ஈசனுக்கும் மற்றைய சில தெய்வங்களுக்கு உடனாக சில பூதகணங்களை நாம் சிற்பங்களில் பார்த்திருக்கிறோம் அல்லவா. இவை கோயில்களில் வலபி என்னுமிடத்தில் பூதமாலை என்றே பெயரோடு அமைந்திருக்கும். இவை பலவிதமான வடிவங்களில் பல தலைகளோடு அமைந்திருக்கும். இவற்றின் புராணத்தகவல்களைக் காண்போமா..
உலகின் படைப்பை விளக்கும் தறுவாயில் வாயுபுராணம் இத்தகைய படைப்புகளை விவரிக்கிறது. வாயுபுராணத்தின் உத்தரார்த்தத்தின் எட்டாவது அத்யாயம் இவர்களின் பிறப்பையும் மற்றைய தகவல்களையும் தருகிறது.
பூதிர்விஜஜ்ஞே பூதாம்ஶ்ச ருத்ரஸ்யானுசரான் ப்ரபோ:|
ஸ்தூலான் க்ருஶாம்ஶ்ச தீர்காம்ஶ்ச வாமனான் ஹ்ரஸ்வகான் ஸமான் || 8.236 ||
லம்பகர்ணான் ப்ரலம்போஷ்டான் லம்பஜிஹ்வாஸ்தனோதரான்|
ஏகரூபான் த்விரூபாம்ஶ்ச லம்பஸ்பிக்ஸ்தூலபிண்டிகான் || 8.237 ||
ஸரோவரஸமுத்ராதினதீபுலினவாஸின:|
க்ருஷ்ணான் கௌராம்ஶ்ச நீலாம்ஶ்ச ஶ்வேதாம்ஶ்ச லோஹிதாருணான் || 8.238 ||
பப்ரூன் வை ஶபலான் தூம்ரான் கத்ரூன் ராஸபதாருணான்|
முஞ்ஜகேஶான் ஹ்ருஷீகேஶான் ஸர்பயஜோபவீதின: || 8.239 ||
விஸ்ருஷ்டாக்ஷான் விரூபாக்ஷான் க்ருஶாக்ஷானேகலோசனான்|
பஹுஶீர்ஷான் விஶீர்ஷாம்ஶ்ச ஏகஶீர்ஷாம்ஶ்ச ஶீர்ஷகான் || 8.240 ||
சண்டாம்ஶ்ச விகடாம்ஶ்சைவ விரோமான் ரோமஶாம்ஸ்ததா|
அந்தாம்ஸ்வ ஜடிலாம்ஶ்சைவ குஞ்ஜான் ஹேஷகவாமனான் || 8.241 ||
ஸரோவரஸமுத்ராதினதீபுலினஸேவின:|
ஏககர்ணான் மஹாகர்ணான் ஶங்குகர்ணானகர்ணிகான் || 8.242 ||
தம்ஷ்ட்ரிணோ நகினஶ்சைவ நிர்த்தந்தாம்ஶ்ச த்விஜிஹ்வகான்|
ஏகஹஸ்தான் த்விஹஸ்தாம்ஶ்ச த்ரிஹஸ்தாம்ஶ்சாப்யஹஸ்தகான் || 8.243 ||
ஏகபாதான் த்விபாதாம்ஶ்ச த்ரிபாதான் பஹுபாதகான் |
மஹாயோகான் மஹாஸத்த்வான் ஸுதபக்வான் மஹாபலான் || 8.244 ||
ஸர்வத்ரகானப்ரதிகான் ப்ரஹ்மஜ்ஞான் காமரூபிண: |
கோரான் க்ரூராம்ஶ்ச மேத்யாம்ஶ்ச ஶிவான் புண்யான் ஸவாதின: || 8.245 ||
குஶஹஸ்தான் மஹாஜிஹ்வான் மஹாகர்ணான்மஹானனான்|
ஹஸ்தாதாம்ஶ்ச முகாதாம்ஶ்ச ஶிரோதாம்ஶ்ச கபாலின: || 8.246 ||
தன்வினோ முத்கரதரானஸிஶூலதராம்ஸ்ததா|
தீப்தாஸ்யான் தீப்தனேத்ராம்ஶ்ச சித்ர மால்யானுலேஷனான் || 8.247 ||
அன்னாதான் பிஶிதாதாம்ஶ்ச பஹுரூபான் ஸுரூபகான் |
ராத்ரிஸந்த்யாசரான் கோரான் க்வசித்ஸௌம்யான் திவாசரான்|
நக்தஞ்சரான் ஸுதுஷ்ப்ரேக்ஷ்யான் கோராம்ஸ்தான் வை நிஶாசரான் || 8.248 ||
பரத்வே ச பயம் தைவ ஸர்வே தே கதமானஸா:|
நைஷாம் பார்யா(அ)ஸ்தி புத்ரோ வா ஸர்வே தே ஹ்யூர்த்த்வரேதஸ: || 8.249 ||
ஶதந்தானி ஸஹஸ்ராணி பூதானாமாத்மயோகினாம்|
ஏதே ஸர்வே மஹாத்மானோ பூத்யா: புத்ரா: ப்ரகீர்த்திதா: || 8.250 ||
வாயுபுராணத்தின் படி க்ரோதா என்பவளுக்கு பன்னிரண்டு மகள்கள். இவர்களைப் புலஹர் என்னும் முனிவருக்கு மணமுடித்தாள். அவர்களில் பூதி என்பாளுக்குப் பிறந்தவையே இந்த பூதங்கள். இவை ஈசனின் உடன்கூட்டத்தவராயின. இவற்றில் சில பெருத்தவை. சில இளைத்தவை. சில உயர்ந்தவை. சில குள்ளமானவை. சில பொதுவானவை. சில பூதங்கள் தொங்கும் காதுடையவை. சில மிகவும் தொங்கும் காதுடையவை. தொங்கும் நா, மார்பு, வயிறு இவற்றை உடையவை. ஒரு வடிவானவை, சில பல வடிவானவை. சில தொங்கும் பின்சதை முதலியவற்றை உடையவை. இவை தடாகம், நதி, கடல் ஆகியவற்றின் கரையிலுள்ள