கோயில் திருப்பணி நிகழ்ந்து வரும் காஞ்சி காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் திரு. ஸ்வாமிநாத ஸ்தபதியுடன் பின்வரும் கல்வெட்டைக் கண்ணுற்றேன். பங்காரு காமாக்ஷி ஸந்நிதியின் அருகிலுள்ள படிக்கட்டில் காணப்பெறும் இந்தக் கல்வெட்டு பல்லவர் காலக் கோயிலல்லாத பிற கோயில்களில் காஞ்சியில் கிடைப்பது முதன்முறையாகும். துண்டாக அமைந்த இந்தக் கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டின் அழகிய க்ரந்தத்தில் எழுதப்பெற்றுள்ளது. இதே முறைதான் ராஜஸிம்ஹ பல்லவேச்வரமான கைலாஸநாதர் ஆலயத்திலும் காணப்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் வரியாவது
… रा च (मा) क्ष्मानाथैः। अदृश्यभार्य्यः उ….
… ரா ச (மா) க்ஷ்மானாதை²:| அத்³ருʼஶ்யபா⁴ர்ய்ய: உ….
இதன் பொருள் திருமகளுக்கும் நிலமகளுக்கும் தலைவர்களால்… பிறரால் காணவொண்ணாத மனைவியை உடையவன். உ…
இரண்டாவது சொற்றொடரில் காணப்பெறும் அத்³ருʼஶ்யபா⁴ர்ய்ய: என்னும் விருதுப்பெயர் வடமொழியில் வழங்கும் அஸூர்யம்பஶ்யா: ராஜதா³ரா: என்னும் வழக்கை ஒட்டியமைந்ததாகும். அரசர்குல மகளிர் வேறாடவன் என்பதால் கதிரவனைக் கூட காணமாட்டார் என்பது இதன் பொருள். இந்த விருதுப்பெயர் இதுவரை கிடைத்த கல்வெட்டுக்களில் இல்லை.
இந்தக் கல்வெட்டு அரசியல் ரீதியாக சிறப்புடையதாக இல்லையெனினும் இந்தக் கோயில் வளாகத்தில் முதன் முறையாகக் கிடைத்திருப்பதால் சிறப்பைப் பெறுகிறது.