்து செப்பேடுகளை மட்டுமே கண்டார். மற்றையவை கவனக்குறைவால் அழிந்து பட்டிருந்தன. மடத்தின் அலுவலர்கள் அப்போது போகத்தில் இருந்த க்ராமங்களுக்கான பட்டயங்களை மட்டுமே வைத்திருந்தனர். மடத்திலிருந்த ஒரு முதிய அறிஞர் எழுத்துப் பொறிப்போடிருந்த பல செப்பேடுகளும் உருக்கி பஞ்சபாத்ரம் முதலிய பாத்ரங்களாக மாற்றப்பட்டதை நினைவு கூர்ந்தார். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்தது.

     கிடைத்த செப்பேடுகளில் மிகப்பழமையான செப்பேடு தெலுகு சோழனான விஜய கண்ட கோபால தேவனுடைய செப்பேடாகும். இந்தச் செப்பேட்டில் இரு செப்பிதழ்கள் உள்ளன. இவை ஓரத்தில் 8.7 அங்குல நீளமும் நடுவில் 10.9 அங்குல நீளமும் உடையன. இந்தச் செப்பேடு வடமொழியிலும் க்ரந்த எழுத்துக்களிலும் ஆனது.

நோக்கம்

     இந்தச் செப்பேடு காஞ்சியின் அருகிலுள்ள அம்பிகாபுரம் என்னும் சிற்றூரை மடத்திலுள்ள ஸ்ரீசங்கராசார்யருக்கு நிதமும் நூற்றெட்டு அந்தணர்களுக்கு உணவளிக்க வேண்டித் தானமாகக் கொடுக்கப்பெற்றதற்கு ஆவணமாக அமைந்துள்ளது. இந்த அம்பிகாபுரம் என்னும் சிற்றூர் வேகவதியின் வடகரையில் அமைந்தது. தற்போது அம்பி என்று வழங்கப்பெறுகிறது. இந்தச் சிற்றூரில் இன்னமும் கூட மடத்திற்குச் சில நிலங்கள் உள்ளன. அம்பிகாபுரத்தின் எல்லைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பெற்றுள்ள க்ருத்ரபுரம் என்பது திருப்புட்குழியாகும். இதன் மற்றைய எல்லைகள் கைதடுப்பூரும் சிறுநன்னியுமாகும். இவற்றுள் சிறுநன்னி சேரணை என வழங்குகிறது.

காலம்

     இந்தச் செப்பேட்டை திரு. டி.ஏ.கோபிநாதராவ் அவர்கள் இந்தச் செப்பேட்டை 1916-இல் பதிப்பித்த போது இதன் முதல் இதழ் அவருக்குக் கிடைக்க வில்லை. ஆகவே இரண்டாம் இதழில் இருந்த வானியல் குறிப்புக்களைக் கொண்டு அவர் இந்தச் செப்பேட்டின் காலம் 1291-ஆம் ஆண்டு ஜூலை 9 எனத் தீர்மானித்திருந்தார். இந்தச் செப்பேட்டிலுள்ள வானியல் குறிப்புக்கள் இந்தத் தானம் கர வருடம், கர்கடக மாதம், சுக்ல பக்ஷ தசமியில் அனுஷ நக்ஷத்ரமும் திங்கட்கிழமையும் கூடிய நன்னாளில் வழங்கப்பெற்றதாகக் குறிப்பிடுகின்றன. இவற்றைக் கொண்டு அவர் இந்த நிர்ணயத்தைச் செய்திருந்தார்.

