இந்திய நாடகவியலின் விழுமிய வடிவாய்த் திகழும் பரதமுனிவர் நாடகவியலுக்கே இலக்கணமான நாட்ய சாஸ்த்ரத்தை இயற்றியவர். நாடகவியலுக்கே உறுபொருளாய்த் திகழும் இந்நூலில் அவருடைய தற்குறிப்புக்களைப் பற்றிய கருத்துக்கள் அதிகமாக இல்லை. அவர் ஒரு முனிவர் என்பதும் அவருடைய காலம் பொயுமு இரண்டு முதல் பொயு இரண்டாகலாம் என்பதும் மட்டுமே அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆயினும் அவருடைய பிறப்பிடத்தைப் பற்றிய எவ்விதக் கருத்தும் இல்லை. ஈண்டு அவருடைய நாட்ய சாஸ்த்ரத்தில் கிடைக்கும் ஒரு குறிப்பை வைத்து அவருடைய பிறப்பிடத்தைக் கண்டறிய முயல்கிறேன்.
நாட்ய சாஸ்த்ரத்தின் மூன்றாம் அத்யாயம் ரங்கதைவத பூஜனம் என்னும் தலைப்பு கொண்டது. அதில் கலைமகளுக்கான பலியை அளிக்கும் போது கூறத்தக்க மந்த்ரமாக பின்வருவது அமைந்துள்ளது.
देवि देवमहाभागे सरस्वति हरिप्रिये ।
प्रगृह्यतां बलिर्मातर्मया भक्त्या समर्पितः ॥ ५२॥
தே³வி தே³வமஹாபா⁴கே³ ஸரஸ்வதி ஹரிப்ரியே |
ப்ரக்³ருʼஹ்யதாம்ʼ ப³லிர்மாதர்மயா ப⁴க்த்யா ஸமர்பித: || 52||
ஸரஸ்வதி தேவியே, தேவனின் பெருமை கொண்டவளே, ஹரியின் விருப்பத்திற்குகந்தவளே, என்னால் பக்தியோடு படைக்கப்பெற்ற இந்தப் பலியை ஏற்றுக் கொள்வாயாக.
என்பது இதன் பொருள். இங்கு கலைமகள் ஹரிப்ரியா – திருமாலின் கிழத்தி என்று கூறப்பெற்றிருக்கிறாள். இங்கேதான் கேள்வி எழுகிறது. கலைமகள் நான்முகன் கிழத்தி என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இங்கே பரதரோ கலைமகளை திருமாலின் கிழத்தி என்கிறார். இதற்கான விடை எளிதெனினும் அதுதான் பரதரின் பிறப்பிடத்தைக் காண அடிகோலாகிறது.
கலைமகள் திருமாலின் கிழத்தி என்னும் செய்தி ப்ரஹ்ம வைவர்த்த புராணத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப் புராணம் கிழக்கிந்திய பகுதியில் எழுதப்பெற்றிருக்க வேண்டுமென்பது ஆய்வாளர் கருத்து. அதன் ப்ரக்ருதி கண்டத்தில் ஆறாம் அத்யாயம் இந்தச் செய்தியைத் தருகிறது.
