மல்லையிலுள்ள தவச்சிற்பத்தொகுதியை அடையாளம் காண்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வாதங்களை முன்வைத்துள்ளனர். அத்தகைய வாதங்கள் யாவும் கீழ்க்கண்ட சொடுக்கியில் அங்கை நெல்லிக்கனியென தொகுக்கப்பெற்றுள்ளன.
http://puratattva.in/2016/07/07/mamallapuram-the-great-penance-3718
இவையன்றி, அங்குள்ள சிற்பத்தொகுதியை அடையாளம் காண மேலும் சில குறிப்புக்களை முன்வைக்க விரும்புகிறேன். பகீரதன் தவமாயினும் அர்ஜுனனின் தவமாயினும் இரு பகுதிகளும் மஹாபாரதத்தின் வனபர்வத்தில் விளக்கப்பெற்றுள்ளன. இதன் செய்யுட்களும் அதன் விளக்கங்களும் கற்போர் உள்ளம் கவரும் வண்ணம் விளக்கப்பெற்றுள்ளன. ஈண்டு அத்தகைய செய்யுட்களின் சில பகுதிகளையும் காஞ்சி கைலாயநாதர் ஆலயத்துச் சிற்பத்தொகுதியோடான ஓப்பீட்டையும் முன்வைத்து என்னுடைய சில கருத்துக்களைப் பகிர விழைகிறேன்.
மஹாபாரதம் அர்ஜுனன் தனது தவத்திற்காகப் புறப்படும் போது ஆயுதங்களோடேயே சென்றான் என்று கூறுகிறது.
தி³வ்யம்ʼ தத்³த⁴னுராதா³ய க²ட்³க³ம்ʼ ச புருஷர்ஷப⁴:|
மனிதர்களில் ஏறு போன்ற அவன் தெய்வத் தொடர்புடைய வில்லையும் வாளையும் கொண்டு சென்றான். வேடவடிவில் வந்த சிவபெருமானோடு பேசும் தறுவாயிலும் அவன் தவக்காலத்திலும் காண்டீவத்தை வைத்துக் கொண்டிருந்தமையைக் குறிப்பிடுகிறான்.
கா³ண்டீ³வமாஶ்ரயம்ʼ க்ருʼத்வா நாராசாஶ்சாக்³னிஸன்னிபா⁴ன்|
நிவஸாமி மஹாரண்யே த்³விதீய இவ பாவக: ||
இந்தப் பெருவனத்தில் காண்டீவத்தையே புகலாக வைத்துக் கொண்டும் நெருப்பிற்கிணையான அம்புகளையும் கொண்டு இரண்டாவது அக்னியைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அடுத்த குறிப்பும் அவன் வில்லையும் வாளையும் கொண்டு இறைவனைத் தாக்கியமையைக் குறிப்பிடுகிறது.
ஸம்ப்ராயுத்⁴யத்³த⁴னுஷ்கோட்யா கௌந்தேய: பரவீரஹா|
தத³ப்யஸ்ய த⁴னுர்தி³வ்யம்ʼ ஜக்³ராஹ கி³ரிகோ³சர: ||
ததோ(அ)ர்ஜுனோ க்³ரஸ்தத⁴னு: க²ங்க³பாணிரதிஷ்ட²த|
யுத்³த⁴ஸ்யாந்தமபீ⁴ப்ஸன்வை வேகே³னாபி⁴ஜகா³ம தம் ||
ஆகவே அர்ஜுனன் தவமியற்றும் போதும் வில்லும் வாளும் இரு அம்பறாத்தூணிகளும் கொண்டிலங்கியமை தெளிவாகிறது.
இப்போது வேடவடிவில் வந்த இறைவனோடு உடன் வந்தவர்களைப் பற்றிய குறிப்பைக் காண்போம்.