பேரா. எஸ்.வெங்கடேச்வரன் இதனை மீண்டும் எபிக்ராஃபியா இண்டிகாவின் பதிமூன்றாம் தொகுதியில் பதிப்பித்தார். அவர் இந்த அரசன் தெலுகு-பல்லவ வழியைச் சேர்ந்த விஜயகண்ட கோபால தேவனாக அடையாளம் கண்டார். அவன் பொயு 1250-இல் தனது ஆட்சியைத் துவக்கியவன். ஆனால் அவர் திரு.ராவ் அவர்களின் கால நிர்ணயத்தை அதிலிருக்கும் வானியற் குறிப்புக்கள் பொருந்தாமை கண்டு கேள்வி எழுப்பியிருந்தார். அவர் 1351-ஆம் ஆண்டான கர வருடத்தையும் கூட ஆய்ந்தார். தெலுகு-சோழ பரம்பரையைச் சேர்ந்த கண்டகோபாலர்களையும் கூட ஆய்ந்தாலும் இறுதியான முடிவைச் சொல்லவில்லை.

சில வருடங்களுக்குப் பிறகு இதன் முதல் இதழும் மடத்தில் கண்டெடுக்கப்பெற்றது. இதன் முதற்பகுதியில் அரசன் சோழர் குலத்தைச் சேர்ந்தவன் என்று தெளிவாகக் குறிப்பிடப்பெற்றிருந்தது. இது அரசனின் 16-ஆம் ஆட்சியாண்டில் தரப்பெற்றது. ஆகவே தெலுகுபல்லவனான விஜயகண்ட கோபாலதேவன் என்னும் நிர்ணயம் விலக்கப்பெற்றது. ஆந்திர மாநிலத் தொல்லியல் துறையின் மேனாள் தலைவரான் திரு.என்.ரமேசன் அவர்கள் இந்தச் செப்பேட்டின் முதலிதழைப் பதிப்பித்தார். அவர் கரவருடங்களின் பட்டியலை அதில் குறிப்பிடப்பெற்றிருந்த மற்றைய வானியற்குறிப்புக்களோடு தந்தார்.

கர வருடமுடைய பொதுயுக வருடம் கர்கடக(ஆடி) மாத்த்தில் சுக்ல பக்ஷ தசமி வரும் ஆங்கில நாள் கிழமை விண்மீன்
1051 CE ஜீலை 27th திங்கள் விசாகம்
1111 CE ஜீலை 17th திங்கள் அனுஷம்
1171 CE ஜீலை 14th புதன் அனுஷம்
1231 CE ஜீலை 13th வியாழன் அனுஷம்
1291 CE ஜீலை 17th சனி விசாகம்
1351 CE ஜீலை 14th திங்கள் விசாகம்
1411 CE ஜீலை 21st புதன் விசாகம்
1471 CE ஜீலை 26th வெள்ளி அனுஷம்

மேற்கண்ட பட்டியலில் அவர் பொயு 1111-ஆம் ஆண்டு ஜூலை 17 என்னும் தேதியைச் செப்பேட்டின் காலமாகத் தீர்மானித்தார். எழுத்தமைதியும் அக்கால அரசியல் சூழ்நிலையும் துணைசெய்யாத இந்தத் தேதியை அவர் தேர்ந்தெடுத்தது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்தக் காலத்தில் காஞ்சி விஜயாலயன் வழிவந்த சோழர்களின் இரண்டாம் தலைநகராகவே திகழ்ந்தது. ஆனால் இந்தச் செப்பேட்டிலோ அரசன் தனது ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறான். தனக்கு மேலான அரசராக எவரையும் குறிப்பிடவில்லை. ஆகவே அவன் காஞ்சியின் தனித்துவம் பெற்ற அரசன் என்பது தெளிவாகிறது. முட்டாளாக இருந்தாலும் என்னால் இந்த முன்கூட்டிய தேதியை ஜீரணிக்க முடியவில்லை.

திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்த்ரிகளின் கருத்துப்படி (The Colas, pp 389-90) காஞ்சி மூன்றாம் குலோத்துங்கனின் (1178 – 1218 CE) கைவசமிருந்து தெலுகு சோழர்களின் கைகளில் சென்றது. இது சென்ற காலத்தை 1204-1213 என்றும் அவர் கருதுகிறார். தெலுகு சோழனான திருக்காளத்தி தேவனான கண்டகோபால தேவன் தனது பதினைந்தாம் ஆட்சியாண்டான 1230-31 இல் காஞ்சியின் தனித்தலைவனாகத் தன்னைக் கூறிக்கொள்கிறான். இவனே தெலுகு சோழ அரசனான முதலாம் திக்கன் எனவும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். இவனுடைய தானங்கள் காஞ்சி வரதராஜர் கோயிலில் 22-ஆம் ஆட்சியாண்டு(1238 CE) (Nos 415 and 434 of ARE 1919) வரையில் கிடைக்கின்றன. அவனுடைய 16ஆம் ஆட்சியாண்டான 1231-32 ஒரு கர வருடம் என்பதும் சிறப்பான செய்தி. இந்தச் செப்பேட்டின் முதல் செய்யுள் இந்த அரசன் வரதராஜர் கோயிலுக்களித்தத் தானங்களை உறுதிசெய்வதைப் போலுள்ளது.

ஆகவே மேற்கண்ட தகவல்களைக் கொண்டு இந்தச் செப்பேட்டை வழங்கிய அரசன் முதலாம் திக்கனான கண்டகோபாலன் என்னும் பெயருடைய திருக்காளத்தி தேவனே என்னும் அடையாளத்தை நான் முன்வைக்கிறேன். மேலும் இந்தச் செப்பேட்டின் காலத்தை 1231 ஆம் ஆண்டு ஜூலை 13 எனவும் கருதுகிறேன். இந்த அடையாளத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை கிழமை மட்டுமே. செப்பேடு திங்கட்கிழமை என்று கூறுகிறது. ஆனால் இந்த நாள் வியாழக்கிழமையாகும். இத்தகைய பிழைகள் கல்வெட்டுக்களில் பொதுவாகக் கிடைப்பதனால் இந்தப் பிழையைப் புறக்கணிக்கலாம்.

செப்பேட்டு வரிகள்

முதற் இதழ்

mutt_2

வரி 1. स्वस्तिश्री करिराजशैलशिखरालंकारचिन्तामणेः वि
வரி 2. ष्णोरुन्नतगोपुरप्रविततप्राकारसन्मण्डपैः। नानान
வரி 3. व्यमहोत्सवादिकरणैः श्रीगण्डगोपाल(कः)भूसुत्रामा क
வரி 4. लयन्मुदं विजयते प्रत्यर्थिविद्रावणः।। (1) यत्कीर्तिस्तुहिनां
வரி 5. शुशेखरमणेरावासभूमीधरो यस्योदग्रतरः प्रताप
வரி 6. वलयो मेरुस्सुरावासभूः। यस्सर्वामवनीं विजित्य विजय
வரி 7. श्रीगण्डगोपाल(क) इत्याख्यावान्भुवने धनञ्जय इव प्र
வரி 8. ख्यातशौर्यो नृपः।। (2) यः कन्या पृथ्वी घनाचलमहादा
வரி 9. नाम्बुधारापरीवाहैः पूरितमातनोति जल
வரி 10. धॆ नित्यं विशुद्धात्मनाम्। यः कन्यामणिमेव देवकृप
வரி 11. या पुत्रं कुलाङ्कूरकं लेभे चोळनरेश्वरो
வரி 12. विजयते श्रीगण्डगोपालकः।।(3) यस्योदग्रध्वजिवि
வரி 13. लसितः फल्गुनस्येव तादृक् तेजोराशेः पवनत
வரி 14. नयः पावनी यस्य कीर्तिः। धर्मेणास्यात्सुचिरमवनेः
வரி 15. पालनादस्य लोके विख्यातासीत्विजयपदवत्
வரி 16. गण्डगोपालसंज्ञा।।(4) स्वस्ति श्रीमत् त्रिभुवन..क..चक्रवर्ती महाबलः
வரி 17. ल्पकश्चोळपार्थिवः अर्थिनामाश्रितानाञ्च विदुषां कल्प
வரி 18. पादपः।। (5) अशेषशास्त्रजलधिपारगैः परिवा
வரி 19. रितः। शास्त्रेषु कुशलश्शूरः क्ष्मामूर्तः परन्तपः।।
வரி 20. सोयं श्रीगण्डगोपालचोळक्ष्मापति
வரி 21. रात्मनः पट्टाभिषेचनादूर्ध्वे वर्षे च सति षो
வரி 22. डशे।। तपोधनाय मुनये शिवध्यानपर
வரி 23. तात्मने। स्वात्मारामाय विदुषे पॊप्पि