மணற்திட்டுக்களில் விரும்பி வாழ்பவை. சில பூதங்கள் கறுத்தவை. சில வெளுத்தவை. சில நீலநிறமானவை. சில வெளிறியவை. சில சிவந்தவை. இவை பலவகை வண்ணங்களையும் புகைவண்ணத்தையும் கழுதைநிறத்தையும் கொண்டவை. சில பலவகையான விலங்குகளையும் ஏந்தியவை. சில அழகிய கேசமுடையவை. புலன்களை வென்றவை. பாம்பை உபவீதமாக அணிந்தவை. சில கண்களை விடுத்தவை, சில கோரமான கண்களுடையவை. சில குறுகிய கண்ணுடையவை. சில கண்ணற்றவை. சில பூதங்கள் பல தலைகளை உடையவை. சில தலைகளற்றவை. சில ஒரு தலையையுடையவை. சில வேகமானவை. சில வக்ரமானவை. சில மயிரற்றவை. சில பல மயிர்களுடையவை. சில குருடானவை. சில ஜடையை உடையவை. சில கூனுடையவை. சில குறுகியவை. சில ஒரு காதுடயவை. சில பெருங்காதுடையவை. சில முளைகளைப் போன்ற காதுடையவை. சில காதற்றவை. சில கோரைப்பல்லுடயவை. நகங்களுடையவை. சில பற்களற்றவை. சில இருநாவுடையவை. சில ஒரு காலுடையவை. சில இருகாலுடையவை. சில பல காலுடையவை. பெரும் யோகத்தை உடையவை. பெரும் வலிமையுடையவ. எங்கும் பாடிக்கொண்டும் கருவிகளை மீட்டிக் கொண்டுமிருப்பவை. ப்ரஹ்மத்தை அறிந்தவை. விரும்பும் வடிவெடுப்பவை. கோரமானவை ஆனால் புனிதமானவை. மங்களமானவை. யாகத்தில் பங்குடையவை. இளைத்த கையுடையவை. பெரும் நாவுடையவை. பெரும் காதும் முகமும் உடையவை. கைகளையும் முகத்தையும் தலையையும் கடிப்பவை. வில்லும் உலக்கையும் வாளும் சூலமும் ஏந்தியவை. ஒளிரும் முகமும் கண்ணும் பலவிதமான மாலைகளையும் கொண்டவை. அன்னத்தையும் இறைச்சியையும் உண்பவை. பல வடிவங்களைக் கொண்டவை. இரவிலும் ஸந்தியிலும் உலவுபவை. சில அழகிய பூதங்கள் பகலில் உலவுபவை. அவற்றிற்கு அச்சமேயில்லை. மனைவியோ மகனோ எவரும் இல்லை. அவை ப்ரஹ்மசாரிகள். அவை நூற்றுக் கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அமைந்தவை. அவை ஆத்மயோகிகள். இத்தகையோர் பூதியின் மகன்களாவர்.
இவ்விதம் வாயுபுராணம் தெரிவிக்கிறது. மஹாபாரதத்தின் சல்யபர்வமும் இத்தகைய வடிவமைப்பை வர்ணிக்கிறது. அவை பலவடிவங்களை உடையவை. அவை பலவிதமான அணியையும் கொடியையும் உடையவை. அவை புலி. சிங்கம், கரடி, ஆகியவற்றின் முகங்களை உடையவை. சில பூனை, முதலை ஆகியவற்றின் முகங்களை உடையவை. சில யானையைப் போன்ற முகமும் உதடும் உடையவை. சில ஆந்தை, கழுகு, ஓநாய் ஆகியவற்றின் முகங்களை உடையவை. சில முள்ளம்பன்றி, மாடு மற்றும் மற்றைய விலங்குகளின் முகங்களை உடையவை. சில கருத்தவை. இவை சக்ரம், தீவட்டி, கதை மற்றும் பல ஆயுதங்களை உடையவை. சில வயிற்றில் முகமுடையவை. இவற்றிற்கு உதரேமுகமென்று பெயர்.
இவ்விதம் இந்த இரண்டு நூல்களும் பூதங்களின் இயல்புகளை வர்ணிக்கின்றன. மேலும் சில நூல்களில் இவை கூஷ்மாண்டன், கும்போதரன், கும்பாஸ்யன் முதலிய பூதநாயகர்களால் கட்டுப்படுத்தப்பெற்ற செய்தியும் கூறப்பெற்றுள்ளது.
சிற்ப நூல்களும் கூட இவற்றை ஐந்து தாள அளவுகளில் செய்யும்படி கூறி இவற்றின் குறும்பான நடவடிக்கைகளைச் செய்யச் சொல்கிறது.
இத்தகைய பூதங்களின் பல்வேறு விதமான அமைப்புக்களையும் குறும்புகளையும் நம்மால் கோயிலிலுள்ள பூதவரிகளில் காணவியல்கிறது. இவற்றின் தலைவராக விநாயகர் அவர்களுடனே சித்தரிக்கப்பெறுவார்.
படங்கள் இணையம் மற்றும் பாண்டியன் அவர்களிடமிருந்து.