கைராதம்ʼ வேஷமாஸ்தா²ய காஞ்சனத்³ருமஸன்னிப⁴ம்|
விப்⁴ராஜமானோ வபுஷா கி³ரிர்மேருரிவாபர: ||
ஶ்ரீமத்³த⁴னுருபாதா³ய ஶராம்ʼஶ்சாஶீவிஷோபமான்|
நிஷ்பபாத மஹார்சிஷ்மாந்த³ஹன்கக்ஷமிவானல: |
தே³வ்யா ஸஹோமயா ஶ்ரீமான்ஸமானவ்ரதவேஷயா|
நானாவேஷத⁴ரைர்ஹ்ருʼஷ்டைர்பூ⁴தைரனுக³தஸ்ததா³ ||
கிராதவேஷஸஞ்ச²ன்ன: ஸ்த்ரீபி⁴ஶ்சாபி ஸஹஸ்ரஶ:|
அஶோப⁴த ததா³ ராஜன்ஸ தே³ஶோ(அ)தீவ பா⁴ரத |
இறைவன் வேடவடிவம் தாங்கி தங்க மரத்தையொத்த தனது உடலால் மற்றொரு மேருவைப் போல இலங்கினான்.திருவுடைய வில்லையும் பாம்புகளையொத்த அம்புகளையும் ஏந்தி நெருப்பைப் போலத் திகழ்ந்தான். உமையோ அதே வேடத்தோடு வந்தாள். பூதங்களும் பல்வேறு வேடங்களைத் தாங்கி வந்தன. ஆயிரக்கணக்கில் பெண்கள் பின்தொடர் அந்த இறைவன் அவ்விடத்தை அடைந்தான்.
இதிலிருந்து வேடவடிவம் தாங்கிய இறைவனை ஆயிரக்கணக்கில் பெண்களும் பின்தொடர்ந்தனர் என்பது தெளிவாகிறது.
இப்போது பகீரதனின் தவத்தைக் காண இறைவன் வந்த விதத்தைக் காண்போம்.
ஸம்ʼவ்ருʼத: பார்ஷதை³ர்கோ⁴ரைர்னானாப்ரஹரணோத்³யதை: |
பல்வேறு ஆயுதங்களைத் தாங்கியவையும் கோரமானவையுமான பூதங்கள் புடைசூழ இறைவன் வந்தான்.
அதன் பிறகு பகீரதன் வேண்ட இறைவன் கங்கையைத் தாங்க ஒப்புக் கொள்கிறான். அவருடைய ஒப்புதலைப் பெற்று கங்கையை நினைகிறான் பகீரதன். அவள் இறைவனின் நெற்றியில் மீது விழுகிறாள். வீழ்ந்த பிறகு நிலத்தில் பலவாறாக ஓடுகிறாள். அப்போது பகீரதன் இறைவனிடத்திலேயே நிற்கிறான். அவள் நிலத்தில் ஓடிய பிறகு பகீரதனை வழி கேட்கிறாள்.
ஏவம்ப்ரகாரான்ஸுப³ஹூன்குர்வதீ க³க³னாச்யுதா |
ப்ருʼதி²வீதலமாஸாத்³ய ப⁴கீ³ரத²மதா²ப்³ரவீத் ||
த³ர்ஶயஸ்வ மஹாராஜ மார்க³ கேன வ்ரஜாம்யஹம் |
ஆகவே கங்கை பூமிக்கு வந்த பிறகும் பகீரதன் இறைவனின் அருகிலேயே நின்றிருந்தமை தெளிவாகிறது. பகீரதன் வழிகாட்ட சென்ற பிறகே இறைவன் கைலை திரும்புகிறார்.
கங்காவதரணத்தைப் பார்க்க தேவர்களும், கின்னர கிம்புருஷர்களும் மற்றையோரும் இறைவன் இருக்கும்போதே பார்க்கின்றனர்.
ஆனால் அர்ஜுனன் தவத்திலோ இறைவன் சென்ற பிறகே தேவர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம்ʼ ப்ரச்யுதாமதோ² த்³ருʼஷ்ட்வா தே³வா: ஸார்க⁴ம்ʼ மஹர்ஷிபி⁴: |
க³ந்த⁴ர்வோரக³யக்ஷாஶ்ச ஸமாஜக்³முர்தி³த்³ருʼக்ஷவ: ||
மேற்கண்ட குறிப்புக்களை மனத்தில் இறுத்தி சிற்பத் தொகுதியை ஊன்றிப் பார்க்கலாம். சிற்பத்தொகுதியிலுள்ள தவமியற்றுபவர் வில்லையோ அம்பையே வாளையோ பெற்றிருக்கவில்லை. அவர் இறைவனின் அருகிலே இருக்கிறார். ஒரு நதியின் போக்கும் அருகில் காட்டப்பெற்றுள்ளது. மூவுலகிலிருந்தும் இறைவன் இருக்கும்போது பகீரதனையும் கங்கையையும் காண வருபவர்கள் காட்டப்பெற்றுள்ளனர். அர்ஜுனனை வாழ்த்த வந்த தேவர்கள் இறைவன் தன்னிடம் போந்த பிறகே வந்தனர் என்பதும் ஈண்டு மறுபடியும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே ஈண்டு குறிப்பிடப்பெற்ற சிற்பத்தொகுதி பகீரதன் அர்ஜுனன் அல்லன் என்பது தெளிவாகிறது. மேலும் அர்ஜுனன் தவம் புரிந்த இடத்தை வர்ணித்ததை விட பகீரதனின் தவத்தின்போது வர்ணித்த திக்கஜங்கள், நீர்க்கோழி, குஹையில் சிங்கம் ஆகியவை குறிப்பாக சிற்பத் தொகுதியில் இருப்பதைக் காணலாம்.