இரண்டாம் இதழ்

mutt_1

வரி 24. प्रथितात्मने। श्रीहस्तिशैलनाथस्य निलयात्
வரி 25. पश्चिमे मठे। निगमान्तरहस्यार्थं शिष्येभ्यस्सुविवृण्व
வரி 26. ते।। नित्यान्नदानविधिसन्तर्प्पितात्मद्विजन्मने(।) श्रीशङ्क
வரி 27. रार्य्यगुरवे वत्सरे खरसंज्ञिते।। प्राप्ते कर्क्क
வரி 28. टकं पुण्यराशीं कमलबान्धवे। मित्रदैवतन
வரி 29. क्षत्रयुक्तायां शुक्लपक्षके।। इन्दोर्व्वारेण यु
வரி 30. क्तायां दशम्यां सुमुहूर्त्तके। पृथग्विधरसोपे
வரி 31. तैरन्नैरमृतसम्मितैः।। नित्यमष्टाशतानाञ्च
வரி 32. तोषणाय द्विजन्मनाम्। प्राञ्चं गृध्रपुरात् काञ्चीपुरात्
வரி 33. प्रत्यञ्चमुत्तरम्।। कैदडुप्पूरुतो ग्रामात् शिरुनन्ने
வரி 34. श्च दक्षिणम्। वेगवत्युत्तरतटीसीमारामैकमण्डन
வரி 35. म्।। नालिकेराम्रपनसतालहिन्तालशोभितम्। ना
வரி 36. नाभूरुहवाटिनां पुष्पसौरभवासितम्।। यैरकोष्ठिय
வரி 37. मजस्रेन्दुमौलिकारुण्यरक्षितम्। अंबिकापुरनामानं ग्रा
வரி 38. मचिन्तामणिन्ददौ।। भूमेरस्याः प्रदानेन यावच्चन्द्रार्क्क
வரி 39. योर्ग्गतिः। श्रीहस्तिशैलनिलयः प्रीयतां परमेश्वरः।। इत्थ
வரி 40. मुत्तुङ्गया भक्त्या निधाय मनसि चिरम्। देवः श्रीगण्डगो
வரி 41. पालचोळश्शंकरयोगिने। भूदानशासनं स्वस्य हस्त
வரி 42. संलिखिताक्षरम्। अदादुन्नतधर्म्मस्य लाभाय शुभचेतसा।।
வரி 43. दानपालनयोर्मध्ये दानात् श्रेयोनुपा
வரி 44. लनम्। दानात् स्वर्गमवाप्नोति। पालनादच्युतं प
வரி 45. दम्।
வரி 46. ஸ்ரீவிஜயகண்டகோபாலதேவன்

 

स्वस्तिश्री

மங்கலம்

करिराजशैलशिखरालंकारचिन्तामणेः विष्णोरुन्नतगोपुरप्रविततप्राकारसन्मण्डपैः।

नानानव्यमहोत्सवादिकरणैः श्रीगण्डगोपाल(कः)भूसुत्रामा कलयन्मुदं विजयते प्रत्यर्थिविद्रावणः।। (1)

          எதிரிகளை அழிப்பவனும் பூவுலகில் இந்திரனையொத்தவனுமான ஸ்ரீகண்டகோபாலன் ஹஸ்திமலையில் சிகரத்திற்கு அணியாகத் திகழும் சிந்தாமணியையொத்த திருமாலின் உயர்ந்த கோபுரம், விரிந்த மதில்கள், அழகிய மண்டபங்கள் ஆகியவற்றையும் பலவிதமான புதிய விழாக்களையும் செய்வித்து மகிழ்ச்சியோடு வெல்கிறான்.