லக்ஷ்மீஸ்ஸரஸ்வதீ க³ங்கா³ திஸ்ரோ பா⁴ர்ய்யா ஹரேரபி ||
ப்ரேம்ணா ஸமாஸ்தாஸ்திஷ்ட²ந்தி ஸததம்ʼ ஹரிஸன்னிதௌ⁴ || 17 ||
சகார ஸைகதா³ க³ங்கா³ விஷ்ணோர்முக²னிரீக்ஷணம்||
ஸஸ்மிதா ச ஸகாமா ச ஸகடாக்ஷம்ʼ புன: புன:|| 18||
விபு⁴ர்ஜஹாஸ தத்³வக்த்ரம்ʼ நிரீக்ஷ்ய ச முதா³ க்ஷணம் ||
க்ஷமாம்ʼ சகார தத்³த்³ருʼஷ்ட்வா லக்ஷ்மீ நைவ ஸரஸ்வதீ|| 19||
போ³த⁴யாமாஸ தாம்ʼ பத்³மா ஸத்த்வரூபா ச ஸஸ்மிதா ||
க்ரோதா⁴விஷ்டா ச ஸா வாணீ ந ச ஶாந்தா ப³பூ⁴வ ஹ || 20 ||
திருமாலுக்கு லக்ஷ்மீ, கங்கை, ஸரஸ்வதி ஆகியோர் மனைவியராக இருந்தனர். அவர்கள் அவர்மீது நிகரான அன்பு வைத்திருந்தனர். ஒருமுறை கங்கை இறைவனின் முகத்தையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இறைவனும் அவளைக் கண்டு புன்னகை புரிந்தார். இதைக் கண்ணுற்ற லக்ஷ்மி பொறுத்துக் கொண்டாள். ஆனால் ஸரஸ்வதியோ பொங்கியெழுந்தாள். அவள் கணவன் மீது நிந்தைக் கணைகளைத் தொடுத்தாள். அவர் பக்கசார்புடையவர் என்றும் லக்ஷ்மீ மற்றும் கங்கையின் மீதே அன்பைப் பொழிவதாகவும் தன்மீது பாராமுகமாக இருப்பதாகவும் கூறினாள். அவரை ஸத்வகுணர் என்று கூறுவோர் முட்டாள்கள் என்றும் கூறினாள்.
இவற்றைக் கேட்டு நொந்த இறைவன் அவ்விடம் விட்டு வெளியேறினார். பிறகு அங்கே சக்களத்திகளுக்குள் சண்டை நிகழ்ந்தது. சண்டையின் போது அமைதியாக இருந்த அலைமகளைக் கலைமகள் மரம் போல் நின்றமையால் மரமாகப் போகும்படி சபித்தாள். கங்கையை ஆறாகப் போகும்படி சபித்தாள். அப்போதும் அலைமகள் சினவாமல் இருவரையும் அமைதிப் படுத்தினாள். கங்கையோ கலைமகளையும் ஆறாகப் போகும்படி சபித்தாள். அதன் பிறகு அங்கே வந்த திருமால் கங்கையையும் ஸரஸ்வதியையும் ஆறாக மாறிய பின்னர் சாபத்தின் கெடு முடிந்த பின்னர் சிவலோகத்திற்கும் ப்ரஹ்மலோகத்திற்கும் சென்று சிவபெருமானுக்கும் நான்முகனுக்கும் மனைவியாகுமாறு கூறினார். அலைமகளோ துளசியாக மாறி சாபநாள் முடிந்தபிறகு மீண்டும் வைகுண்டம் எய்துமாறு பணித்தார்.
இவ்விதம் ப்ரஹ்மவைவர்த்த புராணத்தில் கலைமகள் திருமாலுக்கு மனைவியான செய்தி தரப்பெற்றுள்ளது. இந்தப் புராணம் கிழக்கிந்தியப் பகுதியிலிருந்து உருவானதாகக் கருதப்பெறுகிறது. குறிப்பாக பிஹார் அல்லது வங்கத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பெறுகிறது. கிழக்கிந்திய பகுதியில் கிடைக்கும் திருமாலின் வடிவங்கள் அலைமகளையும் கலைமகளையும் துணையாகக் கொண்டே கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிலை வடிவங்கள் பிஹார், வங்கம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலிருந்து கிடைத்துள்ளன. சில வடிவங்கள் இங்கே பார்வைக்காக.
ஆகவே திருமாலின் மனைவியாகக் கலைமகள் கருதப்பெற்ற இடத்தைச் சார்ந்தவராக பரதர் இருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. கிழக்கிந்திய பகுதியில் இவ்விதம் கிடைப்பதால் அவர் கிழக்கிந்திய பகுதியைச் சேர்ந்தவராதல் கூடும் என்று கருதுதல் தவறாகாது.
மேலும் அவரை நாடகம் நிகழ்த்திக் காட்டுமாறு இறைவன் பணிக்குங்கால் முப்புரம் எரித்த புராணச் செய்தியையே காட்டுகிறார். இந்தப் புராணச் செய்தியும் த்ரிபுரா மாநிலத்தின் புராணச்செய்தியோடு ஒத்ததாக அமைந்துள்ளது. இதுவும் அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.