மேலும் காஞ்சிக் கைலாயநாதர் கோயிலில் உள்ள தேவகுலிகைகளில் உள்ள இரு சிற்பத்தொகுதிகள் இங்கே ஒப்பிடத்தக்கன. ஒன்று கிராதார்ஜுன போரையும் மற்றொன்று பகீரதன் தவத்தையும் குறிப்பிடுகிறது.
கிராதார்ஜுன சிற்பத்தொகுதி வேடவடிவில் இறைவனையும் அர்ஜுனனையும் கொண்டது. இங்கே அர்ஜுனன் கிரீடீ என்னும் பெயரை உடையவன் என்பதைக் குறிப்பிட கிரீடத்தோடு காட்டப்பெற்றிருக்கிறான். அவன் வில்லையும் ஸவ்யஸாசி என்பதைக் குறிப்பிட இரு அம்பறாத்தூணிகளையும் மஹாபாரதத்தில் குறிப்பிட்ட படியே வைத்தபடி சித்தரிக்கப்பெற்றுள்ளான். ஆனால் வாள் மட்டும் காட்டப்பெறவில்லை. மற்றைய சித்தரிப்புக்கள் மஹாபாரதத்தை ஒத்து அமைந்துள்ளன. ஆகவே பல்லவ சிற்பிகள் கிரீடத்தோடும், வில்லம்பறாதூணிகளோடுமே தவக்கோலத்திலும் அர்ஜுனனைக் காட்டுகின்றனர் என்பது தெளிவாகிறது.
அடுத்த தொகுதி பகீரதனின் தவத்தொகுதி. இந்தத் தொகுதியில் உள்ள பகீரத வடிவம் மல்லையில் உள்ள அதே வடிவத்தை ஒத்திருப்பதைக் காணலாம். இங்கே இறைவன் கங்கையைத் தாங்குவதைப் போலக் காட்டப்பெற்றுள்ளார்.
ஆகவே மல்லையிலுள்ள சிற்பத்தொகுதியை மஹாபாரத வரிகளோடும் கைலாயநாதர் சிற்பத்தொகுதியோடும் ஒப்பிட்டு பார்க்கும்போது அது பகீரதனே அர்ஜுனன் இல்லை என்பது தெளிவாகிறது.
மேலும் முற்றுப்பெறாத மல்லைத் தவச்சிற்பத் தொகுதியும் ஒரு முக்கியமான குறிப்பைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதியில் இறைவனையும் தவமியற்றுபவரையும் தவிர அனைவரின் கவனமும் நதியோட்டத்திலேயே இருப்பதைக் காணலாம். முற்றுப் பெற்ற சிற்பத்திலும் பெரும்பான்மைப் பகுதி நதியோட்டத்தையே பார்க்கிறது. இறைவன் இருக்கும்போது அவரைக் காணாமல் நதியோட்டத்தைப் பார்ப்பதிலிருந்தே இது நதியோட்டத்தை முக்யமாகக் கருதும் சிற்பதொகுதி என்பதை உறுதி செய்கிறது.
ஆகவே மல்லைச் சிற்பத் தொகுதி கங்காவதரணமே என்றும் அதிலிருப்பது பகீரதனே என்றும் அர்ஜுனன் அல்லன் என்றும் எனது முடிவை முன்வைக்கிறேன்.
படங்கள் உதவி – திருவாளர். அருண்குமார் பங்கஜ்.