यत्कीर्तिस्तुहिनांशुशेखरमणेरावासभूमीधरो यस्योदग्रतरः प्रतापवलयो मेरुस्सुरावासभूः।

यस्सर्वामवनीं विजित्य विजयश्रीगण्डगोपाल(क) इत्याख्यावान्भुवने धनञ्जय इव प्रख्यातशौर्यो नृपः।।

          அந்த கண்டகோபாலன் அர்ஜுனனையொத்த புகழ்பெற்ற வீரமுடைய அரசன். அவன் எல்லா உலகையும் வென்று விஜயகண்டகோபாலன் என்னும் பெயரையடைந்தான். அவனுடைய புகழானது பிறைசூடிய பெருமானின் இருப்பிடமான கைலையை ஒத்தது. அவனுடைய வீரத்தின் வளையமே தேவர்களின் இருப்பிடமான மேருமலை.

यः कन्यापृथ्वीघनाचलमहादानाम्बुधारापरीवाहैः पूरितमातनोति जलधिं नित्यं विशुद्धात्मनाम्।

यः कन्यामणिमेव देवकृपया पुत्रं कुलाङ्कूरकं लेभे चोळनरेश्वरोविजयते श्रीगण्डगोपालकः।।(3)

          ஸ்ரீகண்டகோபாலன் தன்னுடைய மகளையொத்த நிலமகளைத் தூயமனதுடையோருக்கு எப்போதும் வழங்கும்போது விடும் நீரின் பெருக்கால் கடலை நிறைந்ததாகச் செய்தவன். அவன் தெய்வத்தின் அருளினால் சிறந்த பெண்ணையே தனது குலம் செழிக்கும் ஸந்ததியாகப் பெற்றவன். அத்தகைய சோழமன்னன் வெல்கிறான்.

यस्योदग्रध्वजविलसितः फल्गुनस्येव तादृक् तेजोराशेः पवनतनयः पावनी यस्य कीर्तिः।

धर्मेणास्यात्सुचिरमवनेः पालनादस्य लोके विख्यातासीत्विजयपदवत्गण्डगोपालसंज्ञा।।(4)

          வலிமையின் குவியலான அவனுடைய உயர்ந்த கொடியானது அர்ஜுனனைப் போலவே வாயுவின் மகனான ஹனுமானைக் கொண்டது. அவனுடைய புகழ் தூயது. அறத்தோடு வெகுகாலம் பூமியைக் காக்கும் அவனுக்கு கண்டகோபாலன் என்னும் பெயரோடு விஜய என்னும் ஒட்டும் இயைந்திருந்தது.

स्वस्ति श्रीमत् त्रिभुवन..क..चक्रवर्ती महाबलः

          மங்கலம். திருவுடைய மூவுலகிற்கும் சக்ரவர்த்தியான பெரும் வலிமைகொண்ட…

ल्पकश्चोळपार्थिवः।

अर्थिनामाश्रितानाञ्च विदुषां कल्पपादपः।। (5)

          அந்தச் சோழமன்னன் வேண்டுவோருக்கும், அண்டியோருக்கும் அறிஞருக்கும் கற்பகமரத்தையொத்தவன்.

अशेषशास्त्रजलधिपारगैः परिवारितः।

शास्त्रेषु कुशलश्शूरः क्ष्मामूर्तः परन्तपः।।

          அவன் எல்லா சாஸ்த்ரங்களாகிய கடலின் கரைகண்டோரால் சூழப்பட்டிருந்தான். சாஸ்த்ரங்களில் தேர்ந்தவன். சூரன். உலகே வடிவெடுத்ததைப் போன்றவன். பெரும் தவமுடையவன்.

सोयं श्रीगण्डगोपालचोळक्ष्मापतिरात्मनः

पट्टाभिषेचनादूर्ध्वे वर्षे च सति षोडशे

          அத்தகைய திருவுடைய கண்டகோபாலன் என்னும் சோழமன்னன் தன்னுடைய பட்டாபிஷேகத்திற்குப் பிறகு பதினாறாம் ஆண்டில்

तपोधनाय मुनये शिवध्यानरतात्मने।

स्वात्मारामाय विदुषे पॊप्पिप्रथितात्मने।

श्रीहस्तिशैलनाथस्य निलयात्पश्चिमे मठे।

निगमान्तरहस्यार्थं शिष्येभ्यस्सुविवृण्वते।।

नित्यान्नदानविधिसन्तर्प्पितात्मद्विजन्मने(।)

श्रीशङ्करार्य्यगुरवे वत्सरे खरसंज्ञिते।।

          தவத்தின் நிதி போன்றவரும், முனிவரும் சிவத்யானத்தில் ஈடுபடுபவரும், தன்னிலேயே திளைத்தவரும், அறிஞரும், பொப்பிலி என்று புகழ்பெற்றவரும் ஸ்ரீஹஸ்திசைலநாதரின் கோயிலிலிருந்து மேற்கிலமைந்த மடத்தில் வேதாந்த உட்பொருளைத் தனது சிஷ்யர்களுக்குப் விரிவுரைப்பவரும் தினமும் அன்னதான விதியினால் அந்தணர்களை மகிழ்வித்தவருமான ஸ்ரீசங்கராசார்யாருக்கு கர என்னும் பெயருடைய வருடத்தில்

प्राप्ते कर्क्कटकं पुण्यराशीं कमलबान्धवे।

मित्रदैवतनक्षत्रयुक्तायां शुक्लपक्षके।।

          கதிரவன் புண்ய ராசியான கர்கடகத்தை அடைந்த போது மித்ரன் அதிதேவதையான நக்ஷத்ரத்தோடு – அனுஷத்தோடு இயைந்த சுக்ல பக்ஷத்தில்..

इन्दोर्व्वारेण युक्तायां दशम्यां सुमुहूर्त्तके।

पृथग्विधरसोपेतैरन्नैरमृतसम्मितैः।।

नित्यमष्टाशतानाञ्चतोषणाय द्विजन्मनाम्।

          திங்கட்கிழமையோடு இயைந்த தசமியில் நல்ல முஹூர்த்தத்தில் தனித்தனி சுவைகளைக் கொண்டதும் அமுதத்தையொத்ததுமான அன்னத்தால் தினமும் நூற்றெட்டு அந்தணர்களை மகிழ்விப்பதற்காக

प्राञ्चं गृध्रपुरात् काञ्चीपुरात्प्रत्यञ्चमुत्तरम्।।

कैदडुप्पूरुतो ग्रामात् शिरुनन्नेश्च दक्षिणम्।

वेगवत्युत्तरतटीसीमारामैकमण्डनम्।।

          க்ருத்ரபுரத்தின் கிழக்கிலும் காஞ்சிபுரத்தின் மேற்கிலும் கைதடுப்பூரின் வடக்கிலும் சிறுநன்னியின் தெற்கிலும் வேகவதியின் வடகரையில் தோட்டங்களால் அழகுற விளங்குவதும்

नालिकेराम्रपनसतालहिन्तालशोभितम्।

नानाभूरुहवाटिनां पुष्पसौरभवासितम्।।

          தென்னை, மா, பலா, பனை ஆகிய மரங்களோடுத் திகழ்வதும் பலவிதமான மரங்களின் தொகுதியின் பூக்களின் வாசனையால் மணப்பதும்

यैरकोष्ठियमजस्रेन्दुमौलिकारुण्यरक्षितम्।

अंबिकापुरनामानं ग्रामचिन्तामणिन्ददौ।।

          யைரகோஷ்டத்தில் – எயிற்கோட்டத்தில் அமைந்ததும் சந்த்ரமௌளியின் கருணையினால் எப்போதும் காக்கப்பெற்றதும் க்ராமங்களில் சிந்தாமணியைப் போன்றதுமான அம்பிகாபுரம் என்னும் பெயருடைய க்ராமத்தை வழங்கினான்.

भूमेरस्याः प्रदानेन यावच्चन्द्रार्क्कयोर्ग्गतिः।

श्रीहस्तिशैलनिलयः प्रीयतां परमेश्वरः।।

          இந்த நிலத்தை வழங்குவதனால் நிலவும் கதிரும் உலவும் வரையில் ஸ்ரீஹஸ்திசைலத்தில் திகழும் பரமேச்வரனான வரதராஜர் மகிழட்டும்.

इत्थमुत्तुङ्गया भक्त्या निधाय मनसि चिरम्।

देवः श्रीगण्डगोपालचोळश्शंकरयोगिने।

भूदानशासनं स्वस्य हस्तसंलिखिताक्षरम्।

अदादुन्नतधर्म्मस्य लाभाय शुभचेतसा।।

          இப்படி உயர்ந்த பக்தியை மனத்தில் கொண்டு ஸ்ரீகண்டகோபால சோழனான தேவன் ஸ்ரீசங்கர யோகிக்கு தன்னுடைய கையெழுத்திட்டு பூமி தானம் செய்த சாஸனத்தை நல்ல மனதோடு அறத்தைக் கொள்ளல்வேண்டி வழங்கினான்.

दानपालनयोर्मध्ये दानात् श्रेयोनुपालनम्।

दानात् स्वर्गमवाप्नोति पालनादच्युतं पदम्।

தானம் கொடுப்பது, அதைக் காப்பது இந்த இரண்டிலும் தானத்தைக் காட்டிலும் சிறந்தது கொடுத்தைக் காப்பதேயாகும். தானத்தினால் துறக்கம் நேரும். காப்பதனாலோ அச்யுதபதம் கிடைக்கும்.

ஸ்ரீவிஜயகண்டகோபாலதேவன்

          ஸ்ரீவிஜயகண்டகோபாலதேவனின் கையெழுத்து.

காஞ்சி வரதராஜரின் கோயிலின் அருகேதான் காமகோடிபீடத்தின் கிளைமடமோ அல்லது மூலமடமோ முதலில் அமைந்திருக்க வேண்டும் என்பது இதனால் அறியக்கிடக்கிறது.

     இந்தத் தானமானது அந்தக் க்ராமத்திலுள்ள மற்றொரு கல்வெட்டினாலும் உறுதிப்படுகிறது. அந்தக் கல்வெட்டு அம்பிகாபதீச்வரரின் கோயிலில் வடசுவரில் காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு சக ஆண்டு 1436 –ஐக் குறிப்பிடுவதால் இதன் காலம் பொயு 1514 ஆகும். இந்தக் கல்வெட்டு விஜயநகரமன்னன் க்ருஷ்ணதேவராயரின் காலத்தைச் சேர்ந்ததாகும்.

mutt_3

          ஸ்வஸ்திஸ்ரீமன் மஹாமண்டலேஶ்வர ஸ்ரீவீரப்ரதாப க்ருஷ்ணதேவமஹாராயர் ப்ருத்வீராஜ்யம் பண்ணி அருளாநின்ற சகம் 1436க்கு மேல் செல்லா நின்ற பவஸம்வத்ஸரத்து ஆடிமாதம் 13-ஆம் தேதி நம்முடைய மடப்புறம் தூளி அம்பி அம்பிகாவனமுடைய தம்பிரானார் பூசைத்திருப்பணி மார்கழித்திருநாளுக்கு க்ருஷ்ணராயர் தர்ம்மமாக சந்த்ராதித்யர் வரையும் இந்த தர்மம் தூளி நடத்தக்கடவதாகவும் இவை சந்திர சேகர ஸரஸ்வதி எழுத்து.

     மஹாமண்டலேச்வரனும் ஸ்ரீவீரப்ரதாபனுமான க்ருஷ்ணதேவராயர் புவியை ஆளும் போது சக வருடம் 1436 ஆம் ஆண்டு பவ வருடம் ஆடி மாதம் 13-ஆம் தேதி அம்பிகாவனமுடைய ஈசனுக்கு பூஜை, திருப்பணி, மார்கழித் திருநாளுக்கு க்ருஷ்ணதேவராயரின் தர்மமாக தானம் வழங்கப்பெறுகிறது. இதற்கு சந்த்ரசேகர ஸரஸ்வதி நம்முடைய மடப்புறம் என்று குறிப்பிட்டுக் கையெழுத்துமிட்டுள்ளார்.

     இங்கு நம்முடைய மடப்புறம் அம்பி என்று மடாதிபதி குறிப்பிட்டிருப்பது மேற்கண்ட தானத்தை உறுதிசெய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த ஊரில் சில மடாதிபதிகளின் ஸமாதியும் அமைந்துள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் க்ருஷ்ண தேவராயர் கொடுத்த மற்றொரு செப்பேட்டில் இங்கு குறிப்பிடப்பெற்றுள்ள சந்த்ரசேகர ஸரஸ்வதி தானம் பெறுபவராகக் குறிப்பிடப்பெற்றிருப்பதுதான். இவர் மடத்தின் குருபரம்பரையின் படி 55-ஆம் பீடாதிபதியான ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆவார்.

     இதன்மூலம் நான் வைக்கும் மற்றொரு கருத்தாக்கம், ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத்பாதர்களுடன் தொடர்புடைய மடங்கள் அனைவற்றிலும் மிகப் பழமையான செப்பேடு இதுவே என்பதாகும்.

Please follow and like us:

3 thoughts on “காஞ்சி காமகோடி பீடச்செப்பேடுகள் – 1

  1. I checked up the dates through Jagannatha Hora Software. The assumption of 13th July 1231 appears incorrect for the following reasons.

    13th Julay 1231 falls on a Suklapaksha Shashti and not on Dasami as mentioned in the copper plate. Further the vedic week day is Sunday and not Monday as mentioned in the copper plate or Thursday as perceived by you.

    As per Jagannatha Hora Software, only 17th July 1231 falls on a SuklaPaksha Dasami,
    combined with the star Anusham and that too on a Thursday.

    1. But there is a problem again. We donot know the calculations of Jagannatha Hora software. My calculations are based on Swamikkannu pillar ephemeris which is followed generally in South Indian Epigraphy.

  2. நாங்கள் கோவையை சேர்ந்த கம்ம நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்கள்.விஜய நகர மன்னர் காலத்தவர்களும்,கிருஷ்ணதேவராயர் காலத்தவர்களாகிய எங்கள்மூதாதையர்கள் பெண்கேட்டு வந்த முக மதியர்களுக்கு பெண் கொடுக்க மறுத்து போர் புரிந்து தெற்கே வந்து கோவை ,மதுரை,ராஜபாளையம் ஆகிய இடங்களில் வாழ ஆரம்பித்தனர்.இது நடந்தது கி்பி்1600ன் பிற்பகுதியிலும் 1700 களின் முற்பகுதியிலும் என எங்கள் பெரியவர்கள் சொல்ல கேட்டோம். ஆகவே நீங்கள் குறிப்பிட்ட மேற்கூறிய தகவல்களை படிக்கும்போது என்உடம்பு புல்லரித்ததாக உணர்ந்தேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *